tamilnadu

img

மீண்டும் தலை தூக்கும் குருமூர்த்தியின் குரூரம்

நீங்கயெல்லாம் ஆம்பிள்ளையா ஏன் இருக்கீங்கன்னு தெரியலன்னேன்... என்று குரு மூர்த்தி துக்ளக் வார இதழின் பொன்விழாக்கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் குறித்து  திருவாய் மலர்ந்துள்ளார். அரசியல் ரீதியாக தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம் குறித்து அவர் விமர்சிப்பது குருமூர்த்தியின் சொந்த விருப்பு வெறுப்பு அரசியல் கருத்து என்றே வைத்துக்கொள்ளலாம். ஆனால் அவர் நீங்கயெல்லம் ஆம்பிளையா என பாலின பாகுபாட்டை தூக்கிப்பிடிக்கும் நோக்கில் கீழ்தரமான வார்த்தையின் மூலம் மறைமுகமாக பெண் சமூகத்தை இழிவு படுத்தும் உள்நோக்கத்தோடு பேசிகிறார். 
அவரின் இந்த கூற்றின் வழியாக உலகில் சரிபாதியாக உள்ள பெண் சமூகத்தை மட்டம்தட்டுவதோடு அவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்ற கருத்தை நிலைநிறுத்த முயல்கிறார். ஜனநாயக நாட்டில் ஆணும் பெண்ணும் சமம் என்ற அரசியல் சட்டம் தூக்கிப்பிடிக்கும் அங்கீகாரத்தை மறுதலித்து விட வேண்டும் என்ற ஆணவத்தையே அவரது உடல்மொழியின் குரூரம் காட்டுகிறது.
குருமூர்த்தியின் பேச்சு  மநு தர்மம் தூக்கிப்பிடிக்கும்  எந்தப் பருவத்தினளாயினும் தனது இல்லத்தில் கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச்செயலும் இயற்றலாகாது.  (மநுதரும சாத்திரம், அத்தியாயம் 5 செய்யுள் 147) என்ற ஆண் ஆத்திக்கத்தின் உச்சகட்டமாகவே வெளிப்படுகிறது. 
ஆனால் தமிழகத்தில் பெண்ணின் பெயரில்  ஆட்சி  கட்டிலில் அமர்ந்திருக்கும் அம்மாவின் அரசு குருமூர்த்தியின் பேச்சை தலைகுனிவாகவோ அல்லது கட்சிக்கு ஏற்பட்ட அவப்பெயராகவோ கருதவில்லை என்று தான் தோன்றுகிறது. இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பும் பெரிதாக எந்த எதிர்வினையும் காட்டவில்லை. 
 ஒருவேளை ஓபிஎஸ் தரப்பு வருங்காலத்தில் நாடாளுமன்றத்தில் மோடி அரசு கொண்டு வரும் மக்கள் விரோத மசோதாக்களுக்கு முன்னிலும் தீவிரமாக தனது பாராட்டை தெரிவிக்கும் விதத்தில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய வாய்ப்புள்ளது. 
ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் குருமூர்த்தி பெண் நலம் என்னும் புற்றுநோய் சேவை அமைப்பின்  நிகழ்ச்சியில் பேசியபோது நாட்டில் 30 சதவிகிதம் பெண்கள்தான் பெண்மையுடன் இருப்பார்கள் என கருதுவதாக கூறினார். பெண்கள் குறித்து இதுபோன்று காரி உமிழும் கருத்தை அம்மாவின் ஆட்சி நடைபெறும் இதே தமிழகத்தில்தான்  மீண்டும் மீண்டும் குரு மூர்த்தி முன் கொக்கரிக்கிறார். இது கட்சி வேறுபாடு, பதவியைத் தாண்டி மீண்டும் பெண்கள் ஆளும் சக்தியாகவோ அதிகாரத்தை கைப்பற்றும் சக்தியாகவோ மாறி விட கூடும் என்ற குருமூர்த்தியின் பதற்றத்தை வெளிச்சமிட்டு காட்டுகிறது. 
அதனால் தான் இன்று நான் அவன் இல்லை என்ற பாணியில் ஓபிஎஸ்சை சமாதானப்படுத்த குருமூர்த்தி தனது டுவிட்டர் பதிவில் 
-ஓ பி எஸ் சிடம் பேசிய போது அவரைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை. ஏன் அதிமுகவினர் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்கள் என்கிற அர்த்தத்தில் தான் கேட்டேன். அது அவருக்கும் தெரியும். அவர் தான் அதிமுகவை சசிகலா விடமிருந்து காப்பாற்றினார். அவர் மேல் எனக்கு மிகவும் மரியாதை என பதிவிட்டுள்ளார். 

இந்த பதிவு குருமூர்த்திக்கு பெண்களில் காலில் விழுவதுதான் பிரச்சனையா? அல்லது சசிக்கலாவின் காலில் விழுவதில் பிரச்சனையா என்ற கேள்வியை எழுப்புகிறது. 
ஏன் அதிமுகவினர் இதற்கு முன் ஜெயலலிதா காலில் விழுந்ததை குருமூர்த்தி பார்த்ததே இல்லையா. அதைவசதியாக மறந்துவிட்டாரா? இல்லை மறைக்க முயல்கிறாரா? 
இது ஒரு புறம் இருக்க இந்த ஆணாதிக்க மனோபாவம் குருமூர்த்தி என்ற தனி நபரின் பெண்கள் குறித்தான கருத்து என்று மட்டும் brகருதி கடந்து விட இயலாது. இங்கு பிரச்சனை குருமூர்த்தி, காஞ்சி சங்கராச்சாரியார், எச்.ராசா, எஸ்.வி சேகர் போன்றோர் அல்ல. அவர்கள் தூக்கி பிடிக்கும் பெண்களை இழிவு படுத்தும் மநுதர்மத்தை வலியுறுத்தும் ஆர்எஸ்எஸ் இந்துத்துவா சித்தாந்தமே. எனவே இன்றைய தேவை ஆர்எஸ்எஸ்-சின் பிற்போக்கு கொள்கைகளுக்கு எதிரான வலுவான சித்தாந்த போராட்டமாகும். 
 ஆர்எஸ்எஸ் சின் அரசியல் பிரிவான பாஜக நாடு முழுவதும் கால்பதிக்க துடிக்கும் நிலையில் இன்று குருமூர்த்தி வீட்டு பெண்களையும் பாதுகாக்கும் பொருட்டே வலுவான  சித்தாந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்
 

;