tamilnadu

img

மோடி அரசின் அனைத்து வாக்குறுதிகளுமே மக்களை முட்டாள்களாக்கும் கண்துடைப்பு - ஏ.எம். ஆரிப்

புதுதில்லி, டிச. 5-

மோடி அரசாங்கத்தின் அனைத்து வாக்குறுதிகளுமே மக்களை முட்டாள்களாக்கும் கண்துடைப்பே என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர், வழக்குரைஞர் ஏ.எம். ஆரிப் கூறினார்.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் துணை மானியங்களுக்கான விவாதத்தில் பங்கேற்று ஏ.எம். ஆரிப் பேசியதாவது:

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட சமயத்தில் மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள், ஜிடிபி வளர்ச்சி குறித்தும், பொருளாதாரத்தில் ஐந்து டிரில்லியன் டாலர் எய்த இருப்பது குறித்தும்  கூறியதை இப்போது நினைவுகூர்கிறேன். தற்போது நம் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 4 சதவீதத்திற்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இப்போதும்கூட இந்த அரசாங்கம் என்ன சொல்கிறது? நம் நாடு ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதாக கூறிக் கொண்டிருக்கிறது.   நம் நாட்டின் பொருளாதாரம் ஒரு டைம் பாம் (time bomb) போன்று இருந்து வருகிறது. அது எந்த நிமிடத்திலும் வெடிக்கக் கூடும். மாண்புமிகு பிரதமர் அவர்களும் அவருடைய நேசமிக்க கார்ப்பரேட் நண்பர்களும் இந்தியா ஒளிர்ந்துகொண்டிருப்பதாகக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அரசாங்கம் வறுமையைக் குறைத்திடவில்லை. மாறாக, அரசின் தரவுகளில் ஏழைகளின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளது. அரசின் தேசிய புள்ளிவிவர இன்ஸ்டிட்யூட்டால் ஒவ்வோராண்டும் அளிக்கப்பட்டு வந்த நுகர்வோர் விலைவாசிக் குறியீட்டெண் 2017, 2018 ஆண்டுகளுக்கு  வெளியிடப்பட வில்லை.   

கடந்த நாற்பதாண்டுகளில் இல்லாத அளவிற்கு இவர்களின் ராமர் ராஜ்ஜியத்தில் கிராமப்புறங்கள் மிக மோசமான அளவில் வறுமையை எதிர்கொண்டிருக்கின்றன. ஆனாலும், இந்த அரசாங்கம் தரவுகளை மறைப்பதன் மூலம் மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறது. அரசாங்கம் உண்மையான தரவுகளை வெளியிடுமானால், மக்கள் நாட்டின் உண்மைச் சித்திரத்தைத் தெரிந்து கொள்ள முடியும்.

ஆட்சியாளர்கள் தங்கள் பிரச்சாரத்தின் மூலமாக மறைத்து வரும் மற்றுமொரு விஷயம் வேலையின்மையாகும். நாட்டின் உழைப்புச் சக்தியை  அளிக்கக்கூடிய மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலையில்லை. இந்த அரசாங்கம் இது தொடர்பாக அளித்த வாக்குறுதி என்ன? ஒவ்வோராண்டும் 2 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றது.  அதன்மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் எட்டு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால் இந்தக் காலத்தில் இந்த  அரசு வெறும் 18 லட்சம் வேலைகளை மட்டுமே உருவாக்கி இருக்கிறது. 

நம் மாண்புமிகு பிரதமர் கனவுகளை விற்பவர் என்பதில் சந்தேகமில்லை. விவசாயம் நம் நாட்டின் ஏழை விவசாயிகளுக்கு ஒரு மரண விளையாட்டாக மாறி இருக்கிறது. விவசாயிகளுக்கு அரசாங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்டு வந்த மான்யங்கள், கடன்கள் போன்றவை ஒழித்துக்கட்டப்பட்டதன் காரணமாக மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், தற்கொலைப் பாதைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக, மிகவும் தம்பட்டம் அடிக்கப்பட்ட, பிரதான மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் 2016இல் தொடங்கப்பட்டது. எனினும், முந்தைய பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களிலும், இப்புதிய காப்பீட்டுத் திட்டத்திலும் இருக்கிற அடிப்படை பிரச்சனைகள் அனைத்தும் அநேகமாகத் தொடர்கின்றன. இப்புதிய காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 45 சதவீத அளவிற்கு போலியாக காப்பீடு பெற்றிருக்கிறார்கள் என்று மத்திய தணிக்கைத்துறைத் தலைவர் (சிஏஜி) கண்டுபிடித்திருக்கிறார். இதுவரை, இந்தத் திட்டமானது மாபெரும்  தோல்வியாகும். கார்ப்பரேட்டுகள் வாங்கிய கடன்களில் 10 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிற அதே சமயத்தில், விவசாயிகள் வாங்கிய கடன்களில் வெறும் 10 சதவீத அளவிற்கே கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இதிலிருந்து எழும் கேள்வி என்னவெனில், இந்த அரசாங்கம் கார்ப்பரேட்டுகளுக்கானதா, அல்லது, விவசாயிகளுக்கானதா என்பதாகும்.

