tamilnadu

img

குஜராத் கலவரத்தில் பாலியல் வன்கொடுமை பில்கிஸ் பானுவுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, வேலை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுதில்லி:குஜராத் கலவரத்தில் கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் பில்கிஸ் பானுவுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2002ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று குஜராத் மாநிலத்தின் கோத்ராவில் ரயில் எரிப்பு சம்பவம் நடந்த பிறகு அம்மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இந்த சம்பவம் நடந்த காலத்தில் நரேந்திரமோடி குஜராத் முதலமைச்சராக இருந்தார். அந்தக் கலவரத்தின்போது ராந்திக்பூர் கிராமத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானுவின் குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர். மார்ச் 3 ஆம் தேதி நடந்த இக்கொடூரச் சம்பவத்தின்போது பில்கிஸ் பானு ஒரு கும்பலால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். பில்கிஸ் பானு மட்டுமின்றி அவரது தாய் உட்பட நான்கு பெண்கள் இவரது வீட்டில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.இந்த சம்பவம் தொடர்பாக 20 முதல் 30 பேர் மீது வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய 12 பேருக்கு 2017ஆம் ஆண்டு மே மாதம் மும்பை உயர் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதே சமயத்தில் காவல்துறையினர் மற்றும் மருத்துவர் உட்பட ஏழு பேர் இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர். மேலும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த இழப்பீட்டை பில்கிஸ் பானு ஏற்க மறுத்துவிட்டார். இவ்வழக்கில் குற்றவாளிகள் சிலர் தப்பிவிட்டதாகவும், சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உச்சநீதிமன்றத்துக்கும், தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கும் சென்று பில்கிஸ் பானு முறையிட்டார். இந்த நிலையில் அவருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி குஜராத் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 23 அன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் தங்குவதற்கு இட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


;