tamilnadu

உலகமே வியக்கும் வகையில் சந்திரயான்-2  மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம் 

அறந்தாங்கி, ஆக.27- புதுக்கோட்டை அறந்தாங்கியில் கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளை 20ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. அறக்கட்டளை தலைவர் வி.சுப்பிரமணியன் வரவேற்றார். இதில்  இஸ்ரோ விஞ்ஞானியும் தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மாநில மன்ற துணைத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்றார். அறந்தாங்கி நகரில் சிறப்பாக பணியாற்றி கொண்டிருக்கும் பலருக்கு மண்ணின் மைந்தன் விருதுகளை வழங்கி அவர் பேசினார். அவர் பேசும்போது, விண்வெளியில் இந்தியா வியக்கத்தகு வளர்ச்சி அடைந்திருக்கிறது. ரஷ்யா, அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் நிலவுக்கு பலமுறை விண்கலங்களை அனுப்பி தோல்வி அடைந்திருக்கின்றன. தற்போது அனுப்பி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் இந்தியா தனது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று சாதனை படைத்து வருகிறது. வரும் செப்டம்பர் 7ம் தேதி சந்திராயன் 2-ன் பங்கு இந்த உலகமே வியந்து பார்க்கும் நிலை வரும். இது இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு முக்கியமான நாளாக அமையும். தமிழக அரசு அறிவியல் வளர்ச்சிக்கு முதலில் 100 பள்ளிகளை தேர்வு செய்துள்ளது. அதில் 12 அரசு பள்ளிகளில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை கொண்டு 15 கிலோ எடையுள்ள செயற்கைகோளை நான்கு கால்களில் இறங்கும் வகையில் காஞ்சிபுரம் அருகே இடம் அமைத்து அவர்களின் ஆராய்ச்சிக்கு உதவி செய்து வருகிறது. அறிவியல் அறிவை வளர்க்க . பள்ளி, கல்லூரி அளவில் கண்காட்சி நடத்தி பின்னர் அவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் அறிவியல் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது என்று கூறினார். நிகழ்ச்சிக்கு கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளை கெளரவ தலைவர் கே.சிசுரேஷ்குமார் தலைமை வகித்தார். அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.   இவ்விழாவில் காரைக்குடி அணு விஞ்ஞானி சி.ரவிச்சந்திரன், காவல் துணை கண்காணிப்பாளர் கோகிலா, விஜய் தொலைக்காட்சி சி.கோபிநாத், அறந்தாங்கி நிஷா, திரைப்பட நடிகர் போஸ் வெங்கட், இயக்குநர் கெளதம்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர் பேராசிரியர் பழனிதுரை, காசிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக அறக்கட்டளை செயலாளர் எம்.ஜி. ராஜா நன்றி கூறினார்.

;