tamilnadu

பழைய சொல், புதிய தேடல் ‘தவசம்’

காக்கை இதழில் தமிழர் திருநாள் குறித்து இரு கட்டுரைகள். க.முகுந்தன் எழுதிய ஒரு கட்டுரை, ‘பறவைகளால் உண்ணப்படும் நெல் மணிகளைச் சேகரித்த  ஆதி மனிதன் அதனை உணவாக்க பல்தேடல் முயற்ச்சிக்குப்பிறகு  அரிசியை சுடுநீரிலிட்டு  அரிசியைப் பதமாக்கிய அந்த தொடக்கக்கால சம்பவத்தைக் காண திரண்ட ஆதி மனிதர்களின் மகிழ்நிகழ்வே பொங்கல்’ . பொங்கலைப் போற்றுதும் கட்டுரையில் சி.அறிவுறுவோன், ‘பொங்குதல் என்பது குறிஞ்சி நிலத்தில் துவங்கி முல்லை, மருதம் நிலத்தைத் தொட்டது. புறநானூறு -168  பாடலின் படி சேரமான்கோதை என்பானுக்கு பிட்டங்கொற்றன் படை உதவி செய்திருக்கி றான். இவன் ‘காட்டுப்பசுவிடம் கறந்த பாலில் உலை வைத்து , புதிய திணை அரிசியை  அதில் இட்டு சந்தன மரத்து விறகில் தீ மூட்டிப் பொங்கலிட்டு வாழை இலையில் சேரமான்  கோதைக்குப் பகிர்ந்தளித்தான் ‘ என்பதாக கருவூர்க் கதம்பிள்ளை சாத்தனார் பாடி யுள்ளதைச் சுட்டிக்காட்டினார். ‘அருவி ஆர்க்கும் கழைபயில் நனந்தலை’ என்கிற பாட லில் காட்டுப் பன்றிகள் கிளறிய புழுதிப்பட்ட நிலத்தில்  விதைத்து , முற்றிய தவசத்தை  நல்லநாள் பார்த்து அறுத்து சேமித்து பொங்குவர்.

தவசம் என்பது என்னவாம்?

நரேந்திர மோடி நவம்பர் 8, 2016 அன்று 500,1000 நோட்டுகள் செல்லாதென அறிவித்து ஓராண்டு திரும்பிய நாளை ஒரு சமூக வலைதளம் ‘தவசம் -  DEMONETIZATION ANNIVERSARY’ என்கிற தலைப்பில் கேலி  செய்திருந்தது.  தவசம் - ஷ்ராத்தம் இறந்தவருக்கு ஓராண்டு கழித்து  கங்கை நதிக்கரையில் செய்யும் காரியம் ஷ்ரார்தம்.  இச்சொல் சாதம் - ஷ்ராதம் - ஷ்ராத்தம் வழியில் வந்தது. அதாவது சாதம் வழிச்சடங்கு. இதையே தானியங்கள் கொண்டு  செய்தால் தவசம். இதை திவசம் என்றும் சொல்வர். தவசம் என்பது தமிழ்ச்சொல்.

பெருமாள் முருகன் சிறுகதைகள் தொகுப்பில் ‘பதினொரு வரிசை அடுக்கு மொடாக்கள்’ என்றொரு சிறுகதையின் ஓரிடத்தில் ‘ஒவ்வொரு மொடமாகத் தவசம் காலியாகிக் கொண்டே வரும். அடி குன்றுமொடா காலியாகாது. அதற்குள் தவசம்  வீட்டுக்கு வந்து சேர பழையது நிரப்பப்படும்’. கழினியூரன் தொகுத்த சொலவடை கதைகளில் ‘தவசம்’ என்கிற சொல் இடம்பெற்றுள்ளது. ‘விறகு பொறுக்கி வித்து தவசம் வாங்கி வந்தாள்’  பைபிள் - ஆமோஸ் 8.6 வாசகம், ‘ நாங்கள் தவசம் விற்கத்தக்கதாக மாதப்பிறப்பும், நாங்கள் தானியத்தின் பண்டசாலைகளைத் திறக்கத்தக்கதாக ஓய்வுநாளும் எப்போது முடியும் ‘. கிராமங்களில் தானியங்களைச் சேமித்து வைக்கும் பானைக்கு ‘தவசப் பானை’ என்று பெயர்.  வாய் குறுகியும் அடிப்பகுதி அகன்றுமிருக்கும்.

நவதவசம் - நவதானியம்
தவசும் தானியமும் - எண்ணுமை ( இலக்கணம் )
‘சலவையோ பட்டோ தவச (ம்) தானியமோ’ என்கிறது  குற்றால குறவஞ்சி பாடல்.
தவசம் அளந்தவுடனே பணம் பூராவும் வந்திடணும் - வட்டார வழக்கு.
தவசம் - தவசு +அம்
கி.ரா தொகுத்த வட்டார வழக்குச்சொல் அகராதியின் படி, தவசம் - தானியம். சில இடங்களில் கம்பம் புல்லைக் குறிக்கிறது.

தவசு பிள்ளை  - திருமணம் போன்ற விசேச வீடுகளில் சமையல் செய்பவர். இதலிருந்து தவசம் என்பது தானியம் என்கிற ஒரு முடிவிற்கு வரலாம்.  உணவு கூலம் ஏழு. அவை - தவசம், பயறு, கடலை, விதை, முத்து, கொட்டை, நெற்று. தவசம் என்பது புல் பயிரினத்தில் விளைந்து துவசம் செய்து பிரித்தெடுக்கப்படும் விதை.  மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் ‘ தானியம்  என்பது தானியா என்கிற வடமொழிச் சொல்லிருந்து வந்ததாகவும் தவசம் என்பதே தமிழ்ச்சொல்  என்கிறார். தவசம் என்கிற சொல்லிருந்து வந்ததுதான் தவிடு, தவிட்டை.  இதன் பிற சொற்கள் - இறடி, ஏனல், கூலம், இருவி. ஔவையாரின் கொன்றை வேந்தன் ‘ அஃகமும் காசும் சிக்கெனத் தேடு ‘ என்கிறது. இதையே ஆத்திசூடி,  ‘அஃகம்  சுருக்கேல் ‘. இதிலிருந்து  தவசம், தானியம், கூலம், தினை என்பதை அஃகம் என்று சொல்லலாம்.