tamilnadu

img

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி ‘செஸ்’ ரூ. 47 ஆயிரம் கோடி அபகரிப்பு... மத்திய கணக்குத் தணிக்கை அறிக்கையில் அம்பலமான மோடி அரசின் தில்லு முல்லு

புதுதில்லி:
மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை, ஜிஎஸ்டி ‘செஸ்’ சட்டத்தை மீறி, மோடி அரசு அபகரித்து இருப்பது மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை (Comptroller and Auditor General - CAG) அதிகாரியின் அறிக்கை மூலம் அம்பலமாகி இருக்கிறது.மத்திய அரசின் வரவு - செலவு குறித்த அறிக்கையை, மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி, புதன்கிழமையன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில்,ரபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தக் குளறுபடிகள் உட்பட அரசின் பல்வேறு வரவு - செலவுத் திட்டங்கள், அதிலுள்ள குறைபாடுகள், முறைகேடுகள் குறித்து கூறியிருந்தார்.

அதனொரு பகுதியாக, ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பான ‘செஸ்’ சட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகளையும் அம்பலப்படுத்தியுள்ளார்.“பொது சரக்கு மற்றும் சேவை வரி விதிமுறை குறித்த தனது சொந்தசட்டத்தையே மத்திய அரசு மீறியிருக்கிறது; ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையில் ரூ.47 ஆயிரத்து 272 கோடியை, மாநிலங்களுக்கு வழங்காமல் தன்வசமே வைத்துக் கொண்டது; அதாவது, ஜிஎஸ்டி வரி விதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்கான நிதியை, மத்திய நிதி அமைச்சகம் வேறு பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தி இருக்கிறது; கடந்த 2017-18 மற்றும் 2018-19 ஆகிய ஆண்டுகளில் இந்த விதிமீறல் நடைபெற்றுள்ளது; இது ஜிஎஸ்டி இழப்பீடு சட்டம் 2017-ஐ மீறிய செயல் மற்றும் சட்ட விரோதம்” என்று சிஏஜி குற்றம் சாட்டியுள்ளார்.

“ஜிஎஸ்டி இழப்பீடு ‘செஸ்’ சட்டத்தின்படி, ஒரு ஆண்டில் வசூல் செய்யப்பட்ட அனைத்து ‘செஸ்’ வரித்தொகையும் ஜிஎஸ்டி இழப்பீடு நிதியில் எவ்வித குறையும் இன்றி சேர்க்கப்பட வேண்டும். இது மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஏற்படும் வருவாய் இழப்புக்கு இழப்பீடாக வழங் கப்பட வேண்டிய தொகையாகும். இதன்படி 2017-18 மற்றும் 2018-19-ல் ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியில் சேர்க்கப்பட வேண்டியது 47 ஆயிரத்து 272 கோடி ரூபாய் ஆகும். ஆனால், இதனை மாநிலங்களுக்கு அளிக்க சட்டத்தில் எந்த பிரிவும் இல்லை என்று கூறி, ஜிஎஸ்டி ‘செஸ்’ வரி வசூல் தொகை ரூ. 47 ஆயிரத்து 272 கோடியையும் ஜிஎஸ்டி இழப்பீடு நிதியில் வைக்காமல் இந்தியத் தொகுப்பு நிதியில் (CFI - Consolidated Fund of India) வைத்து, தனது வேறு பல நோக்கங்களுக்கு மத்திய அரசு பயன்படுத்தியுள்ளது. அதாவது, ‘ஜிஎஸ்டி சட்டத்தில் எதற்காக இந்த நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டதோ, அதனை மீறி வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்தியுள்ளது” என்று சிஏஜி கூறியுள் ளார்.

இது விதிமீறல் என்பதுடன், மற்றொரு புறத்தில் தனது இந்த செயல்மூலம், அரசுக்கான வரி வருவாயைமத்திய அரசு மிகைப் படுத்திக் காட்டியிருக்கிறது; நிதிப்பற்றாக்குறையையும் குறைத்துக் காட்டியிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.“இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியிலிருந்து ஜிஎஸ்டி வருவாயை இழந்ததற்கு மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க சட்டத்தில் எந்த ஏற்பாடும் இல்லை” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வாரம்தான் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.ஆனால், மாநிலங்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய இழப்பீட்டுநிதியை மத்திய அரசு வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்தி இருக்கிறது; இது சட்டமீறல் என்று மோடி அரசின் மோசடிகளை சிஏஜி அம்பலப் படுத்தியுள்ளார்.

;