tamilnadu

img

மருத்துவக் கல்வியை சீரழிக்க மசோதா நிறைவேற்றம்

கூட்டாட்சி மீது ஒவ்வொரு நாளும் ஈவிரக்கமற்ற தாக்குதல் நடத்துகிறீர்கள்
மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து சு.வெங்கடேசன் ஆவேசம்

இந்தியாவில் அதிகமான மருத்துவர்களை கொடுக்கின்ற மாநிலம் தமிழ்நாடு. ஆனால் இன்றைக்கு நீட் உள்ளிட்ட தேர்வுகளால் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக நாங்கள் இருக்கிறோம். தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தனியார் கல்லூரியில்  கட்டணத்தை முழுமையாக கட்டுப்படுத்த சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ஆனால் இந்த புதிய மசோதா 50 சதவீத இடத்திற்கான கட்டணத்தை மட்டுமே ஒழுங்கு செய்கிறது; மீதம் 50 சதவீத இடங்களுக்கான கட்டணத்தை கட்டுப்படுத்த முடியாது; அதை கல்லூரிகள் முடிவு செய்யலாம் என்கிறது. அதேபோல தனியார் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் 100 சதவீத கட்டணத்துக்கும் கட்டுப்பாடு இல்லை.  

நீங்கள் நீட் தேர்வைக் கொண்டு வந்தபோது என்ன சொன்னீர்கள்? வணிகமயத்தை முழுமையாக தடுப்பதற்காகத்தான் கொண்டு வருவதாகச் சொன்னீர்கள். ஆனால் இன்றைக்கு உங்களது நோக்கம் முழுமுற்றாக தோல்வி அடைந்திருக்கிறது. அப்போது நன்கொடையாகக் கொடுத்தவர்கள் இப்பொழுது கட்டணமாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது தான் நடந்து கொண்டிருக்கிறது.  அதேபோல டாக்டர்.ராய் செளத்திரி கமிட்டி 2014 நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை 92 வது குறிப்பிலே கூறுகிறது: “தனியார் கல்லூரிகளுடைய தவறான நடவடிக்கையை கட்டுப்படுத்தத் தான் இவற்றை நாங்கள் கொண்டு வருகிறோம். மாநில அரசு இவற்றை விரும்பவில்லை என்றால் கட்டாயப்படுத்தக்கூடாது” என்று சொன்னது. ஆனால் நீங்கள் இரண்டையும்  மீறினீர்கள். இன்றைக்கு மாநில அரசின் உரிமைகள் முழு முற்றாக அழிக்கப்படுகிறது. அரசியல் சாசன சட்ட விவாதத்தினுடைய தொகுப்புரையில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்கள் நவம்பர் 25, 1949ல் குறிப்பிட்டார். “மாநில அரசுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற உரிமை அரசியல் சட்டத்தால் கொடுக்கப்பட்டதே ஒழிய மத்திய அரசால் கொடுக்கப்பட்டதல்ல. எனவே அந்த எல்லைக் கோட்டை மத்திய அரசு நினைத்த போதெல்லாது மாற்ற முடியாது” என்று சொன்னார். ஆனால் நீங்கள் மாற்றக் கூடவில்லை: முழு முற்றாக அழிக்க நினைக்கிறீர்கள்.  ஒவ்வொரு நாளும் இரக்கமற்ற தாக்குதல் 17வது நாடாளுமன்ற  கூட்டத்தொடரின் துவக்கத்தில் இருந்து இப்போது வரை மாநில அரசுகளின் உரிமைகள் மீது இரக்கம் அற்ற தாக்குதல்கள் ஒவ்வொரு நாளும் இந்த அவையில் இந்த வகையிலேயே நடத்தப்படுகிறது. மிகுந்த வேதனையோடு நாங்கள் குறிப்பிடுகின்றோம். மிக மிக முக்கியமாக, மாநில அரசுகளை உயிரற்ற ஒன்றாக நடத்த நினைக்கிற பல்வேறு சட்டங்களைப் போலவே இந்த மசோதாவும் இருக்கிறது.

இப்போது இருக்கிற மருத்துவ கவுன்சிலில் சிக்கல்கள் இருந்தால் அதை சரி செய்யலாம். இப்பொழுது நடைமுறையில் இருக்கிற கவுன்சில், அடிப்படையில் கூட்டாட்சித் தத்துவத்தின்படி இருக்கிறது. ஒரு ஜனநாயகத் தன்மை கொண்டதாக இருக்கிறது. மருத்துவர்கள் தங்களுக்குள்ளேயே தேர்வு செய்கிற உயர் அமைப்புகளாக இருக்கிறது. ஆனால் இன்றைக்கு கொண்டு வந்துள்ள இந்த புதிய மசோதாவின் படி, ஆறு மாநிலங்களினுடைய பிரதிநிதிகள் தான் ஏக காலத்திலே இந்த கவுன்சிலிலே இருப்பார்கள். ஏறக்குறைய 23 மாநிலங்களினுடைய பிரதிநிதிகள் எப்போதும் இந்த உயர் கமிட்டிகளில் இருக்க முடியாது என்ற நிலை இருக்கிறது .  எனவே புதிய தேசிய மருத்துவ ஆணைய சட்ட மசோதாவை முழு முற்றாக நாங்கள் எதிர்க்கிறோம்.  இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது . சமூக நீதிக்கு எதிரானது என்பதையும் இங்கே பதிவு செய்கிறேன்.

சு.வெங்கடேசன் உரையிலிருந்து...

;