tamilnadu

img

பாசிச முற்றுகையின் பிடியில் ஜம்மு - காஷ்மீர் - தொகுப்பு : எஸ்.பி.ராஜேந்திரன்

2019 ஆகஸ்ட் 5 அன்று நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு அந்த பயங்கரத்தை பகிரங்கமாக அரங்கேற்றியது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்து, அம்மாநிலத்தை துண்டாடி இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றும் சட்டத் திருத்தத்தையும் நாடாளுமன்றத்தில் தனது மிருக பலத்தை பயன்படுத்தி நிறைவேற்றியது. 

செப்டம்பர் 5 உடன் ஒரு மாதம் முடிவடைந்தது. தற்போது ஒரு மாதத்தை தாண்டியுள்ள நிலையில் ஜம்மு- காஷ்மீர் முற்றாக முடக்கப்பட்டு, ஜனநாயகம் உயிரற்ற கூடாக மாற்றப்பட்டு, பாஜகவின் பாசிச கோரமுகம் அப்பட்டமாக அம்பலமாகி நிற்கிறது. ஜம்மு- காஷ்மீரிலும் முழுக்க முழுக்க ராணுவத்தினரின் நடமாட்டம் மட்டுமே மிஞ்சி நிற்கிறது. மக்கள் அச்சத்தின் பிடியிலும், உள்ளூர கொதித்துக் கொண்டிருக்கும் மனநிலையிலும் இருக்கிறார்கள். அங்கு கடந்த ஒரு மாத காலமாக என்ன நடந்தது என்பது இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள மக்களுக்கு எந்தளவிற்கு தெரிந்திருக்கிறது; உண்மையிலேயே பாஜகவின் பாசிச நர்த்தனம் எந்தளவுக்கு கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது என்பதை ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை.  இந்நிலையில் அங்கு சில முற்போக்கு பத்திரிகையாளர்கள் வேறு பெயர்களில் சென்று வந்திருக்கிறார்கள். குறிப்பாக தி வயர் இணைய ஏட்டின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் போன்றவர்கள் அங்கிருந்து பல்வேறு வழிகளில் தகவல்களை பெற்று அதனடிப்படையில் தி வயர் இணைய இதழ், ஆகஸ்ட் 5 முதல் செப்டம்பர் 5 வரை ஒவ்வொரு நாளும் என்ன நடந்தது என்பதை பதிவு செய்திருக்கிறது. அதை தீக்கதிர் தனது வாசகர்களுக்கு வழங்குகிறது.

நாள் 1 : ஆகஸ்ட் 5 
 

  • மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே, பாஜக தலைமையிலான அரசு தனது  மிருக பலத்தை பயன்படுத்தி பிரிவு 370ஐ ரத்து செய்தது. இதற்கு ஆதரவாக 351 வாக்குகளும், எதிராக 72 வாக்கு களும் பதிவாகின. ஒரு உறுப்பினர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.  
  • உடனடியாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முகமது யூசுப் தாரிகாரி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். 
  • முதல் நாளிலேயே 17வயதேயான அகீல் தர் என்ற சிறுவன் பெல்லட் குண்டு தாக்குதல்களால் படுகாய மடைந்த நிலையில் ஸ்ரீநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிஆர்பிஎப் அதிகாரி ஒருவரால் நேருக்கு நேர் பெல்லட் துப்பாக்கியால் சுடப்பட்டதில் அந்த  சிறுவனின் உடலில் 90 பெல்லட் குண்டுகள் பாய்ந்திருந்தன.


நாள் 2 : ஆகஸ்ட் 6

  • சிஆர்பிஎப் படையினர் விரட்டியதில் பயந்து போய் ஓடிய 17 வயது சிறுவன் ஒசைப் அல்தாப், ஜீலம் நதியில் விழுந்து மரணமடைந்தான். அல்தாப்புக்கு மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியவில்லை. விளையாடுவதற்காக நண்பர்களை  தேடி வந்தபோது, பாதுகாப்புப் படையினர் அவனை விரட்டத்துவங்கினர். 
  • ஸ்ரீநகர் மாநகராட்சி மருத்துவமனை மருத்துவர்களும், செவிலியர்களும், ஒரே நாளில் பெல்லட் குண்டுகளால் சுடப்பட்ட 13 பேர் படுகாயத்துடன் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தனர். 
  • மத்திய அரசின் முடிவை எதிர்த்து கார்கிலில் மத மற்றும் அரசியல் தலைவர்கள் ஒன்று கூடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 
  • சவுரா என்னுமிடத்தில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது பெல்லட் குண்டுகளால் பாது காப்புப் படையினர் சுட்டனர். அவர்களில் படுகாயமடைந்த அஸ்ரார் அகமது கான் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 4 அன்று மரணமடைந்தார்.

