tamilnadu

img

சீனா, பாகிஸ்தான் நாடுகளுடன்  இணைந்து செயல்பட இந்தியா முடிவு

புதுதில்லி:
பருவநிலை மாற்ற பிரச்சனைக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் வானிலை ஆய்வுமுகமைகளுடன் இணைந்து செயல்பட உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்துகுஷ்-இமயமலை மண்டலம், இந்தியா, சீனா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம், மியான்மர், பூடான் ஆகிய 8 நாடுகளில் 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைந்துள்ளது. இது, ஆசியாவின் மிகப்பெரிய10 ஆறுகளின் மூலமாகவும், ஆர்க்டிக்-அண்டார்டிகா பகுதிக்கு வெளியே மிகப்பெரும் அளவில் பனிப்பாளங்களை கொண்ட பகுதியாகவும் உள்ளது. எனவே, இந்த பகுதி பூமியின் மூன்றாவது துருவம் என அழைக்கப்படுகிறது.மேலும் உலகின் முக்கியமான நீர்க்கோபுரங்களில் ஒன்று என்றும் வர்ணிக்கப்படுகிறது.

அந்த வகையில் பருவநிலை மீதான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய பகுதியாகவும் இந்துகுஷ்-இமயமலை மண்டலம் அமைந்துள்ளது. எனவே, இந்துகுஷ்-இமயமலை மண்டலம் தொடர்பான தரவுகளை திரட்டி பகிர்ந்துகொள்வதற்காகவும், இந்த மண்டலத்தில் வானிலை முன்னறிவிப்புகளை வழங்குவதற்காகவும், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் வானிலை ஆய்வு முகமைகளுடன் இந்திய வானிலை ஆய்வு மையம் இணைந்து செயல்பட உள்ளது.வானிலை பகுப்பாய்வு மற்றும் முன்னறிவிப்புகளை வழங்குவதற்கான, மண்டல பருவநிலை மையம் அமைப்பது குறித்தும் அண்மையில் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆலோசனை நடத்தியது. உலக வானிலை நிறுவனத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இது முழுமைபெற சில ஆண்டுகள் ஆகும் என்றும். உலக வானிலை நிறுவனத்தின் தொடர்பு மையங்கள் தில்லி, பெய்ஜிங், இஸ்லாமாபாத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகவும்  இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநர் மொஹாபத்ரா கூறியுள்ளார்.

;