tamilnadu

img

ரபேல் போர்விமான கொள்முதல் முறைகேடு வழக்கு மத்திய அரசின் ஆட்சேபணைகள் தள்ளுபடி உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுதில்லி, ஏப்.10-ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் தொடர்பாக, மத்திய அரசாங்கம் எழுப்பியபூர்வாங்க ஆட்சேபணைகளை உச்சநீதி மன்றம் நிராகரித்தது. இது தொடர்பாகத் தாக்கல்செய்யப்பட்டுள்ள மறுஆய்வு மனுக்கள் அனைத்தும் மற்றும் தி இந்து நாளிதழில் வெளியாகியுள்ள விவரங்கள் உட்பட ஊடகங் களில் வெளியான அனைத்து விவரங்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒருமனதாகத் தீர்ப்பளித்துள்ளார்கள்.ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில்ஊழல்கள் நடந்துள்ளதாக பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தி இந்து நாளிதழில் என்.ராம் இது தொடர்பாக பல ஆவ ணங்களின் அடிப்படையில் ஊழலின் பல்வேறுஅம்சங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். ஆயினும் இவற்றை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்று மத்திய அரசாங்கத்தின் தரப்பில் ஆட்சேபணை செய்யப்பட்டு வந்தது.இவற்றின் மீது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வாயம் புதனன்று தீர்ப்புஅளித்துள்ளது. மத்திய அரசாங்கத்தின் தரப்பில் எழுப்பப்பட்ட பூர்வாங்க ஆட்சேப ணைகளை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தள்ளுபடி செய்தார்.“ரபேல் கொள்முதல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று ஆவணங்களின் அடிப்படையிலும் ஆய்வு செய்து தீர்ப்பளிக்க வேண்டியதும், இது தொடர்பாக அர சாங்கத்தின் தரப்பில் எழுப்பப்படும் ஆட்சேபணைகள் தள்ளுபடி செய்யப்பட வேண்டியதும் முறையாகும் என்று நாங்கள் கருதுகிறோம்,” என்று தலைமை நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

கே.எம்.ஜோசப் தனி தீர்ப்பு

தீர்ப்புரையின் முக்கிய பகுதிகளைப் படித்துக் காண்பித்த தலைமை நீதிபதி, தானும், நீதிபதி எஸ்.கே. கவுல் அவர்களும்இணைந்து இந்தத் தீர்ப்பினை எழுதி யிருப்பதாகவும், நீதிபதி கே.எம்.ஜோசப் எங்கள் கருத்துடன் உடன்பட்டிருப்பதுடன் தனியே ஒரு தீர்ப்புரையும் எழுதி யிருப்பதாகவும் கூறினார்.அவரும் நாங்கள் எடுத்தமுடிவிற்கே வந்திருக்கிறார். எனினும் வேறொரு வித்தியாசமான முறையில் அவர் அதனைச் செய்திருக்கிறார் என்றும் தலைமை நீதிபதி கூறினார். மறுஆய்வு மனுக்கள் விசாரிக்கப்படும் தேதிகள் பின்னர் முடிவு செய்யப்படும்.உச்சநீதிமன்றம் 36 ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்தது தொடர்பாக முன்பு 2018 டிசம்பர் 14 அன்று பிறப்பித்திருந்த தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

து. ராஜா

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் து.ராஜா. “ரபேல் கொள்முதல் முறைகேடு குறித்து மோடி பதில் சொல்லி யாக வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பு மோடி அரசுக்குக் கிடைத்த மிகப்பெரிய அடி,” என்றார்.

மாயாவதி

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

“பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ராஜினாமா செய்திட வேண்டும். மோடி அரசாங்கம், தேசப் பாதுகாப்பு என்ற போர்வையில் இதில் உள்ள ஊழல்களை மறைத்திட முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அதில் தோல்வியடைந்துவிட்டது. இது தொடர்பாக நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அள்ளிவிட்ட பொய்களுக்காகவும் பிரதமர் மன்னிப்பு கோர வேண்டும்.” இவ்வாறு மாயாவதி தெரிவித்துள்ளார்.    


நாட்டின் பாதுகாப்பில் சமரசம் சீத்தாராம் யெச்சூரி கருத்து

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ள மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தன் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:“ரபேல் ஒப்பந்தத்தில் தாங்கள் சுத்தமானவர்கள் (உடநயn உhவை) என்று உச்சநீதிமன்றமே சான்றிதழ் வழங்கிவிட்டதுபோல், பாஜகவினர் பொய்யாகப் பீற்றிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அதில் நடைபெற்றுள்ள ஊழல்கள் குறித்த விவரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. நரேந்திர மோடிதலைமையிலான அரசாங்கத்தைப்போல மிகவும் ஊழல் மிக்கதும், நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டிருக்கின்றதுமான அரசாங்கம், இந்தியாவின் வரலாற்றிலேயே வேறெதுவும் கிடையாது.மிகவும் முக்கியமானதொரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் தன் கூட்டுக்களவாணி முதலாளிக்கு உதவிட வேண்டும் என்பதற்காக ஊழல் செய்து நாட்டின் பாதுகாப்புடன் மோடியும் அவருடைய அரசாங்கமும் சமரசம் செய்துகொண்டிருக்கிறது. இது தொடர்பாக மக்களுக்குப் பதில் சொல்வதிலிருந்து நழுவ முயன்றார்கள், நாடாளுமன்றக் கூட்டு விசாரணைக் குழுவினை ஏற்க மறுத்தார்கள், மத்திய அரசுக் கணக்குத் தணிக்கைத் தலைவரிடம் (சிஏஜி-யிடம்) அவற்றின் விலைகளை மறைத்தார்கள். முதலில் உச்சநீதிமன்றத்தில் தவறான தகவல்களை அளித்து உச்சநீதிமன்றத்தைத் திசைதிருப்பி னார்கள். பின்னர் உச்சநீதிமன்றத்தில் எவ்விதமான விசாரணை வந்தாலும் அதனை தள்ளுபடி செய்வதற்கு முயற்சித்தார்கள்.”இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


(ந.நி.)


;