நாள் 3: ஆகஸ்ட் 7

 

  • ஸ்ரீநகர் மருத்துவமனையில் 21 பேர் பெல்லட் குண்டு களால் தாக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தனர். 
  • உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவர் உட்பட வலதுசாரி தீவிரவாதிகள் பலரும் சமூக ஊடகங் களில், இனிமேல் காஷ்மீர் பெண்களை திருமணம் செய்ய லாம் என்று இழிவின் உச்சத்திற்கே சென்றனர். 
  • இந்தியாவுடனான ராஜ்ஜிய உறவுகளை கைவிட நேரிடும் என்று பாகிஸ்தான் கூறியது. இந்தியத் தூதரை  வெளியேற்றியது. அனைத்து இருதரப்பு வர்த்தகங் களையும் சஸ்பெண்ட் செய்தது. 

நாள் 4: ஆகஸ்ட் 8

  • காஷ்மீரில் 500க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு ஆங்காங்கே சிறையில் அடைக்கப்பட்டனர். 
  • காஷ்மீர் நிலைமை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கவலை தெரிவித்தது. 
  • இப்பிரச்சனை தொடர்பாக நாட்டு மக்களுக்கு உரை யாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 370வது பிரிவு அமலில் இருப்பதால்தான் காஷ்மீரில் பயங்கரவாதம், பிரிவினை வாதம், ஊழல், குடும்ப ஆட்சி எல்லாம் தலைதூக்கியது என்றும் அங்கு வளர்ச்சி ஏற்படாமல் போனதற்கு 370வது பிரிவுதான் காரணம் என்றும் கூறினார்.ஆனால் ஜம்மு - காஷ்மீர் மக்களின் விருப்பத்தை கோராமல் ஏன்  இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பதற்கு அவர் பதிலளிக்கவில்லை.

நாள் 5: ஆகஸ்ட் 9

  • வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைவர் முகமது யூசுப் தாரிகாமியை சந்திக்க சென்ற பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, சிபிஐ பொதுச் செயலாளர் து.ராஜா ஆகியோர் ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே சிறை வைப்பு.
  • பிபிசி, அல்ஜசீரா, ராய்ட்டர்ஸ் போன்ற சர்வதேச ஊடகங்கள், காஷ்மீரின் தெருக்களில் மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபடுவதாக செய்தி வெளியிட்டன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியதாக அச்செய்திகள் கூறின. 
  • மக்கள் போராட்டத்தின் மீது பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியதாகவும், ரப்பர் முலாம்  பூசிய குண்டுகளால் மக்களை நோக்கியும், வானத்தை நோக்கியும் சுட்டதாகவும் அல்ஜசீரா தெரிவித்தது. 
  • இத்தகைய தாக்குதல்களில் ஒரு பெண் மரணமடைந்த தாக நியூயார்க் டைம்ஸ் ஏடு செய்தி வெளியிட்டது.

நாள் 6 : ஆகஸ்ட் 10

  • ஜம்மு - காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருவ தாக திட்டமிட்ட பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டன. 
  • ஊடக சுதந்திரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதை கண்டித்து இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் (எடிட்டர்ஸ் கில்டு) அறிக்கை வெளியிட்டது. 
  • மத்திய அரசின் தன்னிச்சையான முடிவு அநியாய மானது என்று கண்டனம் தெரிவித்து காஷ்மீர் பண்டிட்டு கள், டோக்ரா இனத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் சீக்கிய பிரமுகர்கள் கையெழுத்திட்ட மனு பகிரங்கமாக வெளி யிடப்பட்டது.
  • ஹரியானா முதலமைச்சர், காஷ்மீரி பெண்களைப்பற்றி மிகவும் இழிவான முறையில் பேசினார். 

 நாள் 7: ஆகஸ்ட் 11

  • ஈகை பெருநாளுக்கு முந்தைய தினம். ஏடிஎம் இயந்திரங் களில் பணம் இல்லை. உள்ளூர் கடைகள் மற்றும் மொத்த கடைகளில் பொருட்கள் இல்லை. கடைகள் சில மணிநேரம் திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டாலும் பணம் இல்லாததாலும் பொருட்கள் இல்லாததாலும் கடை வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. 
  • காஷ்மீர் உரிமை பறிக்கப்பட்டு ஒரு வார காலம் முடக்கப்பட்ட தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பதாக பிடிஐ தெரிவித்தது.
  • காஷ்மீர் மக்களுக்காக குரல் கொடுத்தமைக்காக லக்னோவில், மகசேசே விருது பெற்ற பத்திரிகையாளர் சந்தீப் பாண்டே கைது செய்யப்பட்டு வீட்டு சிறையில் வைக்கப்பட்டார். 

