tamilnadu

img

லெனின், ஸ்டாலின் அங்கீகரித்த பிரகடனம் - என்.ராமகிருஷ்ணன்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உருவான ஆண்டு

“இக்காலகட்டத்தில்தான் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்கும் பொறுப்பு அளிக்கப்பட்ட  எம்.என்.ராய், சிங்காரவேலரையும், எஸ்.ஏ.டாங்கேயையும், முசாபர் அகமதுவையும் தொடர்பு கொண்டு அவர்கள் மூவரையும் ஒருங்கிணைத்தார்.  1921ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசின் அகில இந்திய மாநாடு அகமதாபாத் நகரில் நடைபெற்றபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எம்.என்.ராய்  ஒரு பிரகடனத்தை எழுதி அதை மாநாட்டில் விநியோகிக்க செய்தார். அது லெனினும், ஸ்டாலினும் படித்து அங்கீகரித்தது. 

இப்பொழுது தோழர் முசாபர் அகமது சுட்டிக்காட்டிய, விடப்பட்ட அம்சங்களை ஒவ்வொன்றாக காண்போம்: 

1. 1920ல் தாஷ்கண்ட் நகரில் முதல் இந்தியக் கம்யூனிஸ்ட் குழு உருவான நேரத்திலேயே இந்தியாவில் மூன்று இடங்களில் மூன்று கம்யூனிஸ்ட்டுகள் கம்யூனிஸ்ட் இயக்கம் குறித்து கருத்துக்களை பரப்ப ஆரம்பித்தனர். சென்னையில் சிங்காரவேலர், பம்பாயில் எஸ்.ஏ.டாங்கே, கல்கத்தாவில் முசாபர் அகமது. சென்னையில் சிங்காரவேலர் அப்பொழுது உருவாகி வந்த பின்னி மற்றும் கர்நாட்டிக் மில்களைச் சேர்ந்த 14 ஆயிரம் தொழிலாளிகளுக்கு மார்க்சியம் குறித்தும், மார்க்சியப் பொருளாதாரம் குறித்தும் போதனை செய்ய ஆரம்பித்தார். தொழிலாளிகளுக்கு அரசியல் உணர்வூட்டுவதற்காக ‘தொழிலாளன்’ என்ற தமிழ் பத்திரிகையையும் நடுத்தர வர்க்க ஊழியர்களுக்காக ‘லேபர் கிஸான் கெஜட்’ என்ற ஆங்கில பத்திரிகையையும் நடத்தி மார்க்சியப் பிரச்சாரம் செய்தார். 1920ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி மற்றும் 1921 ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி சென்னை காவல்துறையினர், போராடிய பின்னி மற்றும் கர்நாட்டிக் மில் தொழிலாளிகள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது தொழிலாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர் இந்த தொழிலாளிகளின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்களின் உடல்களை சுமந்து சென்றார். அந்த துப்பாக்கிச் சூடு குறித்து அறிக்கை வெளியிட்டு மக்கள் கவனத்தை ஈர்த்தார். 1923ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னையில் மே தினத்தை இரண்டு இடங்களில் கொண்டாடினார். 

2. பம்பாயில் எஸ்.ஏ.டாங்கே கல்லூரியில் இருந்து அரசியல் காரணத்திற்காக வெளியேற்றப்பட்ட நிலையில், அவர் பத்திரிகைகளில் படித்த ரஷ்ய அரசாங்கத்தின் சாதனைகளை விளக்கியும், தான் புரிந்து கொண்ட அளவில் மார்க்சியத் தத்துவத்தை விளக்கி மாணவர்கள் கூட்டத்தில் பேச ஆரம்பித்தார். லெனினும் காந்தியும் என்ற ஒப்பீட்டுப் பிரசுரத்தை எழுதி ரஷ்ய சாதனைகளை விளக்கினார். ‘சோசலிஸ்ட்’ என்ற ஆங்கில ஏட்டை துவக்கி மார்க்சியப் பிரச்சாரத்தை துவக்கினார். எஸ்.எஸ்.மிராஜ்கர், ஆர்.எஸ்.நிம்ப்கர், எஸ்.வி.காட்டே போன்ற தோழர்களுடன் சேர்ந்து பம்பாய் மில்களில் இருந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகளுக்கு வர்க்கப் போதனை செய்தார். இதன் விளைவாகத்தான் 1929ஆம் ஆண்டில் லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பலமாத காலம் வேலைநிறுத்தம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3.கல்கத்தாவில் தீவிர தேச பக்தரான முசாபர் அகமது, லெனின் எழுதிய நூல்களையும், மார்க்ஸ் எழுதிய நூல்களையும் அயல்நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த “வான்கார்ட் (முன்னணிப்படை), அட்வான்ஸ் கார்ட் (முன்னணி காவலன்), ‘சர்வதேச செய்தி பரிமாற்றம்’, ‘இந்திய மக்கள்’, ‘கம்யூனிஸ்ட் அகிலம்’ போன்று அயல்நாட்டிலிருந்து வந்த ஆங்கிலப் பத்திரிகைகளை படித்து கம்யூனிஸ்ட்டானவர். தன் நெருங்கிய நண்பர் கவிஞர் நஸ்ரூல் இஸ்லாம் மற்றும் பஸ்நூல் ஹக் போன்றோருடன் சேர்ந்து நவயுகம் என்ற பத்திரிகையை தொடங்கி தொழிலாளர் பிரச்சனைகளை எழுதினார். துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று தொழிலாளர் பிரச்சனைகளை அறிந்து உருக்கமான கட்டுரைகளை எழுதினார். ஒருமுறை காவல்துறை தொழிலாளிகள் மீது கடும் அடக்குமுறையை ஏவியபொழுது அவர் அதை வன்மையாகக் கண்டித்து எழுதினார். இதனால் ஆங்கில அரசாங்கம் அந்த பத்திரிகையின் காப்புத் தொகையை பறிமுதல் செய்தது. 

