tamilnadu

img

 நாட்டில் கடும் வறட்சி நிலை மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் -சிபிஎம்

நாட்டின் பல பகுதிகளிலும் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு துல்லியமான மற்றும் பொருத்தமான நிவாரண நடவடிக்கைகளை  மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி, ஜனநாயக எண்ணம் கொண்ட விவசாய சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளுடன் கலந்துபேசி, மக்களைத் திரட்டி, போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்துக் கிளைகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் தலைநகர் புதுதில்லியில் உள்ள மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே. கோபாலன் பவனில் ஜூன் 7ஆம் தேதி தொடங்கியது. இது 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இடையே நாட்டில் நிலவும் கடும் வறட்சி நிலை குறித்து மத்தியக்குழு நிறைவேற்றியுள்ள தீர்மானம் வருமாறு:

நாட்டின் பல பகுதிகள் கடும் வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஸ்கைமெட் என்னும் தனியார் பருவநிலை குறித்துக் கண்காணித்திடும் முகமை (Skymet-private weather monitoring agency)யின் கூற்றுப்படி, கடந்த 65 ஆண்டுகளில் இவ்வாறு இரண்டாவது தடவை கடும் வறட்சி நிலைமை ஏற்பட்டுள்ளது. 2012இல் தொடர் மழைபொழிவு குறைவு காரணமாக மழைநீரின் குறைவு 31 சதவீதம் வரை அதிகரித்தது. இந்த ஆண்டு, பருவகாலங்களுக்கு முன் பெய்திடும் மழை நீரின் அளவு 25 சதவீதம் குறையும் என்று செய்திகள் கூறுகின்றன.

நாட்டிலுள்ள மக்கள் தொகையில் 40 சதவீதத்தினர் அல்லது 50 கோடி (500 மில்லியன்) பேர்களுக்கும் அதிகமாக கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என இதுதொடர்பாக ஆய்வு செய்திடும் நம்பத்தகுந்த அமைப்புகள் அபாய எச்சரிக்கையை அறிவித்துள்ளன. ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்ட்ரம், கர்நாடகம், பீகார், குஜராத், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களும் மற்றும் இவற்றைச் சுற்றியுள்ள மேற்கு வங்கம், ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் மாவட்டங்களும் மிகவும் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளன.

நாட்டின் அணைகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரின் அளவும் மிகவும் வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. மத்திய அரசு, மேலே குறிப்பிட்ட மாநிலங்களில் சிலவற்றிற்கு வறட்சி எச்சரிக்கை விடுத்திருக்கிறது. பாஜக தலைமையில் உள்ள மத்திய அரசாங்கம் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிவாரணம் எதுவும் அளித்திட முன்வரவில்லை. தற்போதுள்ள மிகவும் அதீதமான வறட்சி நிலைமையை தேசியப் பேரிடர் (National calamity) என அறிவித்து, போர்க்கால அடிப்படையில் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மக்களின் குடிதண்ணீர்த் தேவைக்கும் மற்றும் கால்நடைகளுக்கான தீவனங்களுக்கும் கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. பயிர் விளைச்சலும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இவற்றின் காரணமாக மக்கள் பல இடங்களில் தங்கள் வாழ்விடங்களிலிருந்து புலம்பெயர்ந்து செல்லும் நிலை உருவாகி இருக்கிறது. பல இடங்களில் பட்டினிச் சாவுகள் ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. வறட்சி நிலைமை மேலும் சீர்கேடடையக்கூடிய விதத்தில் நிலைமைகள் நீடிக்கின்றன.

மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின்கீழ் நிலுவையில் உள்ள ஊதியங்களை உடனடியாக விடுவித்திட வேண்டும், மாணவர்களின் பள்ளிக் கட்டணங்களைத் தள்ளுபடி செய்திட வேண்டும் மற்றும் நிவாரண உதவிகளை துரிதகதியில் அளித்திட முன்வர வேண்டும்.

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு துல்லியமான மற்றும் பொருத்தமான நிவாரண நடவடிக்கைகளை  மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி, ஜனநாயக எண்ணம் கொண்ட விவசாய சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளுடன் கலந்துபேசி, மக்களைத் திரட்டி, போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்துக் கிளைகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுக்கிறது.

இவ்வாறு மத்தியக்குழு கோரியுள்ளது.

(ந.நி.)