tamilnadu

img

ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியாரிடம் ஒப்படைக்காதே : சிஐடியு எதிர்ப்பு

புதுதில்லி, ஜூலை 5- ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியாரிடம் ஒப்படைத்திட மத்திய அரசு மேற்கொண்டுள்ள நாசகர முடிவிற்கு சிஐடியு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிஐடியு  பொதுச் செயலாளர் தபன் சென் ஓர் அறிக்கையில் கூறியிருப்பதாவது: முந்தைய மோடி-1 அரசாங்கம், ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியாரிடம் தாரை வார்த்திட முடிவுசெய்து அதனை வாங்கக்கூடிய நபர்கள் குறித்து ஆர்வம் காட்டியது. எனினும் அதனை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை.  எனவே இப்போது மோடி-2 அரசாங்கமானது அதனைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்து விற்பதற்குத் திட்டமிட்டுள்ளது.

அதாவது ஏர் இந்தியா நிறுவனத்தில் மிகவும் இலாபகரமாக இயங்கிடும் அல்லயன்ஸ் ஏர், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏஐடிஎஸ்எல், ஏஐஇஎஸ்எல் போன்றவற்றை முதலில் மிகவும் மலிவான விலைக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளிடம் விற்றிடத் திட்டமிட்டிருக்கிறது. போலியான வாதம் ஏர் இந்தியா நிறுவனத்தை நடத்துவது மிகவும் இழப்பினை ஏற்படுத்துவதாகவும், அதன் கடன்படும் நிலை அதிகரித்துக் கொண்டே இருப்பதாகவும், எனவேதான் தனியாரிடம் விற்றுவிட முடிவு செய்திருப்பதாகவும் மோடி-2 அரசாங்கம் இம்முடிவை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது.  இது போலியான வாதமேதவிர வேறல்ல. ஏர் இந்தியா நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படுவதற்கும், கடன் சுமை ஏற்படுவதற்கும் நிர்வாகத்தின் அவசரபுத்தியோ அல்லது நிர்வாகச் சீர்கேடோ காரணமல்ல. மாறாக, இதற்கு இத்துறைக்குப் பொறுப்பு வகித்த அமைச்சர்களின் மிகவும் மோச மான தலையீடுகளே காரணமாகும்.

 ஏர் இந்தியா நிறுவனத்தை இதர நிறுவனங்களுடன் எவ்விதத் தயாரிப்பு வேலையுமின்றி இணைத்தது, வெளிநாட்டு விமானத்தயாரிப்பு நிறுவனங்கள் ஆதாயம் அடைய வேண்டுமென்பதற்காகவே ஏராளமான விமானங்களை விலைக்கு வாங்கிட, ஏர் இந்தியா நிறுவனத்தைக் கட்டாயப்படுத்தியது ஆகியவையே இந்நிறுவனத்தின் இன்றைய இழப்புக்கும் கடன்படும் நிலை ஏற்பட்டிருப்பதற்கும் காரணங்களாகும்.   கடனைச் செலுத்துகிறது ஆனாலும், இவ்வளவு பிரச்சனைகள் இருந்தபோதிலும்கூட, ஏர் இந்தியா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக இலாபகரமாகவே செயல்படும் நிலைக்கு மீண்டுள்ளது.  இது, தான் கடன் வாங்கியிருக்கின்ற வங்கிகளுக்கு, இதர தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களைப்போல் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்ததில்லை. மாறாக, தான் செலுத்தவேண்டிய கடன் தொகைகளைக் காலத்தில் செலுத்திக்கொண்டுதான் இருக்கிறது.

இவ்வாறு வங்கிகளில் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தாது ஏமாற்றிக்கொண்டுவரும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களிடம்தான் இப்போது ஏர் இந்தியா நிறுவனத்தையும் ஒப்படைக்க இந்த அரசு திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறது. இலாபகரமாக இயங்கிவரும் பொதுத்துறை நிறுவனங்களில் மிகவும் தவறான விதத்தில் முடிவுகளை மேற்கொண்டு அவற்றை நாசப்படுத்து வது. பின்னர் இதனையே காரணம் காட்டி, நாட்டில் அபரிமிதமானமுறையில் செல்வவளம் மிகுந்த பொதுத்துறை நிறுவனங்களை எவ்விதத்திலும் மதிக்கப்படக்கூடாத தனியாரிடம் ஒப்படைப்பது என்கிற சூழ்ச்சியின் ஒரு பகுதியாகவே மோடி-2 அரசாங்கம் இத்தகு செயல்களில் இறங்கியிருக்கிறது.

நாசகர முடிவு இவ்வாறு ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைத்திட பாஜக அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நாசகர முடிவினை சிஐடியு கடுமையாகக் கண்டனம் செய்கிறது. இத்தகைய படுபிற்போக்குத்தனமான முடிவை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது. மோடி-2 அரசாங்கத்தின் இந்த கேடுகெட்ட முடிவிற்கு எதிராக இதில் செயல்பட்டுவரும் ஏர் இந்தியா ஊழியர்களின் எட்டு சங்கங்களும் தங்கள் எதிர்ப்பினை ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமைக்கு 2019 ஜூன் 12 அன்று தெரிவித்துள்ளனர். ஒன்றுபட்ட போராட்டத்திற்காக அணிதிரண்டு வருகின்றனர். மத்திய அரசாங்கத்தின் இந்நாசகர சூழ்ச்சியைத் தடுத்து நிறுத்திட நாட்டிலுள்ள அனைத்து சங்கங்களும் அவற்றின்கீழ் இயங்கிடும் தொழிலாளர்களும் சங்க வித்தியாசங்களைக் கடந்து ஒன்றுபட்டுப் போராட முன்வரவேண்டும் என்று சிஐடியு அறைகூவி அழைக்கிறது. இவ்வாறு தபன்சென் அறிக்கையில் கூறியுள்ளார்.   (ந.நி.)

;