இக்காலகட்டத்தில்தான் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்கும் பொறுப்பு அளிக்கப்பட்ட எம்.என்.ராய், சிங்காரவேலரையும், எஸ்.ஏ.டாங்கேயையும், முசாபர் அகமதுவையும் தொடர்பு கொண்டு அவர்கள் மூவரையும் ஒருங்கிணைத்தார். 

1921ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசின் அகில இந்திய மாநாடு அகமதாபாத் நகரில் நடைபெற்ற போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எம்.என்.ராய் ஒரு பிரகடனத்தை எழுதி அதை மாநாட்டில் விநியோகிக்க செய்தார். அது லெனினும், ஸ்டாலினும் படித்து அங்கீகரித்தது.  அது முதன் முறையாக இந்தியாவிற்குத் தேவை முழு சுதந்திரம் என்ற கோரிக்கையை முன்வைத்தது. தேசிய இயக்கம் கூட அந்த கோரிக்கையை அப்பொழுது முன்வைக்கவில்லை.  அதேபோன்று 1923ஆம் ஆண்டு கயா நகரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் சிங்காரவேலர் தொழிலாளர் குறித்த பிரச்சனை மீது ஆவேசமிக்க உரையாற்றினார். “உலக கம்யூனிஸ்ட்டுகளின் சிறப்பிற்குரிய வரிசை முறையில் உலக நலனில் அக்கறையுள்ள மாபெரும் இயக்கத்தில் பிரதிநிதியாக இங்கு வந்துள்ளேன்” என்று கம்பீரமாக தொடங்கிய சிங்காரவேலர் இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் வேதனைகளையும், அவர்களின் கோரிக்கைகளையும் முன்வைத்து உரையாற்றினார். 

ரஷ்யப் புரட்சியின் தாக்கத்தினால் இந்தியாவில் மார்க்சியக் கருத்துக்கள் பரவுவதையும், ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் ரஷ்யா சென்று மார்க்சியப் பயிற்சி பெற்று வருவதையும் கண்ட ஆங்கிலேய அரசாங்கம் அவ்வாறு பயிற்சி பெற்று பெஷாவர் திரும்பிய இளம் கம்யூனிஸ்ட்டுகளை 1921ஆம் ஆண்டிலிருந்து கைது செய்ய ஆரம்பித்தது. 1921 - 24 காலகட்டத்தில் மட்டும் நான்கு கம்யூனிஸ்ட் சதி வழக்குகள் போடப்பட்டு முகமது அக்பர் ஹான், ஹாசன், குலாப் மகபூப், முகமது அக்பர்ஷா, முகமது கவுகார் ரஹ்மான் கான், மீர் அப்துல் மஜித், ஹபீப் அகமது, ரபீக் அகமது, சுல்தான் அகமது, பெரோசுதீன் மன்சூர், அப்துல் காதிர்கான், முகமது ஷாபிக் ஆகிய இளம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஓராண்டு முதல் ஏழு ஆண்டு வரை ஆங்கிலேய அரசாங்கம் கடுங் காவல் தண்டனை விதித்தது. 

இந்த வழக்கிற்குப் பின்னர் நாடெங்கிலும் மார்க்சியக் கருத்துக்கள் பரவுவதையும், தொழிலாளி வர்க்கப் போராட்டங்கள் அதிகரிப்பதையும் கண்ட ஆங்கிலேய அரசாங்கம் தொடுத்த மற்றொரு தாக்குதல்தான் கான்பூர் சதி வழக்கு. இந்த வழக்கில் எஸ்.ஏ.டாங்கே, முசாபர் அகமது, சௌகத் உஸ்மானி, நளினி குப்தா ஆகிய நால்வர் மீதும் ராஜத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் சிங்காரவேலரையும் கைது செய்ய அரசாங்கம் காவல்படையை அனுப்பியது. ஆனால் அச்சமயத்தில் அவர் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரை பரிசோதித்த ஆங்கிலேய மருத்துவர் அவரை கான்பூருக்கு கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. எனவே அவர் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கு 1924ஆம் ஆண்டில் நடைபெற்று குற்றம்சாட்டப்பட்ட நால்வருக்கு நான்காண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. 

- நாளை தொடரும்