tamilnadu

img

பட்டாசு வெடி விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் புதுவை அரசுக்கு சிபிஎம் கோரிக்கை

புதுச்சேரி, அக்.14-  பட்டாசு வெடி விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 25 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.  புதுச்சேரியை அடுத்து பாகூர் கொம்யூனுக்குட்பட்ட கரையாம்பத்தூர் அய்யனார் கோவில் ஏரிக்கரையில் பட்டாசு தயாரிக்கும் ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலையில் இம் மாதம 11 ஆம் தேதி பிற்பகல் திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது. தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு தயாரித்து கொண்டு இருந்த தொழிலாளர்கள் தீபா, வரலட்சுமி ஆகியோர் பட்டாசு வெடிவிபத்தில் உடல் சிதறி சம்பவத்தின் போதே பலியானார்கள். ஆலை உரிமையாளர் குணசுந்தரி, கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த வைத்தீஸ்வரி, கரையாம்பத்தூரை சேர்ந்த கலாமணி ஆகியோர் விபத்தில் பாதிக்கப்பட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் கலாமணியை தவிர்த்து மற்ற வைத்தீஸ்வரி, குணசுந்தரி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுகிழமை (அக்.13) இறந்தார்கள்.
சிபிஎம் தலைவர்கள் 
கரையாம்பத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், தமிழ்மாநிலக் குழு உறுப்பினர் வெ.பெருமாள், பாகூர் கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன், பிரதேசக்குழு உறுப்பினர்கள் கலியன், சரவணன், ராமமூர்த்தி, இளவரசி, கொம்யூன்குழு உறுப்பினகள் முத்துலிங்கம், சண்முகம், அரிதாஸ் மற்றும் பக்கிரி ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அரசின் நிவாரணம் கிடைக்க உரிய நடடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பட்டாசு வெடிவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தவர்கள். நாள் ஒன்றுக்கு ரூ.300 என்ற அடிப்படையில் ஒரு சில வாரங்களுக்கு முன்புதான் பட்டாசு தயாரிக்கும் பணிக்கு சேர்ந்துள்ளனர். விவசாயம் பொய்த்து போனதால் ஆபத்தான இத்தொழிலில் ஈடுபட்டு தற்போது பலியாகியுள்ளனர். இறந்தவர்கள் அனைவரும் குடும்பத்தை தலைமை தாங்கக் கூடிய பெண்கள். எனவே இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம், மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என்று மாநில அரசுக்கும், நிர்வாகம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உடனடியாக வழங்க வேண்டிய நிவாரணத்தை கொம்யூனியன் நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் என்றும் பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம் வலியுறுத்தியுள்ளார்.

;