tamilnadu

img

வெளிநாடு வாழ்வோருக்கு ஆன்லைன் மருத்துவ சேவை.... கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம்:
வெளிநாடுகளில் வாழும் மலையாளிகளுக்கு ஆன்லைனில் மருத்துவ சேவைகள் வழங்கப்படும். அதற்காக அவர்கள் கேரளத்தில் உள்ள மருத்துவர்களுடன் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளில் பேசலாம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். 

புதனன்று மாலை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: நோர்க்கா வலைத்தளத்தில் பதிவு செய்து செய்து சுகாதாரம் தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம். இந்திய நேரப்படி மதியம் 2 மணி முதல் 6 மணி வரை பிரபல மருத்துவர்களின் சேவையைப் பெறலாம். கைனகோளஜி, இஎன்டி, ஆர்த்தோ, பொது மருத்துவம் உட்பட அனைத்து தரப்பு மருத்துவர்களும் சிகிச்சைக்கான ஆலோசனைகள் வழங்குவார்கள்.

வெளிநாடுவாழ் கேரள மக்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஐந்து கொரோனா உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. நோர்காவின் முன்முயற்சியில் அங்குள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் குழுக்கள் இணைந்து இந்த உதவி மையங்கள் தொடங்கப்பட்டன.  இந்த உதவி மையங்களுடன் ஒத்துழைக்க தூதர்கள் கோரப்பட்டுள்ளனர். முக்கியமான பிரச்சனை அமெரிக்கா  உள்ளிட்ட நாடுகளில் மலையாளிகள் கொரோனா பாதித்து இறக்கும் செய்தி தொடர்ந்து வருவது. பல நாடுகளில் குடியேறிய சகோதரர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் நமது நாட்டுடன் தொடர்பு கொள்கிறார்கள்.
ஆறு மாதங்களுக்கும் குறைவாக வெளிநாட்டில் வேலை செய்யும் மலையாளிகளுக்கு இப்போது பதிவு அட்டை உள்ளது. அதுபோல் வெளிநாட்டில் படிக்கும் கேரள மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும். மலையாளிகளான மாணவர்களின் பதிவு நோர்கா ரூட்ஸ் வெளிநாட்டு வசதி மூலம் மேற்கொள்ளப்படும். அவர்களுக்கு காப்பீடு மற்றும் விமான டிக்கெட்டுகள் வழங்கப்படும். வெளிநாட்டில் படிக்கும் அனைத்து மாணவர்களும், படிக்க புதிதாக செல்வோரும் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படும் என்று முதல்வர் கூறினார்.

கொரோனா 9 பேருக்கு, டிஸ்சார்ஜ் 13
கேரளத்தில் புதனன்று 9 பேருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது. கண்ணூரில் நான்கு, ஆலப்புழாவில் இரண்டு, பதானம்திட்டா, திருச்சூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் தலா ஒருவருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் நான்கு பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். நிஜாமுதீன் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் இருவர். மூன்று பேர் தொடர்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்றுவந்த 13 பேர் புதனன்று நோயின் பிடியிலிருந்து விடுபட்டுள்ளனர்.

இதுவரை 345 பேரிடம்  கொரோனா  பாதிப்பு 19 உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 259 பேர் சிகிச்சையில் உள்ளனர்.கண்காணிப்பில் மொத்தம்1,40,474 பேர் உள்ளனர். வீடுகளில் 1,39,725 பேரும் மருத்துவமனைகளில்  749 பேரும் உள்ளனர். புதனன்று காலை மொத்தம் 169 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 11,986 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. அதில் 10,906 பேர் கோவிட் தொற்று இல்லாதவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். நிஜாமுதீன் மாநாட்டில் கலந்து கொண்ட 212 பேர் கண்டறியப்பட்டனர். இவர்களில், இருவர் உட்பட மொத்தம் 15 பேருக்கு கோவிட்  பாதிப்பு இருப்பது புதனன்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் கூறினார்.

கருணை இல்லா செயல்
பத்தனம்திட்டா தண்ணித்தோட்டில் கொரோனாவுக்காக வீட்டு கண்காணிப்பில் இருந்த பெண்ணின் வீடு மீது தாக்குதல் நடத்தியிருப்பது கருணை இல்லாத செயல். இது நடக்கக்கூடாதது. அந்த பெண்ணின் தந்தைக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது. முதல்வருக்கு புகார் அளித்த பிறகே வீட்டின் மீது தாக்குதல் நடந்துள்ளது. இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம். இதன் மீது காவல்துறை கடும் நடவடிக்கை மேற்கொள்ளும். நாடும் நாட்டு மக்களும் இதுபோன்ற செயல்களை கண்டிக்க வேண்டும். இதுபோன்று சமூகத்திற்கு இணக்கமற்று செயல்படுவோரை தனிமைப்படுத்த வேண்டும் என முதல்வர் கூறினார்.

;