tamilnadu

img

ஜெயப்பிரகாஷ் நாராயணனின் ‘ஏன் சோசலிசம்?’ - இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்

காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட்டுகளும்

- நேற்றைய தொடர்ச்சி

நாம் ஏற்கெனவே விவரித்தபடி காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, இந்திய தேசிய காங்கிரசுக்குள் ஏற்பட்ட - மேலே கூறப்பட்ட நிகழ்வுப் போக்குகளின் பின்னணியில் உதயமானது. இதற்கான முதல் முன் தயாரிப்பு மாநாடு 1934 மே மாதம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் பாட்னாவில் நடந்தது. அந்தக் கூட்டத்தில்தான் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி எனும் புதிய கட்சியை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதே ஆண்டில் பம்பாயில், காங்கிரஸ் மாநாடு நடப்பதற்கு சற்று முன்பு காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் முதல் அகில இந்திய மாநாடு நடைபெற்றது. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் இந்த இரண்டு அமர்வுகளும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலும், அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டிலும் சோசலிஸ்ட்டுகள் தரப்பில் நடத்தப்பட வேண்டிய போராட்டத்திற்கான தயாரிப்பாகவே இருந்தது. இப்படியாக, காங்கிரஸ் முன்பு எப்படிப்பட்ட பிரச்சனைகளை முன்வைக்க வேண்டுமென்று இடதுசாரிகள் அணுகினார்கள் என்பதை தெளிவாக உணர்த்தும் விதத்தில் முயற்சிகள் நடந்தன.

காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உதயமாவதற்கும், அதன் வளர்ச்சிக்கும் அடிப்படையாக ஏராளமான ஆவணங்கள் இருக்கின்றன. அவற்றில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் எழுதிய “ஏன் சோசலிசம்” என்ற நூல் பிரதான இடத்தை பிடிக்கிறது. இந்த நூல், மிகப் பெரும் எண்ணிக்கையிலான இளம் காங்கிரஸ் ஆண்கள் மற்றும் பெண்களின் கண்களை திறக்கும் விதத்தில் எழுதப்பட்டிருந்தது. இந்த இளைய தலைமுறையினர், இந்திய தேசிய காங்கிரசின் வலதுசாரி தலைவர்களால் பின்பற்றப்பட்ட திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளின் அப்பட்டமான தோல்விகளால் விரக்தி அடைந்திருந்த நிலையில், அவர்கள் ஒரு புதிய பாதையை நோக்கி அணிதிரண்டு கொண்டிருந்த சூழலில் இந்த நூல் வெளியானது.

தனிப்பட்ட முறையில் நானும் அதை உணர்ந்தேன். அன்றைய நாளில் கேரளத்தில் என்னைப் போன்ற இளம் காங்கிரஸ்காரர்களை ஜெயப்பிரகாஷ் நாராயணனின் ‘ஏன் சோசலிசம்’ என்ற நூல் ஈர்த்தது. அந்த நூலில், சோசலிசம் என்பது காந்தியிசத்தைவிட உயர்வானது என்பது விரிவான முறையில் கூறப்பட்டிருந்தது. காந்தியிசம், நாடாளுமன்ற பாதை மற்றும் தனிநபர் பயங்கரவாதம்- என மூன்று தத்துவார்த்த அணுகுமுறைகள் காங்கிரசுக்குள் இருந்தன. இந்த நிலையில்தான் ஒரு புதிய தத்துவப் பாதையை எதிர்நோக்கியிருந்த எங்களைப் போன்ற இளைய தலைமுறையினருக்கு ஏன் சோசலிசம் என்ற நூல் ஒரு பாடப்புத்தகம் போல கிடைத்தது. உண்மையில் நாடு முழுவதும் ஒரு புதிய தத்துவத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்த இளம் காங்கிரஸ் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இது ஒரு வெளிச்சத்தை தந்தது. 

உண்மையில் சொல்லப்போனால், ஜெயப்பிரகாஷ் நாராயணனின் நூல், இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு அதன் பாதை சோசலிசமே என்று அறுதியிட்டு கூறுவதாக இல்லை. ஏனென்றால் சோசலிசம் என்ற தத்துவமே இறுதியானது என்று அறுதியிட்டு கூறினால், பகுத்தறிவு சிந்தனையும், முற்போக்கு சிந்தனையும் கொண்ட காங்கிரஸ்காரர்கள் நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் மிகப் பெரும் எண்ணிக்கையிலான உழைக்கும் வர்க்க மக்களோடு கைகோர்த்துவிடுவார்கள் என்ற எண்ணமும் அதில் அடங்கியிருந்தது. வேறு வார்த்தைகளில் கூறப்போனால், சோசலிசம் என்பதே இறுதி இலக்கு என்று கூற அந்த நூல் தயாராகயில்லை; மாறாக, நாடு விடுதலை பெறுவதற்கு ஒரு சக்தி வாய்ந்த வழிமுறையாக சோசலிசப் பாதை இருக்கும் என்ற அளவில் மட்டும் அது கூறியது. எனவே இந்த நூல், காந்திய செயல்திட்டமான காதி மற்றும் கிராமத் தொழில்கள், அஹிம்சை வழியிலான எதிர்ப்புப் போராட்டங்கள் போன்றவற்றை உள்ளடக்கி அந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாக இருந்தது. மறுபுறத்தில், காங்கிரஸ் தலைவர்களில் வலதுசாரிப் பிரிவினர் முன்வைத்த நாடாளுமன்ற பாதை என்ற சிந்தனைக்கு மகாத்மாவே முழுமையான ஆசிகளை வழங்கிக் கொண்டிருந்தார். மற்றொரு சிந்தனையோட்டமான தனிநபர் பயங்கரவாதம் என்பது, நாடு முழுவதும் காங்கிரசுக்குள் இருந்த புரட்சியாளர்களின் குழுக்களால் செயல்படுத்தப்பட்டு கொண்டிருந்தது.

