tamilnadu

img

மோடியின் ரூ.20 லட்சம் கோடியும் புலம் பெயர்ந்த தொழிலாளியும்

இந்தூர்:
கொரோனா தாக்குதலால் பொதுப் போக்குவரத்து முற்றாக முடங்கியுள்ள நிலையில் ஏழை-எளிய மக்கள் எந்த நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சி யூட்டுவதாக அமைந்துள்ளது.  மாட்டு வண்டியில் சிலரை ஏற்றிக் கொண்டு செல்கிறார் ஒருவர். ஊரடங்கால் சாப்பாட்டிற்கு வழியில்லாத நிலையில் ஒரு காளையை விற்றுவிட்டதால் மாட்டு வண்டியை ஒரு பக்கம் மாடும், மறுபக்கம் மனிதனும் சேர்ந்து இழுத்துச் செல்கின்றனர்.
 நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. போக்குவரத்து வசதி முடங்கி உள்ளதால், வெளிமாநிலத்தொழிலாளர்கள் பலரும்தங்கள் சொந்த ஊருக்கு நடந்து பயணம் செல்கின்றனர். இந்த நிலையில், 40 வயது மதிக்கத்தக்க ராகுல் என்பவர் காளையுடன் சேர்ந்து வண்டியை இழுத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அந்த வண்டியில், சில பொருட்களுடன், பெண்கள் உள்ளிட்ட சிலர் அமர்ந்துள்ளனர்.

அவர் சோர்வடையும் நேரம், அவரது மைத்துனர் வண்டியை இழுத்துச் செல்கிறார்.மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் அருகே உள்ள பட்டர்முண்ட்லா கிராமத்தைச் சேர்ந்த அவர்கள், ஊரடங்கால் மோவ் நகரத்தி லிருந்து, தங்கள் ஊருக்குச் சென்று கொண்டிருப்பதாக வீடியோவில் ராகுல் கூறுகிறார்.மேலும்  அவர் கூறுகையில், ‘ஊரடங்கால்பேருந்துகள் ஓடவில்லை. இல்லையெனில் அனைவரும் பேருந்தில்தான் பயணித்திருப்போம். என் தந்தை, சகோதரர், சகோதரிகள், எங்களுக்கு முன்னால் நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். 15 ஆயிரம் ரூபாய்மதிப்புள்ள மற்றொரு காளையை, குடும்பத்திற்கு பொருட்கள் வாங்க 5,000 ரூபாய்க்கு விற்றுவிட்டோம். அதனால் இந்நிலை ஏற்பட்டது’ வருமானம் இல்லாமல் வீட்டிற்குத் திரும்புகிறோம் எனக் கூறினார்.

இந்த வீடியோ ஆக்ரா - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதற்கிடையில், இந்த வைரல் வீடியோவை பார்த்த இந்தூர் மாவட்ட நிர்வாகம்  வீடியோவின் நம்பகத்தன்மையை உறுதிசெய்யுமாறு மோவின் ஜான்பாத் சிறப்பு துணை மாஜிஸ்திரேட் (எஸ்டிஎம்) பிரதுல்சின்ஹா ​​அறிவுறுத்தியுள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு அரசுத்திட்டத்தின் கீழ் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

;