tamilnadu

img

செப்டம்பர் 25.... விவசாயிகளின் ஒன்றுபட்ட எதிர்ப்பியக்கத்திற்கு மத்தியத் தொழிற்சங்கங்கள் ஆதரவு

புதுதில்லி/சென்னை:
அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக நாடு தழுவிய அளவில் எதிர்ப்பியக்கங்கள் நடத்திடத் திட்டமிட்டிருப்பதற்கு, சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உட்பட மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் துறைவாரி சம்மேளனங்கள் தங்கள் முழு ஆதரவினைத் தெரிவித்துக்கொண்டுள்ளன.பாஜக அரசாங்கத்தின் மக்கள் விரோத, விவசாயிகள் விரோத நாசகரச் சட்டங்களை அடாவடித்தனமாக எதேச்சதிகாரமான முறையில் நிறைவேற்றியதைக் கண்டித்து, அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு செப்டம்பர் 25 அன்று நாடுமுழுவதும் ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்டு மாபெரும் வகையில் ஆர்ப்பாட்டங்களை நடத்திட முடிவு செய்துள்ளன. நாசகர மின்சாரத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாமும் இவர்களுடன் இவ்வெதிர்ப்புப் போராட்டத்தில் இணைந்து கொள்கிறோம்.   மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் துறைவாரி சங்கங்களின் சம்மேளனங்களில் இணைந்துள்ள அனைத்துத் தொழிலாளர்களும், ஊழியர்களும் இப்போராட்டங்களில் முழுமையாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று அறைகூவல் விடப்பட்டுள்ளது.

சிஐடியு அழைப்பு
தமிழகத்தில் செப்.25 போராட்டத்தை மாபெரும் வெற்றி பெறச் செய்யுமாறு சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்,“நாடாளுமன்ற கூட்டத்தில்  விவசாயத்தொழில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வை நாசமாக்கும் வகையில்  மூன்று மசோதாக்களை  நிறைவேற்றியுள்ளது. விவசாயத்துக்கான இலவச மின்சாரத்தை பறிக்கும் வகையில் மின்சார சட்ட திருத்த மசோதாவையும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நாட்டில் ஒட்டுமொத்த விவசாயிகளை பாதிக்கும்இந்த சட்ட   மசோதாக்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பேசிய அதிமுக வாக்கெடுப்பில் ஆதரித்து வாக்களித்திருப்பது விவசாயிகளுக்கு செய்திருக்கும்  துரோகம் மன்னிக்க முடியாததாகும்.எதிர்க்கட்சிகளின் வாக்கெடுப்பு கோரிக்கையை நிராகரித்து குரல் ஓட்டின் மூலம் மசோதாக்கள் நிறைவேற்றி நாடாளுமன்ற ஜனநாயகம், மரபுகள் அனைத்தையும் பாஜக அரசு குழிதோண்டி புதைத்துள்ளது.நாடாளுமன்ற ஜனநாயகத்தை நிலைநாட்டவும், விவசாயிகள் மீதான பன்முனை தாக்குதல்களை எதிர்த்தும் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தியும் செப்டம்பர் 25 அன்று   நாடு தழுவிய போராட்டத்திற்கு விவசாயிகள் அமைப்புகள் அறைகூவல் விடுத்துள்ளன. தமிழகத்தில் நடைபெறவுள்ள போராட்டங்களில் சிஐடியு பங்கேற்று ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.சிஐடியு மாவட்டக்குழுக்கள், மாநில சங்கங்கள் மாவட்டங்களில் நடைபெறும் போராட்டத்தில் கணிசமான எண்ணிக்கையில் பங்கேற்று போராட்டம் வெற்றிபெற செய்திட வேண்டுமென சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழுவின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” எனக்கூறியுள்ளார்.

விவசாயத் தொழிலாளர்கள்  அணி திரள அழைப்பு
விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் முற்றிலும்பாதகமான வகையில் மத்திய பாஜக அரசால் நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி செப்டம்பர் 25 அன்று நாடு முழுவதும் விவசாயிகள் நடத்தும் சாலைமறியல் போராட்டத்தில் விவசாயத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்று ஆதரவளிக்க வேண்டுமென அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில், மாநிலத் தலைவர் ஏ.லாசர் முன்னாள் எம்எல்ஏ, பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளனர்.

மலைவாழ் மக்கள் சங்கம் பங்கேற்பு
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.டில்லிபாபு, மாநில பொதுச்செயலாளர் இராசரவணன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், “வேளாண் விளை பொருள் வணிக ஊக்குவிப்புச் சட்டம், விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் ஒப்பந்தபாதுகாப்பு சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 இந்த மூன்று சட்டங்களுமே ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. இந்த சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் இப்போது விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இருக்கும் குறைந்தபட்ச பாதுகாப்பு கூட இருக்காது. முழுக்கவும் கார்ப்பரேட் கம்பெனிகள் இந்திய விவசாயத்தை கபளீகரம் செய்யவே வழிவகுக்கும். இந்திய மக்களுக்கான உணவு பாதுகாப்பில் மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்படும். எனவே, இந்த மூன்று சட்டங்களையும் எதிர்த்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு செப்டம்பர்-25ந்தேதி இந்திய நாடு முழுவதும் பந்த் நடத்த அறைகூவல் விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள செப்டம்பர் 25ஆம் தேதி மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் தமிழகம் முழுவதும் பங்கேற்கும்” எனக் கூறியுள்ளனர்.

;