இந்த நடவடிக்கைகளை எதிர்த்த அதேவேளையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இதர உழைக்கும் மக்கள் பிரிவினரால் நடத்தப்பட்ட வெகுமக்கள் போராட்ட இயக்கங்களை ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆதரித்தார். ஆனால் மறுபுறத்தில் மகாத்மா காந்தியால் முன்வைக்கப்பட்ட புதிய கண்ணோட்டம், புதிய திட்டம் என்பது காங்கிரஸ் இயக்கத்தை ஒரு போராட்ட குணமிக்க அமைப்பு என்பதிலிருந்து ஒரு அரசியலற்ற சேவா சங்கம் என்ற ஒரு கட்டமைப்பாக மாற்றுவதை நோக்கியும், தேர்தல்களை எதிர்கொள்வதற்கான ஒரு சக்திமிக்க கட்சியாக இருந்தால் போதும் என்பதை நோக்கியும் கொண்டு செல்வதாக இருந்தது.

மீண்டும் தனிப்பட்ட உணர்வுகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். எல்லாம் நிகழ்வுகளையும் என்னால் நினைவுகூர முடியவில்லை. எனினும் இரண்டு சம்பவங்கள் எனது அரசியல் சிந்தனையை செழுமைப்படுத்த காரணமாக அமைந்தன. முதலாவது, ஜெயப்பிரகாஷ் நாராயணனின் கேரள வருகை. 1934 மே மாதம் பாட்னாவில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் முன் தயாரிப்பு மாநாடு நடந்தபிறகு அவர் கேரளாவுக்கு வருகை தந்தார். கட்சியின் அமைப்புக் குழுச் செயலாளர் என்கிற முறையில் வருகை தந்த அவர், அக்டோபரில் நடைபெறவுள்ள காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி முதலாவது அகில இந்திய மாநாட்டின் தயாரிப்புப் பணிகளை ஆய்வு செய்வதற்காக வந்தார். இந்த வருகையின் போது அவர் ஆற்றிய உரைகள், எங்களோடு அவர் நடத்திய தனிப்பட்ட முறையிலான விவாதங்கள் ஆகியவை, தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கம் ஆகியவற்றை உருவாக்கி அவர்களை அணிதிரட்ட வேண்டியதன் அவசியத்தை அடிகோடிட்டு காட்டுவதாக அமைந்திருந்தன. இந்த இயக்கங்கள் இல்லாமல் விடுதலைப் போராட்டத்தை தீர்மானகரமான முறையில் முன்கொண்டு செல்ல முடியாது என அவர் உணர்த்தினார். மேலும், காங்கிரஸ் தலைமையின் சமரசக் கொள்கைகளை எதிர்த்து சீரிய முறையில் போராடவும் முடியாது என்றும் அவர் சுட்டிக் காட்டினார். அதேபோல, சட்டமறுப்பு இயக்கம், ஒத்துழையாமை இயக்கம் போன்ற போராட்டங்களின் போது நடந்த மாபெரும் வேலைநிறுத்தங்கள், முழு அடைப்புகள் ஆகியவற்றின் அனுபவங்களையெல்லாம் நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். இதுபோன்ற போர்க்குணமிக்க வெகு மக்கள் போராட்ட இயக்கங்கள் அரசு நிர்வாகத்தை எப்படி ஸ்தம்பித்து போகச் செய்வதற்கு காரணமாக அமைகின்றன என்ற அனுபவங்களையெல்லாம் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார். இத்தகைய தொழிலாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட சக்தியை, அதன் அனுபவத்தை மேம்படுத்துவது தான், சக்தி வாய்ந்த பிரிட்டிஷ் ஆட்சியை உடைத்து நொறுக்குவதற்கான ஒரே சிறந்த வடிவம் என்றும் அவர் ஆர்வத்துடன் கூறினார். இந்த பேச்சுக்களின் மூலம், சத்தியாகிரகத்திற்கு மாற்றாக, நாடாளுமன்றப் பாதைக்கு மாற்றாக, பயங்கரவாத வழிமுறைக்கு மாற்றாக, உண்மையான ஒரு மாற்றுப் பாதை இருக்கிறது என்ற தெளிவினை நாங்கள் அடைந்தோம்.

(தொடரும்)

 

 

 

;