tamilnadu

img

விவசாயிகளுக்கு பயன்படாத ‘பசல் யோஜனா’

புதுதில்லி:
விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீடு என்ற பெயரில் மோடி அறிவித்த திட்டம்தான் ‘பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா’ ஆகும். இந்த திட்டத்தால் விவசாயிகளின் வாழ்க்கையில் மிகப்பெரும் மாற்றம் ஏற்படப் போகிறது என்று பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கூறிவந்தனர். 

ஆனால், வழக்கம்போல இதுவும் ஏமாற்றாகவே முடியும். தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள்தான் லாபம் அடையப் போகின்றன என்று விவசாயிகள் சங்கத் தலைவர்கள் எச்சரித்தனர். தற்போது அதுதான் நடந்துள்ளது.மோடியின் ‘பிரதான் மந்திரி பசல் யோஜனா’ திட்டத்தின் கீழ், பயனடைந்த விவசாயிகள் தொடர்பான விவரங்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்டுள்ளது. 
இதில்தான், ‘பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா’ மூலம் சுமார் 60 சதவிகித விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு போய்ச் சேரவில்லை; 40 சதவிகித விவசாயிகளுக்கே- அதுவும் மிகவும் தாமதமாக கிடைத்துள்ளது என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது.

வறட்சி உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தரவேண்டிய ரூ. 12 ஆயிரத்து 867 கோடியை தராமல் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அபகரித்துக் கொண்டுள்ளன. மாநில அரசுகளால் சான்றளிக்கப்பட்ட ரூ. 5 ஆயிரத்து 171 கோடி அளவிற்கான இழப்பீட்டுத் தொகையையும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கவில்லை கூறப்படுகிறது.ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு பயிர்க் காப்பீட்டிற்கான பிரீமியமாக, சுமார் ரூ. 20 ஆயிரத்து 747 கோடியை, மத்திய பாஜக அரசு அள்ளிக் கொடுத்திருக்கிறது.

இந்தியாவில் 65 சதவிகித விவசாயப் பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை. ஆந்திரா, பீகார், குஜராத், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் ஒன்றரைக் கோடி ஹெக்டேர் அளவிற்கு பயிர்கள் கருகிவிட்டன. 7 மாநிலங்கள், தங்களை வறட்சி மாநிலங்களாக அறிவித்துள்ளன.

கடந்த 2018 ஜூன் மற்றும் செப்டம்பர் காலக்கட்டத்தில் நாட்டிலுள்ள 252 மாவட்டங்களில் குறைந்த மழையளவுதான் பதிவாகி இருக்கிறது. இதனை மத்திய அரசே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் 401 கிராமங்களில் 33 சதவிகித பயிர்கள் கருகி விட்டன. 269 கிராமங்களில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான பயிர்கள் கருகி விட்டன. மகாராஷ்டிராவில் 60 முதல் 70 சதவிகிதம் வரையிலான சோயா பீன்ஸ் போன்ற பயிர்கள் கருகி விட்டன. காட்டன் பயிர்க்கள் 50 சதவிகிதம் வரை கருகி விட்டன என்றெல்லாம் மத்திய வேளாண் அமைச்சகமும் கூறியிருந்தது.
இந்நிலையில்தான், பாதிக்கப்பட்ட தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய பயிர்க்காப்பீட்டை, குறித்த காலத்திற்குள் வழங்காமல் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஏமாற்றி விட்டன; பயிர்க் காப்பீட்டைப் பெற்றுத் தருவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்காமல், மத்திய மோடி அரசும் தங்களை வஞ்சித்து விட்டது என்று விவசாயிகளை குமுறுகின்றனர்.

;