tamilnadu

img

25 கோடி தொழிலாளர் வேலைநிறுத்தம் மோடி அரசுக்கு எச்சரிக்கை

புதுதில்லி, ஜன.8- மத்தியத் தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்திருந்த அகில இந்திய வேலை நிறுத்தம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. சுமார் 25 கோடி பேர் மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக இவ்வேலைநிறுத்தத்தில் பங்கு கொண்டார்கள்.
மின் ஊழியர்கள் முழுமையாக வேலைநிறுத்தம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பணியாற்றும் 25 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுதும் வேலை செய்திடும் 15 லட்சம் மின் ஊழியர்கள், பொறியாளர்கள் வேலைநிறுத்தத்தில் முழுமையாகப் பங்கேற்றதாக, அகில இந்திய மின் பொறியாளர் சம்மேளனத்தின் தலைவர், சைலேந்திர துபா, பிடிஐ செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார்.
சுரங்கங்கள் ஸ்தம்பிப்பு
ஜார்கண்ட் மாநிலத்தில் நிலக்கரிச் சுரங்க வேலைகள் முழுமையாக ஸ்தம்பித்தன. நிலக்கரிச் 
சுரங்கத் தொழிலாளர் சங்க தலைவர் ஏ.கே. ஜா கூறுகையில், தொழிலாளர்கள் வேலைக்கு வராததால் நிலக்கரிச் சுரங்கப்பணிகள் முழுமையாக ஸ்தம்பித்தன என்றார். தெலுங்கானா மாநிலத்தில் வங்கிப் பணிகள் முழுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகின. 
கேரளா
கேரளாவில் இயல்பு வாழ்க்கை முழுமையாக ஸ்தம்பித்தது. கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. அரசுப் போக்குவரத்து வாகனங்கள் முழுமையாக செயல்படவில்லை. கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. கோழிக்கோடு பல்கலைக்கழகம் இன்று நடத்தவிருந்த அனைத்துத் தேர்வுகளையும் வேறொரு நாளுக்கு ஒத்திவைத்தது.
குஜராத்
பாஜக ஆளும் குஜராத் மாநிலத்திலும் வங்கிப் பணிகள் கணிசமான அளவிற்குப் பாதிக்கப்பட் டன பல வங்கிக் கிளைகள் இழுத்து மூடப்பட்டன என்று பேங்க் ஆப் பரோடா ஊழியர் சங்கத்தின்  பொதுச் செயலாளர் திரஜ் தேசாய் செய்தியாளர்களிடையே தெரிவித்தார். நாகாலாந்து மாநிலத்தில் அஞ்சல் துறை முழுமையாக ஸ்தம்பித்தது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் முழக்கமிட்டார்கள். திரிபுராவில் சாலைப் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது.
தில்லி
தலைநகர் தில்லியில் தொழிற்சாலைகள், இன்சூரன்ஸ், வங்கிகள் முற்றாக முடங்கின. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் காலை 11.30 மணியளவில் ஐடிஓ-விலிருந்து நாடாளுமன்ற வீதி நோக்கி பேரணியாக வந்தனர்.
மும்பை
நாட்டின் நிதி தலைநகராகச் செயல்படும் மும்பை மாநகரமும் முழுமையாக ஸ்தம்பித்தது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பேரணியாக வீதிகளில் வந்தனர். எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் மும்பை ஏர்போர்ட்  அஞ்சலகம் வெறிச்சோடிக்கிடந்தது. ஒடிசா மாநிலத்திலும் வேலைநிறுத்தத்தின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளானது. மாநிலத்தின் பல பகுதிகளில் ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாநிலத்தின் பல பகுதிகளில் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. வங்கிகள் செயல்படவில்லை.
மேற்கு வங்கம்
மேற்கு வங்கத்தில் ஆளும் மம்தா அரசின் மிரட்டலையும் மீறி மாநிலத்தின் பல பகுதிகளில் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.  
(ந.நி.)

;