மக்களவையில் பி.ஆர்.நடராஜன் எம்.பி., விமர்சனம்
புதுதில்லி, பிப். 3- மக்களவையில், குடியரசுத் தலைவர் உரை மீது திருத்தங்களை முன்மொழிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பி.ஆர்.நடராஜன் பேசினார். அப்போது அவர் கூறிய தாவது: மூன்று முன்னாள் முதலமைச்சர்கள் உட்பட ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் பற்றி இந்த உரையில் எதுவும் கூறப்படாதது வருத்தமளிக்கிறது. வளர்ந்து கொண்டு செல்லும் வேலையில்லா திண்டாட்டம், வேலையில்லாதோர் எண்ணிக்கை உயரும் நிகழ்வு போன்றவை பற்றியும், வேலையற்றோருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த தவறிய அரசாங்கத்தின் தோல்வி பற்றியும் இந்த உரையில் எதுவும் கூறப்படவில்லை. இந்தியப் பொருளாதார மந்தம் மற்றும் பின்னடைவால் மக்கள் சந்திக்கும் மலை போன்ற பிரச்சனைகள், துயரங்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. கேரள அரசாங்கத்திற்கு உரிமைப்படி அளிக்கப்பட வேண்டிய நிதி தேவைகள் பற்றிய எந்த தகவலும் இந்த உரையில் குறிப்பிடப்படவில்லை.
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளின் தேவை பற்றி இந்த உரையில் எதுவும் இல்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு குறிப்பாக கேரள மாநிலத்திற்கு வழங்கப்படவேண்டிய போதுமான இழப்பீட்டுத் தொகை பற்றிய எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான நடவடிக்கைகள் பற்றிய எந்த கருத்துகளும் குறிப்பிடப்படவில்லை. நாட்டில் அதிகரித்துக் கொண்டிருக்கும் சகிப்பற்ற தன்மை, அதன் காரணமாக அதிகரிக்கும் வன்முறைகள், மேலும் எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் மீதான தாக்குதல்கள்; தீவிர வலது சாரி சக்திகளால் மாணவர்கள் , பத்திரிக்கையாளர்கள் ஆகியோர் மீது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தாக்குதல்கள்; சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், ஆதிவாசிகள் ஆகியோர் மீது அதிகரித்துக் கொண்டிருக்கும் தாக்குதல்கள், அட்டூழியங்கள் மற்றும் இவைகளை கட்டுப்படுத்த எடுக்கப்படவேண்டிய உறுதியான நடவடிக்கைகள் பற்றிய எந்த விவரங்களும் இந்த உரையில் குறிப்பிடப்படாதது வருத்தமளிக்கிறது.