tamilnadu

img

ஆர்எஸ்எஸ் நாட்டுக்கு சேவை செய்ததா?

நாக்பூர்:
ஆர்எஸ்எஸ் அமைப்பு, நாட்டுக்கு சேவை செய்தது என்று, நாக்பூர் பல்கலைக்கழகம், தனது வரலாற்று பாடப் புத்தகத்தில் திரிப்பு வேலை செய்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ளது. இந்த நாக்பூரில், அமைந்திருப்பதுதான் ராஷ்ட்டிர சந்த் துகாதோஜி மகராஜ் பல்கலைக்கழகம் ஆகும். இளங்கலை மற்றும் முதுகலை பாடங்கள் இங்கு கற்பிக்கப்படுகின்றன.இந்நிலையில், துகாதோஜி மகராஜ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை, இளங்கலை பட்டப் படிப்பிற்கான நான்காவது பருவத்திற்கு புதிய பாடங்களை இணைந்துள்ளது. அதில், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நாட்டுப்பணி என்ற பெயரில் சில பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே, முதுகலை வரலாற்றுப் பாடத்திலும் கடந்த 2003-04 ஆண்டில் ஆர்எஸ்எஸ் குறித்த அத்தியாயம் சேர்க்கப்பட்டது. தற்போது இளங்கலை வரலாற்றுப் பாடத்திலும் ஆர்எஸ்எஸ்- குறித்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி மற்றும் மார்க்சியம் குறித்தும் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக பாடத்திட்ட ஆணைய உறுப்பினர் சதீஷ் சாப்லே சமாளித்துள்ளார்.ஆனால், ஆர்எஸ்எஸ் பற்றி பாடம் வைப்பது தவறில்லை; அது நாட்டுப்பணி செய்ததாக எழுதி வைத்திருப்பதுதான் தவறு என்று மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் சாடியுள்ளார்.“துகாதோஜி மகராஜ் பல்கலைக்கழகத்திற்கு, ஆர்எஸ்எஸ் செய்த நாட்டுப்பணி குறித்த விவரங்கள் எங்கிருந்து கிடைக்கும்?” என்றும் கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ள சச்சின் சாவந்த், “பிரிட்டிஷாருக்கு ஆதரவாக இருந்த ஆர்எஸ்எஸ் அமைப்பு; நாட்டின் விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த அமைப்பாகும்; அதுமட்டுமல்ல, சுமார் 52 ஆண்டுகள் நாட்டின் தேசியக் கொடியையே தீண்டத்தகாததாக ஆர்எஸ்எஸ் வைத்திருந்தது; நமது அரசியலமைப்புச் சட்டத்தையும் அது ஏற்றுக் கொள்ளவில்லை” என்றும் குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ளார்.

;