tamilnadu

img

முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உதயம் - எஸ்.ஏ.பெருமாள்

கம்யூனிஸ்ட் இயக்கமும் - கலை இலக்கிய உலகமும் - 13

இந்திய விடுதலைப்  போரில் கலை இலக்கியவாதிகளின் பங்கு மகத்தானது. காங்கிரஸ், பின்பு காங்கிரஸ் சோசலிஸ்ட், பின்பு கம்யூனிஸ்ட் எழுத்தாளர்களாக மாறியபின் ‘முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ 1936-ல் உதயமானது. பிரிட்டிஷ் இந்தியாவில் இன்றைய இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இருந்த படைப்பாளிகள் ஏகாதிபத்திய எதிர்ப்பு, இடதுசாரி அரசியலைக் கொண்டு எழுதிவந்தனர். எந்த வேறுபாடுகளும் இல்லாத மனிதத்துவம்; சமூக அநீதிகள், சமூகத்தின் பிற்போக்குத்தனத்திற்கு எதிராக உருது, இந்திமொழிகளில் எழுதி மக்களை ஆவேசப்படுத்தி ஈர்த்தனர். இந்த முற்போக்கு எழுத்தாளர்கள் நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகளை எழுதிக் குவித்தனர். இவர்கள் நகரங்களில் சிறுசிறு குழுக்களாக இயங்கி வந்தனர். 1932-ல் “அங்கரே” (எரிதழல்) என்ற பத்திரிகை துவங்கப்பட்டது. இதில் சிறுகதைகள், ஓரங்க நாடகங்கள் வெளிவந்தன. முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்திற்கான முதல்விதை 1933 ஏப்ரலில் அலகாபாத்தில் ஊன்றப்பட்டது. அகமத்அலி, மமுதுஸ் ஜாபர் தலைமையில் இது தொடங்கப்பட்டது. சஜ்ஜத் ஜாகீர், ரஷீத் ஜெஹன் முக்கிய உறுப்பினர்கள். இவர்களில் பெரும்பாலோர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள்.

இந்தப் படைப்பாளிகளுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் பி.சி.ஜோஷி நெருக்கமான உறவில் இருந்தார். 1935-ல் லண்டனில் எழுத்தாளர்கள் கூடி இந்திய முற்போக்கு எழுத்தாளர் இயக்கம் துவங்க முடிவு செய்தனர். பின்பு கல்கத்தாவிலும் கூடிதிட்டமிட்டார். தோழர் பி.சி.ஜோஷியின் முன்முயற்சியால் லக்னோ நகரில் 10.4.1936 -ல் முற்போக்கு எழுத்தாளர் மாநாடு நடைபெற்றது.  ஹமீத் அக்தர், பைஸ் அகமதுபைஸ், அக்மத் நதீம், சதத் ஹாசன் மன்ட்டோ, இஸ்மத் சவுக்தாய் போன்ற அன்றைய பிரபல எழுத்தாளர்கள் இந்த அமைப்பை ஆதரித்து இணைந்தனர். லண்டனில் நடந்த கூட்டத்திலேயே இந்த அமைப்பிற்கு  உருது மொழியில் “அஞ்சுமான் தரக்கி பசந்த் முசான்னிபின்” என்ற பெயர் சூட்டப்பட்டது. டாக்டர் முல்க்ராஜ் ஆனந்த், டாக்டர் ஜோஷி பர்ஷத், பிரமோத் ரஞ்சன்குப்தா, டாக்டர் தஸீர், சஜ்ஜத் ஜாகீர் ஆகியோர் மாநாட்டுக்கான முயற்சிகளில் இறங்கினர்.

‘முற்போக்கு’ என்ற சொல்

19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில், ஒதுக்கப்பட்டவர்கள் முன்னேற வேண்டும்; சமூக வளர்ச்சிக்குத் தேவையான அறிவியல், தொழில் நுட்பம் வளர வேண்டும் என்ற போர்க்குரல் எழுந்தது. பழைய பாதையிலிருந்து மாறி அனைத்துத் துறைகளிலும் பிரிட்டிஷ் சமூகம் மாறவேண்டும் என்ற குரலாகவே “PROGRESS and PROGRESSIVE” என்ற சொற்கள் முன்னுக்கு வந்தன.   பிரிட்டனில் மாற்றம், வளர்ச்சி நோக்கிய போர்க்குரலாகவே “முற்போக்கு” என்ற சொல் தோன்றியது. அது விடுதலைக்காகவும், ஜனநாயகத்திற்கும் உருவான சொல்லாகும். எனவே அதே கண்ணோட்டத்தில் இந்திய எழுத்தாளர்களும் ‘முற்போக்கு’ என்ற  சொல்லையே ஏற்றுக்கொண்டனர். லக்னோ நகரில் 1936-ல் நடந்த மாநாட்டுக்கு உருது மற்றும் இந்தி இலக்கியத்தின் முன்னோடியான முன்ஷி பிரேம்சந்த் தலைமையேற்றார். 

