tamilnadu

img

ஒஎன்ஜிசி வேலைவாய்ப்புக்கான ஓபிசி இடஒதுக்கீட்டில் முறைகேடு... பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அனுப்பிய நோட்டீசுக்கும் பதிலளிக்க மறுப்பு

புதுதில்லி:
பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில், மத்திய பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி எனப்படும் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில், (Oil andNatural Gas Corporation - ONGC) பெரியஅளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுதொடர்பாக ஓஎன்ஜிசி நிறுவனம்பதிலளிக்க வேண்டும் என்று பிற்படுத்தப் பட்டோருக்கான தேசிய ஆணையம் (TheNational Commission for BackwardClasses - NCBC) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

என்.சி.பி.சி. தொகுத்த தகவலின்படி,ஓ.என்.ஜி.சி. 1993 முதல் இடஒதுக்கீட்டின் படி ஊழியர்களை நியமிக்கவில்லை என்றும் இதுதொடர்பாக கேள்வி எழுப்பிய, பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) வகுப்பைச் சேர்ந்தஊழியர்களுக்கு ஓஎன்ஜிசி நிர்வாகம் துன்புறுத்தல்களை அளித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், இதுதொடர்பாக ஆகஸ்ட் 25 அன்று காலை 11.30 மணிக்கு ஆணைய அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம்அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதற்கான நோட்டீஸை கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதியன்றே அனுப்பி வைத்துள்ளது.“நீங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆஜராகவில்லை என்றால், ‘ஓஎன்ஜிசி நிர்வாகத்தால் விளக்கம் அளிக்க முடியவில்லை’ என்று எடுத்துக் கொள்ளப்படும்; மேலும்,ஆணையத்தின் முன் உங்கள் வருகையைஉறுதிப்படுத்துவதற்காக இந்திய அரசியலமைப்பின் பிரிவு 338 பி இன் பிரிவு (8)இன் கீழ் சிவில் நீதிமன்ற அதிகாரங்களைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று நோட்டீஸில் பிற்படுத்தப் பட்டோர் ஆணையம் எச்சரித்துள்ளது.

மத்திய அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் இதர பிற்படுத்தப்பட்டோர் எனப்படும் ஓபிசி வகுப்பினருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டாக வேண்டும் என்பது சட்டம் ஆகும்.ஆனால், 1993-ஆம் ஆண்டில் ஓஎன்ஜிசியில் வெறும் 11 ஓபிசி வகுப்பினருக்கு மட்டும்தான் வேலை வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது. மொத்த காலியிடம் 286 என்றநிலையில், அந்த ஆண்டில் மட்டும் சட்டப்படி 77 ஓபிசி வகுப்பினருக்கு வேலை வாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும். 1994 ஆம் ஆண்டில் 99 காலியிடம் இருந்துள்ளது. ஆனால், அந்த ஆண்டு 8 ஓபிசி வகுப்பினருக்கு மட்டுமே வேலை வாய்ப்புவழங்கப்பட்டுள்ளது. சட்டப்படி 26 பேருக்கு வாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும்.இந்த நிலைமை 1993 முதல் தொடர்ந்து 2016 வரை 13 ஆண்டுகளுக்கு தொடர்ந்து நடந்து வந்துள்ளது. 

இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதமே ஓஎன்ஜிசி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் பதிலளிக்கவில்லை என்று பிற்படுத்தப் பட்டோர் தேசிய ஆணையத்தின் துணைத்தலைவர் லோகேஷ் குமார் பிரஜாபதி கூறுகிறார்.ஓஎன்ஜிசி அதிகாரிகளுக்கு இடஒதுக்கீடு குறித்த எந்த பொது அறிவும் இல்லை என்ற குற்றச்சாட்டையும் என்சிபிசி ஆணையம் வைத்துள்ளது.

;