tamilnadu

img

நிலக்கரி உற்பத்தி விநியோகம் 6 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி... மின்சார உற்பத்தியும் கடுமையான சரிவு

புதுதில்லி:
‘கோல் இந்தியா’ நிறுவனத்தின் நிலக்கரி விநியோகம் 2019-ஆம் ஆண்டில் 3.8 சதவிகிதம் அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் நிலக்கரி சுரங்க நிறுவனமான ‘கோல் இந்தியா’, உலகளவில் நிலக்கரி உற்பத்தியில் 82 சதவிகிதப் பங்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம் இந்தியாவின் மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கான நிலக்கரியை விநியோகித்து வருகிறது. 

நிலக்கரி விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படும்போது மின்சார உற்பத்தியிலும் அது பாதிப்பை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், 2019ஆம் ஆண்டில் ‘கோல் இந்தியா’வின் நிலக்கரி விநியோகமானது, முதன்முதலாக, கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் சரிவைச் சந்தித்துள்ளது.3.8 சதவிகித சரிவுடன் 580.8 மில்லியன் டன் அளவிலான நிலக்கரி மட்டுமே 2019-ஆம் ஆண்டில் ‘கோல் இந்தியா’ நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி உற்பத்தியைப் பொறுத்தவரையில் 2019ஆம் ஆண்டில் 582.8 மில்லியன் டன் அளவிலான நிலக்கரி மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது 2.2 சதவிகித வீழ்ச்சியாகும். 

நிலக்கரி உற்பத்தியில் சரிவு ஏற்பட்டதன் விளைவாகவே நிலக்கரி விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மின்சார உற்பத்தியிலும் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.மாதாந்திர அடிப்படையில், டிசம்பர் மாதத்தில் மட்டும் 1.9 சதவிகித சரிவுடன் 53.63 மில்லியன் டன் நிலக்கரி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நிலக்கரி வாயிலான மின் உற்பத்தி, 2019ஆம் ஆண்டில் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவைச் சந்தித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

;