மும்பை ஐ.ஐ.டி-யின் 57ஆம் பட்டமளிப்பு விழாவில் கடந்த மாதம் 10 ஆம்தேதி உரையாற்றிய மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், உலகின் ஒரே அறிவியல் மொழி சமஸ்கிருதம்தான் என்று திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார். பா,ஜ,க-வின் முக்கிய பொறுப்பாளர்களும், அமைச்சர்களும் அவ்வப்போது இது போன்ற உண்மையற்ற பொய்சரடுகளைச் சிறிதும் கூச்ச நாச்சமின்றித் தொடர்ந்து அவிழ்த்து விட்டுக் கொண்டே வருகிறார்கள். இதில் அவர்கள் தனிப்பிறவிகள்; தலைமை அமைச்சர் மோடியே ஒருமுறை விநாயகப் பெருமான் உருவ அமைப்பை முன்னிட்டுப் பேசியபோது, மனித உடலில் யானையின் முகத்தைப் பொருத்தியிருப்பதால், அக்காலத்திலேயே ஃபிளாஸ்டிக் சர்ஜரி பற்றி நம்மவர்கள் நன்கு தெரிந்திருந்தார்கள் என்று கூறியிருந்தார். இவையெல்லாம் எங்கோ பேசிய பேச்சுக்கள் அல்ல, அமைச்சர் போக்ரியால் பேசியது பொறியியல் பல்கலைக்கழகத்தில், பிரதமர் மோடி பேசியது அறிவியல் மருத்துவ மாநாட்டில், பல்கலைக்கழகங்களை, அறிவியல் அரங்குகளை, இவர்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் ; எவ்வாறு அழைத்துச் செல்கிறார்கள் என்பதற்கு இவையே அத்தாட்சி.
இவைகள் இருக்கட்டும் மத்திய அமைச்சர் போக்ரியால் பேச்சுக்கு வருவோம். அவர் பேச்சில் உண்மையும் இல்லை, புரிதலும் இல்லை, ஜனநாயகமும் இல்லை, உலகின் அறிவியல் மொழிகளில் சமஸ்கிருதமும் ஒன்று என்று கூறியிருந்தாலாவது அதனை ஓரளவு யோசிக்கலாம். ஆனால் அவர் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா? உலகின் ஒரே அறிவியல் மொழி சமஸ்கிருதம் என்று கூறியுள்ளார். உலகின் எந்த மொழியும் அந்தப் பெருமையை அடைந்துவிடக் கூடாது என்பதுதானே அவரது பெருவிருப்பம், எல்லாப் பெருமையும் புகழும் அம்மொழிக்குத்தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அம்மம்மா! எவ்வளவு பேராசை! எவ்வளவு சுயநலம்! அதில் அவர் அவ்வளவு ஜாக்கிரதையாக உள்ளார். இந்தியாவிலேயே சமஸ்கிருதம்தான் ஒரே அறிவியல் மொழியென்று கூற நாணி, “உலகிலேயே” என்று கூறியிருப்பதில் அவரது அடாவடித்தனமும், சர்வாதிகாரப்போக்கும் முண்டியடித்து வெளிப்பட்டுள்ளன. இப்போது அவரது கூற்று எத்துணை உண்மை என்பதை இனி நோக்குவோம்.
