tamilnadu

img

உலக புத்தக தின விழா

திருக்கோவிலூர், ஏப். 23-திருக்கோவிலூரில் உள்ள நூலகத்தில் உலக புத்தக தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிமாமணி சிங்கார.உதியன் தலைமை வகித்தார். கல்வியாளர் ப.மதிவாணன், மணலூர்பேட்டை நூலக வாசகர் வட்டத் தலைவர் கு.அய்யாக்கண்ணு, விளந்தை வாசகர் வட்டத் தலைவர் அ.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் ஜெ. பானு வரவேற்றார். நல்நூலகர் மு.அன் பழகன் தொடக்கவுரையாற்றினார்.விழாவில் மாவட்ட நூலக அலுவலர் இரா.சுப்பிரமணியன், தளவாடப் பொருள்களை நன்கொடையாகப் பெற்று, புரவலர் சேர்க்கையைத் தொடக்கி வைத்துப் பேசினார். வட்டாரக் கல்வி அலுவலர் இரா.முரளிகிருஷ்ணன், உலக புத்தக தின விழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் ஏ.வி.சரவணன், எழுத்தாளர்கள் அருள் நாதன் தங்கராசு, பெண்ணைவளவன், கலாம் மாணவர் விழிப்புணர்வு இயக்க மாவட்டத் தலைவர் பொன்.முருகன் ஆகியோர் உலக புத்தக தினம் குறித்து பேசினர். கல்யாணி கல்வி அறக்கட்டளைத் தலைவர் மு.கலியபெருமாள், ரூ.10 ஆயிரம் மதிப்பில் நூல்களையும், நூல் அடுக்கையும் நன்கொடையாக வழங்கினார்.


கர்நாடக மாநில தமிழ்ச் சங்க கூட்டமைப்பின் தலைவர் மைசூர் கு.புகழேந்தி, சமூக ஆர்வலர் வெ.செந்தில்குமார் ஆகியோர் தலா ரூ.ஆயிரம் செலுத்தி புரவலராக இணைந்தனர். ஓய்வுபெற்ற ராணுவ வீரர் கு.கல்யாண்குமார், நல்லதே செய் அறக் கட்டளை நிர்வாகிகள் கார்த்தி, விஜய், திருவரங்கம் ராம்முரளி, அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க நிர்வாகி மணலூர்பேட்டை ச.குழந்தைவேல் ஆகியோர் பருவ இதழ்களுக்கான ஆண்டு சந்தாவையும், ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர்கள் செந்தில்குமார், மணி ஆகியோர் நாற்காலிகளையும் நன்கொடையாக வழங்கினர்.வானவில் கல்வி அறக்கட்டளைத் தலைவர் வே.ஜெயக்குமார், நல்லாசிரியர் சாதிக்ஷெரிப், தற்காப்புக்கலை பள்ளி நிறுவனர் கே.முருகன், திருக்குறள் கழக அறக்கட்டளை நிர்வாகி ராஜகோபால், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தர்மராஜன், நியூ செஞ்சுரி புத்தக நிலைய மேலாளர் சேகர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நூலகப் பணியாளர்கள் சு.சம்பத், ஏ.அய்யப்பன், ச.தேவி, ஆ.வனிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நூலகர் மு.சாந்தி நன்றி கூறினார்.

;