பாட்னா:
மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். ஆனால் இந்த முடிவை செயற்குழு ஏற்க மறுத்துவிட்டாலும், ராகுல் காந்தி தனது முடிவில் பிடிவாதமாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவுக்கு வேதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ட்விட்டரில் பதிவிட்டுள்ள லாலு, “காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பது அவர் சார்ந்த கட்சிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுக்குமே தற்கொலை முடிவாக அமையும்” என்று கூறியுள்ளார்.
“பாஜகவை அகற்ற வேண்டும் என்ற பொதுவான இலக்கோடு எதிர்க்கட்சிகள் இருந்தன. ஆனால், தேசிய அளவில் அதனைக் கொண்டு செல்லாததால் தோல்வி அடைந்துவிட்டோம். எனினும் இந்த குறிப்பிட்ட தேர்தலின் முடிவு என்பது தேசத்தின் பன்முகத்தன்மை, வேற்றுமையில் ஒற்றுமே என்பதை ஒருபோதும் மாற்றிவிடாது.
மேலும், காந்தி - நேரு குடும்பத்தைத் தவிர்த்து கட்சிக்கு வேறுயாரேனும் தலைவராக வரும்பட்சத்தில் நரேந்திர மோடி, அமித் ஷா படை, புதிய தலைவருக்கு பொம்மைத் தலைவர் என்று வண்ணம் பூசிவிடுவார்கள். சோனியா, ராகுல் மூலமே புதிய தலைவர் இயக்கப்படுகிறார் என்று பேசுவார்கள். எதற்காக அதுபோன்ற அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு ராகுல் காந்தி வாய்ப்பைத் தர வேண்டும்?” இவ்வாறு லாலு கூறியுள்ளார்.
பீகார் மாநிலத்தில் காங்கிரசுடன் சேர்ந்து போட்டியிட்ட ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி, 19 இடங்களிலும் படுதோல்வி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.