சமஸ்கிருதத்தில் பரந்து விரிந்த புலமை கொண்டவர் இராஜாராம் மோகன்ராய் ஆவர். அவர் பன்மொழி அறிஞர், உருது, அரபு, பாரசீகம் போன்ற மொழிகளையும் ஆழ்ந்து கற்றிருப்பதுடன், பௌத்தம், சமணம், இஸ்லாம், கிருத்துவம் போன்ற சமயங்களையும் ஆழக்கற்றவர். வேதங்களையும், உபநிடதங்களையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர். சமஸ்கிருத்தை வேர் முதல் உச்சிவரை உணர்ந்தவர். சமஸ்கிருதம், பெரும் இலக்கியங்களையும், இதிகாசங்களையும் பெற்றிருந்தாலும், அதன் சமுதாயப் பலன் என்னவென்பதை அவர் அடையாளம் காட்டியிருப்பதுதான் மிக முக்கியமானது. அவர் காலத்தில் வங்காளத்தில், கிழக்கிந்தியக் கம்பெனியார் சமஸ்கிருதப் பள்ளிகளைக் கூடுதலாகத் திறக்கத் திட்டமிட்டபோது, கவர்னர் ஜெனரலாக இருந்த ஹாம் ஹெர்ஸட் பிரபுக்கு ஒரு கடிதத்தை 11.12.1823 அன்று அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் சமஸ்கிருதத்தைப்பற்றிக் கீழ்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
”இந்தியாவில் நெடுங்காலமாக வழக்கத்தில் இருந்து வருகிற கல்வியறிவைப் பரப்புவதற்கு இந்துப் பண்டிதர்களைக் கொண்டு சமஸ்கிருதப் பள்ளிகளை அரசினர் நிறுவி வருகின்றனர். இத்தகைய கல்விக்கூடம் இலக்கண நுட்பங்களையும், அப்பால் தத்துவ வேறுபாடுகளையும் இளைஞர்களின் மனத்தில் பெருஞ்சுமையாக ஏற்றிவைக்குமே ஒழிய, சமுதாயத்திற்கு எவ்வகையிலும் அவை பயன்படமாட்டா. அப்பள்ளிகளில் பயிலும் மாணவர் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு அறியப்பட்டவை எவையோ அவற்றை அறிவதுடன், கற்பனைக் கோட்டையில் வாழ்ந்த மக்கள் சிலருடைய பயனற்ற சொற்சிலம்ப வாதங்களையுமே தெரிந்து கொள்வர். இத்தகைய கல்வி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நெடுங்காலமாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதே முறையில், இந்நாட்டு மக்களை அறியாமை இருளில் ஆழ்ந்து கிடக்கச் செய்வது பிரிட்டிஷ் சட்டமன்றத்தின் நோக்கமாக இருக்குமானால், சமஸ்கிருதக் கல்விமுறையே அதற்கு போதுமானதாகும். குடிமக்களுடைய கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்பது அரசின் குறிக்கோளாக இருக்குமானால், அது மிகவும் முற்போக்கு இயல்பும், அறிவு நலமும், கனிந்த பயிற்சி முறையும் கொண்டதாக அமைய வேண்டும். அம்முறையில் கணக்கியல், இயற்கைத் தத்துவம், வேதியல், உடற்கூற்று இயல் முதலியவற்றோடு மற்றும் பயன்தரும் அறிவியல் கலைகளைப் பயிற்றுவிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
(ஆதாரம்: – இராஜராம் மோகன்ராய் , – எழுதியவர்: – சௌமியேந்திரநாத தாகூர் – 1972 – பக்-41 – சாகித்திய அகாதமி) இராஜாராமின் இக்குறிப்பை நோக்கினாலேயே சமஸ்கிருதத்தின் உண்மை நிலையை நன்கு உணரலாம். இருநூறு ஆண்டுக் காலத்திற்கு முன்பே, அவர் சமஸ்கிருதம் மக்களை அறியாமை இருளில்தான் ஆழ்த்தும் என்று குறிப்பிட்டுள்ளதிலிருந்தே, முற்போக்குச் சிந்தனைக்கும், அறிவியலுக்கும், அம்மொழிக்கும் எவ்ளவு தூரம் என்பதை நம்மால் அறிந்து கொள்ளமுடியும். அப்போதைய பிரித்தானிய அரசு மக்களை அறியாமையில் ஆழ்த்தவே அம்முடிவை எடுத்தது போலவே, இப்போதைய மோடி அரசும் மக்களை அறியாமையில் ஆழ்த்தவே இப்படிச் சமஸ்கிருதத்தைத் தூக்கிப் பிடிக்கிறது. சமஸ்கிருத இலக்கியம் குறித்தும், அம்மொழிக்குறித்தும், புரட்சிக் கவிஞர் அன்றே கூறியிருப்பது நம் சிந்தனைக்கு உரியது.
”பொய்யிலே கால்படி புரட்டிலே முக்கால்படி வையகம் ஏமாறும்படி வைத்துள்ள நூற்களை ஒப்புவது எப்படி?” என்றும், ” வடமொழி நம்மை தூக்கிடும் தாம்பு –நம் உரிமைதனைக் கடித்தது அப்பாம்பு” – என்றார் பாரதிதாசன். தமிழர்களே உஷார் உஷார்