tamilnadu

img

இந்திய தொழிற்துறை 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு

புதுதில்லி:
இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி குறித்த விவரங்களை நவம்பர்11ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் மாதத்தில் இந்தியத் தொழில்துறை உற்பத்தி 4.3 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இது ஆகஸ்ட் மாதம் இந்தியா சந்தித்த 1.1 சதவிகித வீழ்ச்சியை விட மிக அதிகம் என்பதுடன், கடந்த 6 ஆண்டுகளில் ஏற்படாத மிகமோசமான தொழில்துறை உற்பத்தி வீழ்ச்சியாகும்.இதற்கு முன்னர் ஜூலை மாதத்தில் கூட 4.5 சதவிகித வளர்ச்சி இருந்தது. 2018 செப்டம்பரிலும் 4.8 சதவிகித வளர்ச்சிஇருந்தது. ஆனால், தற்போது படுமோசமான நிலைக்குச் சென்றுள்ளதை மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் பட்டவர்த்தனமாக்கி உள்ளன.இந்தியாவின் எட்டு முன்னணி துறைகளான (Core Sector) நிலக்கரி, உரம்,கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு,சுத்திகரிப்புப் பொருட்கள், ஸ்டீல்,சிமெண்ட், மின்சாரம் ஆகிய துறைகளின் உற்பத்தி மட்டும் 5.2 சதவிகிதம் அளவிற்கு வீழ்ச்சியடைந்ததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் 8.2 சதவிகிதமாக வளர்ச்சியைக் கொண்டிருந்த மின்துறை உற்பத்தி, தற்போது, 2.6 சதவிகிதமாக குறைந்தது. அதேபோல கடந்த ஆண்டு செப்டம்பரில், 0.1 சதவிகிதம் வளர்ச்சியைப் பெற்றிருந்த சுரங்கத்துறை, தற்போது 8.5 சதவிகிதம் அளவுக்கு சரிவைக் கண்டது.இவ்வாறு முக்கியமான எட்டுத் துறைகளின் வளர்ச்சி, கடந்த செப்டம்பரில், 14 ஆண்டுகளில் இல்லாத வகையில், 5.2 சதவிகிதமாக குறைந்தது.இந்த 8 முக்கியமான துறைகளும், தொழில்துறை உற்பத்தியில், 40 சதவிகித பங்களிப்பு கொண்டவை என்பதால், இவை ஒட்டுமொத்த தொழிற்துறைஉற்பத்தி வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.தொழிற்துறை உற்பத்தி கடந்தஆண்டு செப்டம்பரில், 4.8 சதவிகிதமாகஇருந்த நிலையில், அது 2019 செப்டம்பரில், 3.9 சதவிகிதமாக குறைந்து உள்ளது. 

தொழிற்துறையைப் பொறுத்தவரை, உற்பத்தித் துறையில் உள்ள 23 தொழிற்துறை குழுக்களில் 17 துறைகள், முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது எதிர்மறையான வளர்ச்சியைக் காட்டியுள்ளதுமோட்டார் வாகனங்கள், டிரெய்லர்கள் மற்றும் செமி-டிரெய்லர்களின் உற்பத்தி மைனஸ் 24.8 சதவிகிதத்திற்குச் சென்றுள்ளது. இதேபோல மரச் சாமான்களின் உற்பத்தி மைனஸ் 23.6 சதவிகிதம், உலோகப் பொருட்களின் உற்பத்தி மைனஸ் 22 சதவிகிதம் எனஎதிர்மறையான வளர்ச்சியையே காட்டியுள்ளன.முதலீட்டுத் தேவையை குறிக்கும் மூலதனப் பொருட்கள் துறையின் வளர்ச்சியும், 20.7 சதவிகிதம் குறைந் துள்ளது. நுகர்வோர் சாதனங்கள் துறைமற்றும் நுகர்வோர் சாராத சாதனங்கள் துறை ஆகியவற்றின் வளர்ச்சியிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே இந்தியப் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும் நிலையில், செப்டம்பர் மாதத்துக்கான தொழில்துறை உற்பத்திமேலும் வீழ்ச்சியடைந்து இருப்பது,பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தொழில்துறை உற்பத்தி வளர்ச்சிதொடர்ந்து இரண்டாவது மாதமாக வீழ்ச்சியைச் சந்தித்து வருவதாக, பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி தேசியக்கழகமும் (National Council Of AppliddEconomic Research -NCAER) அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், உற்பத்தி வளர்ச்சி சரிவால்,வணிக நம்பிக்கையிலும் பெரும் சரிவுஏற்பட்டுள்ளதாக என்.சி.ஏ.இ.ஆர். நிறுவனம் தெரிவிக்கிறது. வணிக நம்பிக்கைகுறியீடு, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், 103.1 சதவிகிதமாக உள்ளதாகவும், இது, 15.3 சதவிகித சரிவுஎன்றும் கூறுகிறது.அடுத்த ஆறு மாதங்களில் பொருளாதார நிலை மேம்படுமா என்பது குறித்தஆய்வில், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், 58.9 சதவிகிதம் பேர் நம்பிக்கை கொண்டிருந்த நிலையில், இரண்டாவது காலாண்டில் அந்த நம்பிக்கை சரிந்து, 46.3 சதவிகிதத்தினரே நிலைமை சரியாகும் என,தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட முக்கியமான ஐந்து துறைகளிலும், வணிக நம்பிக்கை குறைந்துள்ளதாக என்.சி.ஏ.இ.ஆர். தெரிவிக்கிறது.இதனிடையே, நாட்டின் மின்சாரத் தேவை, கடந்த 12 ஆண்டுகளில் இல்லாதஅளவிற்கு குறைந்து விட்டது என்று மத்திய மின்சார வாரியமும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, தொழில்துறையில் முக்கியப் பங்கு வகிக்கும்  மகாராஷ்டிராவில் 22.4 சதவிதமும், குஜராத்தில் 18.8 சதவிகிதமும் மின்சாரத் தேவை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

;