tamilnadu

img

மலக்குழி சாவுகள் இந்தியாவைத் தவிர வேறெங்கும் இல்லை....எவ்வளவு காலம்தான் தலித் மக்களை கழிவுநீர்த் தொட்டியில் கொல்லப் போகிறோம்?

புதுதில்லி:
நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், சாதியப் பாகுபாடு இன்னும் நாட்டில் தொடர்வதாகவும், கழிவுநீர்த் தொட்டி சுத்தம்செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு, இப்போதும் ஒரு குறிப்பிட்ட சாதியினரை மட்டுமே சமூகம் பயன்படுத்துகிறது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

மனிதர்களை கழிவுநீர்த் தொட்டிக்கு அனுப்பி விஷவாயுவில் இறக்கச்  செய்யும் கொடுமை, இந்தியாவைத் தவிர உலகில் வேறெங்கும் இல்லை என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.எஸ்.சி.- எஸ்.டி. வன்கொடுமை தண்டனைச் சட் டத்தை சீராய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை குறித்த மனுவை, நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, பி.ஆர்.காவை ஆகியோர் அடங்கிய அமர்வு, விசாரித்து வருகிறது. புதனன்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து, நீதிபதி அருண்மிஸ்ரா வேதனையுடன் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:

“சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் சாதிய பாகுபாடு இன்னும் நாட்டில் தொடர்கிறது. கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு இன்னும் குறிப்பிட்ட சாதியினரை மட்டுமே சமூகம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள்தான் என்று கூறுகிறோம். ஆனால், அவர்கள் அனைவருக்கும் சமமான உரிமைகள், வசதிகள் அளிக்கப்படுகிறதா? கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கும் தொழிலாளர்களுக்கு மட்டும்- பாதுகாப்பு கவசமான முகமூடி, ஆக்சிஜன் சிலிண்டர், ஏன் வழங்கப்படுவதில்லை? என்ற கேட்க விரும்புகிறேன். கழிவுநீர்த் தொட்டிக்குள் மனிதர்களை அனுப்பி விஷவாயுவில் இறக்கச் செய்யும் அவலம் உலகில் எந்த நாட்டிலும் இல்லை; இந்தியாவில் மட்டுமே ஒவ்வொரு மாதமும் 4 முதல் 5 பேர் கழிவுநீர்த் தொட்டியில் சிக்கி இறக்கிறார்கள்.போதுமான பாதுகாப்புக் கவசங்கள் இல்லாமல், கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்யுமாறு, குறிப்பிட்ட சமூகத்தினரை வற்புறுத்துவது மனிதத் தன்மையற்றது; நாட்டில் தீண்டாமை மறைமுகமாக இருக்கிறது என்பதைத்தானே இது காட்டுகிறது.இந்திய அரசியலமைப்புச் சட்டம், தீண்டாமையை ஒழித்து விட்டது; ஆனால், கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் தொழிலாளியுடன் கை குலுக்குகிறோமா? என்றால், இல்லை என்பதுதானே பதிலாக இருக்கிறது; இது எவ்வளவு பெரிய கொடுமை.”இவ்வாறு நீதிபதி அருண் மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.

;