ரவீந்திர நாத் தாகூர், சரோஜினிநாயுடு, மௌல்வி அப்துல் ஹக், சிராக் ஹசன் ஹஸ்ரத், அப்துல் மஜீத்  சாலிக், மௌலானா ஹஸ்ரத் மொஹானி, ஜோஷ் மல்லிகாபதி, பேராசிரியர் அகமது அலி, டாக்டர் அக்தர் உசேன் ராய்பூரி, பைஸ் அகமது பைஸ், பேரா.மஜ்னுன் கோரக்பூரி, டாக்டர் ரஷீத் ஜஹான், மகமூத் டஸ் ஜாபர், பேரா.மன்சூர் உசேன், டாக்டர் அப்துல் அலீம் ஆகிய பிரபல எழுத்தாளர்கள், முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்திற்கு ஆக்கமும், ஊக்கமும் தந்து மாநாட்டிலும் பங்கேற்றனர். ஏகாதிபத்திய அடிமைத்தளையிலிருந்து விடுதலை, நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்துவது, சாமானிய மக்களின் ஆட்சியைக் கொண்டு வருவது ஆகிய லட்சியங்கள் மாநாட்டில் பிரகடனம் செய்யப்பட்டன. துயரங்களில் ஆழ்ந்து கிடக்கும் மக்களுக்கு சரியான பாதை காட்டும் கலை இலக்கியங்களைப் பிரசவிக்குமாறு படைப்பாளிகளுக்கு அறைகூவல் விடப்பட்டது.

எத்தனையெத்தனை எழுத்தாளர்கள்!

மாநாட்டில் முன்ஷி பிரேம்சந்த் தலைவராகவும் சஜ்ஜத் ஜாகீர் பொதுச்செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டு முடிவுகளின் படி இயக்க உறுப்பினர்கள் தங்கள் படைப்புகளை நாவல், சிறுகதை, நாடகங்கள், கவிதைகளாக வெளியிட்டனர். அவர்களில் கிஷன் சந்தர், இஸ்மத் சுக்தாய், மன்ட்டோ, அகமது நதீம் குவாஸ்மி, அலிசர்தார் ஜாப்ரி, சிப்தே ஹாசன், எதிஷாம் உசேன், மும்தாஜ் உசேன், சாஹிர் லுதியான்வி, கைஃபி ஆஸ்மி, அலி அப்பாஸ் ஹூசைனி, மக்தூம் மொகியுதீன், பாரிக் புகாரி, காதிர் காஸ்னவி, ரசாஹம்தானி, இப்ராகிம் ஜோயோ, சோப்போ கியான் சந்தானி, ஷேக் அயாஸ், ராஜிந்தர்சிங் பேடி, அம்ரிதா பிரிதம், அலி சிக்கந்தர், ஜோ அன்சாரி, மஜாஸ் லக்னவி ஆகியோர் வலிமைமிக்க படைப்புகளை அளித்தனர். 

உருது, இந்தி மொழிகளில் வெளியான இவர்களது படைப்புகள் பல மொழி மாற்றம்  செய்யப்பட்டு மக்களைச் சென்றடைந்தன. தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தின் கிளைகளை உருவாக்குவதில் தீவிரமாய் இயங்கினர். மாநிலங்களில் கம்யூனிஸ்ட்த் தலைவர்களும் இப்பணியில் இறங்கினர். மத்திய இந்தியாவில் இந்தி எழுத்தாளர்களும்; வங்கம், கேரளா எழுத்தாளர்களும் உடனடியாக அமைப்புகளை உருவாக்கினர்.

லக்னோ நகரில் எழுத்தாளர் மாநாடு காங்கிரஸ் நகரில் இந்தியன் நேஷனல் காங்கிரஸின் மாநாட்டுக்காக அமைக்கப்பட்ட தற்காலிக தியேட்டரில் தான் நடைபெற்றது. அந்த காங்கிரஸ் நகரும் மேடையும் தனியாக உருவாக்கப்பட்டதாகும். பண்டித நேரு தலைமை தாங்கிய  மாநாட்டில் தான் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி உருவாகிப் பிரிந்தது. தலைமறைவு மற்றும் ஒடுக்குமுறைச் சூழலில் இருந்த கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் சோஷலிஸ்டுக் கட்சியில் இருந்து செயல்படத் தீர்மானித்தனர். 

அதே நகரில் அகில இந்திய விவசாய சங்கத்தின் அமைப்பு மாநாடும் நடைபெற்றது. இவ்வாறு மூன்று முக்கிய மாநாடுகள் ஒரே காலத்தில் வெவ்வேறு நாட்களில் ஒரே இடத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

... தொடரும் ...