tamilnadu

img

உண்மையான கதாநாயகிகளின் நடைபயணம்

புதுச்சேரி:
போதைக்கு எதிராகவும் வன்முறைக்கு எதிராகவும் உண்மையான கதாநாயகிகள் நடைபயணம் மேற்கொண்டுள்ளதாக மாதர் சங்கத்தின் நடைபயணத்தை வரவேற்றுப் பேசுகையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டார்.

வன்முறையற்ற, போதையற்ற தமிழகம் மற்றும் புதுச்சேரியை உருவாக்கிட மேற்கொண்டுள்ள அனைத்திந்திய ஜனநாயக  மாதர் சங்கத்தினர் திருவண்ணாமலை, வடலூர் ஆகிய இடங்களில் இருந்து   நடைபயணமாக சென்னை கோட்டை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.  வடலூரில் இருந்து புறப்பட்ட நடைபயணக்குழு  கடலூர் வழியாக வியாழனன்று (நவ. 28) புதுச்சேரிக்கு வந்தடைந்தது. மாதர்சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்திதலைமையில் வந்த பயணக் குழுவிற்கு புதுச்சேரி இந்திரா காந்தி சிலை அருகே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள்சங்கத்தின் சார்பில்  தலைவர் வீர.அரி கிருஷ்ணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கவுரவத்தலைவர் ச.தமிழ்ச்செல்வன், பயணக்குழுவினருக்கு சிற்றுண்டி கொடுத்து வரவேற்றார்.

புதுமைப்பெண்கள்
பின்னர் ச.தமிழ்ச்செல்வன் பேசுகையில், “பாரதி வாழ்ந்த புதுச்சேரியில் புதுமைப் பெண்களாக, உண்மையான கதாநாயகிகளாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் விளங்குகிறது. இன்றைக்கு பெண்கள் மீது நடைபெறும் வன்முறையால்  குடும்பமே பாதிக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியை சேர்ந்த வினோதினி என்ற மாணவி மீது ஆசிட் வீச்சு நடைபெற்றது. அந்த பெண் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது தாய், தந்தையும் தற்போது இறந்துவிட்டனர். அதேபோல் பார்வதி ஷா என்ற பெண்ணும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். இதனை எதிர்த்து போராடிய இயக்கம் மாதர் சங்கம்தான்” என்றார்.

கொப்பளங்கள் ஏற்பட்டாலும்...
பி.சுகந்தி பேசுகையில், நாடு முழுவதும் பெண்கள், பெண் குழந்தைகள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. மத்திய - மாநில அரசுகள் இத்தகைய வன்முறைகளை தடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது. ஆளும் அரசால் தொடர்ந்து பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதை எதிர்த்துத் தான் நடைபயணத்தை மேற்கொண்டுள்ளோம். எங்கள் பிரச்சாரத்திற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்புள்ளது. டிசம்பர் 4 வரை 10 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்டுள்ள எங்களது கால்களில் வெடிப்புகளும், கொப்பளங்களும் ஏற்பட்டாலும் கூட சென்னையை அடைந்தே  தீரு வோம்” என்றார்.

தமுஎகச மாநிலப் பொருளாளர் சு.ராமச்சந்திரன், புதுச்சேரி முஎகச செயலாளர் உமாஅமர்நாத், பொருளாளர் கலியமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் தவில் விநாயகம், எழுத்தா ளர்கள் சீனு.இராமச்சந்திரன், வில்லியனூர் பழனி  உட்பட ஏராளமான எழுத்தாளர்கள், கவிஞர்கள் கலந்து கொண்டனர்.மூலகுளத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் சிஐடியு பிரதேசச் செயலாளர் சீனுவாசன், பொருளாளர் பிரபுராஜ், நிர்வாகிகள் குணசேகரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ரெட்டியார் பாளையம் கம்பன்நகரில் நடைபெற்ற வரவேற்புக்குழு கூட்டத்தில்இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் சரவணன், ஆனந்த், ஜெயப்பிரகாஷ், பிரவீன், வந்தனா, செம்மலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

;