tamilnadu

img

சுகாதார தரவு மேலாண்மைக் கொள்கை மீது கருத்துக்கூறும் தேதியை ஒத்தி வைத்திடுக... பிரதமருக்கு சீத்தாராம் யெச்சூரி கடிதம்

புதுதில்லி
சுகாதார தரவு மேலாண்மைக் கொள்கைமீது செப்டம்பர் 3ஆம் தேதிக்குள் கருத்துக் கூற வேண்டும் என்று நிர்ணயித்துள்ள தேதியை ஒத்தி வைத்திட வேண்டும் என்று, பிரதமருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கோரியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தங்கள் அரசாங்கம், சுகாதார தரவு மேலாண்மைக் கொள்கை (Health Data Management Policy) மீது 2020 செப்டம்பர்3க்குள் கருத்துக் கூறவேண்டும் என்று கோரி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இந்த வரை வானது கடும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்று என்பதால் இது தொடர்பாக ஓர் ஆழமான விவாதம் நடத்தாமல் இக்கொள்கையை நிறைவேற்றக்கூடாது என்பதால் இந்தத் தேதி ஒத்திவைக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

விசித்திரம்
சுகாதார தரவு மேலாண்மைக் கொள்கை என்பது 2020 சுதந்திர தினத்தன்று தாங்கள் அறிவித்த தேசிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தின் (NDHM-National Digital Health Mission) ஓர் அங்கம் என்பதால், இது மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியிருக்கிறது. அரசாங்கம், ஒட்டுமொத்தமாக ஒட்டுமொத்த தேசிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தின் மீதுகருத்து கோராமல், சுகாதார தரவு மேலாண்மைக் கொள்கை மீது மட்டும் கருத்து கோரியிருப்பது விசித்திரமாக இருக்கிறது.   தேசிய டிஜிடல் சுகாதாரத் திட்டம், நாட்டின் அனைத்துக் குடிமக்களுடைய மிகவும் கூருணர்வுமிக்க தனிப்பட்ட தரவுகளைத் தொகுத்திடும் திட்டமாகும். இவ்வாறு தொகுக்கப்படும் தரவுகள் பின்னர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும், மருந்துக் கம்பெனிகளுக்கும் வழங்கப்படும். எனவே இத்திட்டமானது குடிமக்களின் தனிநபர் தரவு பாதுகாப்புகளை ஆழமானமுறையில் மீறும் ஒன்றாகும்.

கேள்விக்குறியாகும் தனிநபர் தரவு பாதுகாப்பு
2019ஆம் ஆண்டு தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டமுன்வடிவு (2019 Personal DataProtection Bill) நாடாளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டு, நிறைவேற்றப்படாது நிலுவையில் இருந்து வருகிறது. இப்போது முன்மொழியப்பட்டிருக்கும் சுகாதார தரவு மேலாண்மைக் கொள்கை இந்தச் சட்டமுன்வடிவு குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. உண்மையில், இந்த சுகாதார தரவு மேலாண்மைக் கொள்கை, மேலே கூறிய தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டமுன்வடிவின் பல ஷரத்துக்களை, முக்கியமாக தரவுகளைப் பாதுகாப்பது சம்பந்தமான ஷரத்துக்களை,  நீர்த்துப்போகச் செய்யக்கூடிய விதத்தில் அமைந்துள் ளது.

எனவே இத்தகைய சூழ்நிலைமைகளில், 2019 தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பு, மேற்கண்ட சுகாதார தரவு மேலாண்மைக் கொள்கை மற்றும் தேசிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டம் ஆகியஇரண்டையும் இறுதிப்படுத்தும் பணிகளை மத்திய அரசு ஒத்தி வைத்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

நாடாளுமன்றம் பரிசீலிக்கட்டும்
வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர், 2019 தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டமுன்வடிவை விவாதிக்கும் அதே சமயத்தில்,  இவ்விரு திட்டங்களையும் விவாதத்திற்கும் பரிசீலனைக்கும் எடுத்துக் கொள்ள வேண்டும்.நாடாளுமன்றமும், நாடாளுமன்றத்தின் நிலைக்குழு போன்ற கட்டமைப்புகளும் பரிசீலித்திடாமல் இத்தகைய திட்டங்களை அமலாக்கக்கூடாது.எனவேதான், இத்திட்டத்திற்காகக் கருத்துக்கோரும் தேதியை செப்டம்பர் 3இலிருந்து ஒத்தி வைத்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று சீத்தாராம் யெச்சூரி தனது கடிதத்தில் கோரியுள்ளார்.(ந.நி.)

;