அதேபோன்று, உணவு, ரசாயன உரங்கள் மற்றும் பெட்ரோலியத்திற்கான மான்யங்களில் 7.5 சதவீத உயர்வு என்பதும் உண்மைகளை மூடி மறைத்துக் கொண்டிருக்கிறது. இவற்றிற்கு சென்ற ஆண்டு 15 சதவீத மான்யம் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் 1000 கோடி ரூபாய் உணவுக்கான மான்யத்திலும், 413 கோடி ரூபாய் ரசாயன உரங்களுக்கான மான்யத்திலும் வெட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

‘இந்தியாவில் உற்பத்தி செய்க’ (‘Make in India’) என்றால் என்ன? உண்மையில் இதன் பொருள் ‘இந்தியாவில் உற்பத்தி செய்க’ என்பதல்ல. மாறாக, ‘இந்தியாவை விற்றுக்கொண்டிருக்கிறோம்’ என்பதாகும். மோடி அரசாங்கம், நம்முடைய மகாரத்னா பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் உட்பட அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களையும் விற்பதில் பெரும் நாட்டம் கொண்டிருக்கிறது.  நுண்ணிய, சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் பிரிவுகள் இந்த அரசாங்கத்தின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாகவும், ஜிஎஸ்டி அமலாக்கம் காரணமாகவும் ஓரங்கட்டப்பட்ட மற்றுமொரு துறையாகும்.

இந்த அரசாங்கத்தின் மற்றுமொரு நகைக்கத்தக்க திட்டம் என்பது பிரதான மந்திரி ஓய்வூதியத் (Pradhan Mantri Shram Yogi) திட்டமாகும். இதன்கீழ் இத்திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு 32 ஆண்டுகள் கழித்து ஓய்வூதியம் வழங்கப்படுமாம். சர்வதேச தொழிலாளர் யூனியன் கூற்றின்படி இந்தியாவில் 82 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் முறைசாராத் தொழிலாளர்களாவார்கள். இதன்படி சுமார் 40 கோடி தொழிலாளர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியரின் சராசரி ஆயுள் 68 ஆண்டுகளாகும். ஒரு கேசுவல் தொழிலாளி, மிகவும் மோசமான நிலைமைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஆயுள் இதைவிடக் குறைவாகும். இவர்களில் எத்தனைபேர் 32 ஆண்டுகளுக்குப்பின் அரசாங்கம் அளிப்பதாகக் கூறும் ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு உயிருடன் இருப்பார்கள்?

மோடி அரசாங்கத்தின் மிகவும் தம்பட்டம் அடிக்கப்பட்ட மற்றுமொரு திட்டமான, ‘பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் திட்டத்திற்கு’ (Beti Bachao Beti Padhao Programme),  ஒதுக்கீடு செய்துள்ள தொகையைப் பார்த்தாலே, இந்த அரசாங்கம் எந்த அளவிற்கு வஞ்சகமான ஒன்று என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். முன்பே இத்திட்டத்திற்காக 255.9  கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது அது வெறும் 100 கோடி ரூபாயாக வெட்டிக் குறைக்கப்பட்டிருக்கிறது. மிகவும் முக்கியமான மதிய உணவுத் திட்டத்திற்கு, சென்ற ஆண்டு செலவினத்துடன் ஒப்பிடுகையில், வெறும் 51 கோடி ரூபாய் மட்டுமே அதிகரிக்கப்பட்டிருப்பதையும் பார்க்கிறோம்.

எதார்த்தத்தில், இதன்பொருள் பள்ளிக்குச் செல்லும் கோடிக்கணக்கான குழந்தைகளுக்குக் கேடு விளைவிப்பது என்பதேயாகும். தலித்துகள், பழங்குடியினர் தொடர்பாக இந்த அரசின் அணுகுமுறை என்ன? இந்த அரசாங்கத்தின் கொள்கைகளால் தலித்துகளும், சிறுபான்மையினரும் மிகவும் மோசமானமுறையில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும், எங்கேயும் ஒருவிதமான அச்ச உணர்வுடனேயே வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

உண்மையில் இவர்கள் ஆட்சியானது கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே ‘நல்ல நாள்’ (அச்சே தின்) ஆகும். வங்கி மறுகட்டமைப்பு (Banking recapitulation) என்ற பெயரில், கார்ப்பரேட்டுகளுக்கு வங்கிகளின் நிதியை மடைமாற்றம் செய்வது என்பது இந்த அரசாங்கத்தின் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான மற்றுமொரு தந்திரமான சூழ்ச்சியாகும். சென்ற ஆண்டு, வங்கி மறுகட்டமைப்புக்கு ஐந்து லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு அது 10 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்தப்பட்டிருக்கிறது.

நாட்டில் எதார்த்தத்தில், அனைத்து வங்கிகளுமே செயல்படா சொத்துக்களின் விளைவாகக் கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கின்றன.

இவ்வாறாக இந்த அரசாங்கத்தின் அனைத்து வாக்குறுதிகளுமே மக்களை முட்டாளாக்கும் விதத்திலான கண்துடைப்பேயாகும். நாட்டின் உண்மையான விவரங்களை திரித்தும், பூதாகரப்படுத்தியும் வெளியிடப்படும் தரவுகள் மூலம் நாட்டின் உண்மையான எதார்த்த நிலைமைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன. எப்படி கூட்டுக்களவாணி முதலாளித்துவம்,  சாமானிய மக்களின் துன்ப துயரங்களை மேலும் மோசமானதாக்கும் என்பதற்கு இந்த அரசாங்கம் ஒரு சரியான எடுத்துக்காட்டாகும்.

இந்த அரசாங்கத்திடம் ஒரேயொரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன். இதர மாண்புமிகு இதர உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதைப்போல நானும் நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சித் திட்டத்திற்கான நிதியை (MPLAD fund) ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் கூடுதலாக இரண்டு கோடி ரூபாய் உயர்த்திடலாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ஏ.எம். ஆரிப் பேசினார்.

(ந.நி.)

;