புதுச்சேரி, பிப். 4- ஏஎப்டி, சுதேசி, பாரதி ஆகிய பஞ்சாலைகளை இணைத்து ஜவுளி பூங்கா அமைக்கக் கோரி சிபிஎம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரியின் பாரம்பரியமாக திகழும் ஏஎப்டி,சுதேசி,பாரதி ஆகிய மூன்று பஞ்சாலைகளை இணைத்து புதிய ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும். படித்த இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள ஏஎப்டி பஞ்சாலை முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதலியார்பேட்டை கிளைச் செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மூத்த பிரதேசக்குழு உறுப்பினர் தா.முருகன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள்,சிஐடியு பிரதேச துணைத் தலைவர் குணசேகரன், முன்னாள் பஞ்சாலை ஊழியர் வி.ராமகிருஷ்ணன் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினார். நகரச் செயலாளர் மதிவாணன், பிரதேசக்குழு உறுப்பினர்கள் சரவணன், கலியமூர்த்தி, மற்றும் பொன்னுரங்கம், ராஜமாணிக்கம், ராமலிங்கம் உள்ளிட்ட திரளானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.