 நாள் 8: ஆகஸ்ட் 12(பக்ரீத் நாள்)

  • மாநிலம் முழுவதும் நீடிக்கும் அரசாங்கத்தின் தடை உத்தரவுகளால் வீதிகள் வெறிச்சோடியே காணப்பட்டன. 
  • சிஆர்பிஎப் ஹெல்ப் லைன்னுக்கு இரண்டு நாட்களில் சுமார் 870 அழைப்புகள் வந்தன. அவற்றில் பெரும் பாலானவை, நாட்டின் வேறு பகுதிகளிலிருந்து, காஷ்மீரில் இருக்கும் தங்களது குடும்பத்தினரின் நிலை பற்றி அறிவதற்காக வந்த அழைப்புகள். 
  • தொலைத் தொடர்பு தடையை மத்திய அரசு இரண்டு மடங்காக அதிகரித்தது. கட்டுப்பாடு தீவிரமடைந்தது. காஷ்மீரை மையாகக் கொண்ட நபர்களின் எட்டு டுவிட்டர்  பக்கங்களை மத்திய அரசு முடக்கியது. அதில் ஒன்று, ஹீரியத் தலைவர் செய்யது அலி கிலானியின் டுவிட்டர் பக்கம். 
  • தில்லி ஜந்தர் மந்தரில் காஷ்மீரிகள் கூடி, இந்த ஈகை பெருநாள் மகிழ்ச்சியற்ற ஒரு நாளாக மாறிவிட்டது என்று கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஈகை நிகழ்வை நடத்தினர். 
  • பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு ஊறு விளைவிக்கும் விதத்தில் நகர்வுகள் வேண்டாம் என்று இந்தியாவுக்கு சீனா வேண்டுகோள் விடுத்தது. காஷ்மீர் பிரச்சனை ஒரு உள்நாட்டு பிரச்சனை என்று இந்தியா கூறியது. 
  • ஸ்ரீநகரில் மருத்துவமனைக்கு செல்ல போக்குவரத்து ஏதுமில்லாமல் பேருந்து நிலையத்திலேயே பாதுகாப்புப் படையினரால் ஒரு பெண் 12 மணி நேரம் காத்திருந்த சம்பவம் நடந்தது. இந்நிலையில் அப்பெண்ணின் குழந்தை காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நாள் 9: ஆகஸ்ட் 13

  • உச்சநீதிமன்றம், காஷ்மீரில் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து காங்கிரஸ் செயல்பாட்டாளர் தெசீன் பூனாவாலா என்பவர் தொடுத்திருந்த வழக்கை விசாரித்தது. 
  • ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்களில் மருத்துவமனைகளில் மக்கள் குவிந்திருக்கிறார்கள்; ஊரடங்கு உத்தரவுகளால் அவர்கள் வீட்டிற்கு திரும்ப முடியவில்லை; கையில் பணமில்லாததால் ஏதேனும் சாப்பிட கிடைக்குமா என்று பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என ஜூபைர் சோபி எனும் பத்திரிகையாளர் செய்தி அனுப்பினார்.n ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்களில் மருத்துவமனைகளில் மக்கள் குவிந்திருக்கிறார்கள்; ஊரடங்கு உத்தரவுகளால் அவர்கள் வீட்டிற்கு திரும்ப முடியவில்லை; கையில் பணமில்லாததால் ஏதேனும் சாப்பிட கிடைக்குமா என்று பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என ஜூபைர் சோபி எனும் பத்திரிகையாளர் செய்தி அனுப்பினார்.
  • காஷ்மீரில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருந்த நிலையில் ஆளுநர் சத்தியபால்  மாலிக், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி யை, காஷ்மீருக்கு வருமாறு அழைத்தார். சில எதிர்க்கட்சித் தலைவர்கள் காஷ்மீர் பிரச்சனையை அரசியலாக்க முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

நாள் 10: ஆகஸ்ட் 14

  • முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷா பசல், தில்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு, மீண்டும் ஸ்ரீநகருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டார்.
  •  
  • சிபிஐ (எம்எல்)தலைவர்களில் ஒருவரும் பத்திரிகையாளருமான கவிதா கிருஷ்ணன் மற்றும் மூத்த பத்திரிகையாளர், அரசியல் அறிஞர் ஜீன் டிரஸ் ஆகியோர், ஒரு உண்மை அறியும் குழுவாக ஸ்ரீநகர் சென்றிருந்தனர். காஷ்மீரிலிருந்து அவர்கள் தில்லிக்கு திரும்பி ஒரு அறிக்கை வெளியிட்டனர். ஒட்டு மொத்த காஷ்மீரும் கோபத்தாலும், ஆத்திரத்தாலும் கொத்தித்துக் கொண்டிருக்கிறது என தெரிவித்தனர்.
  • எண்ணற்ற இளைஞர்கள் எந்த காரணமும் இல்லாமல் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
  • புல்வாமா பகுதியைச் சேர்ந்த ஒருவர், ஒவ்வொரு நாளும் பாதுகாப்புப் படையினர் கிராமங்களை முற்றுகையிட்டு தீவிரமாக சோதனை போடுவதாக வும் ஏராளமான இளைஞர்களை கைது செய்து இழுத்து செல்வதாகவும் அவர்கள் எங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்ற தவல்களை குடும்பத் தினருக்கு கூட தெரிவிக்க மறுப்பதாகவும், கூறியதாக செய்தி வெளியானது.

நாள் 11: ஆகஸ்ட் 15

  • மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி, தான் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து எப்படியோ ஒரு கடிதத்தை எழுதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அனுப்பி வைத்தார். அந்த கடிதத்தில், இந்திய தேசமே சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் போது காஷ்மீரிகள் மட்டும் விலங்குகளை போல கூண்டில் அடைக்கப்பட்டு கிடக்கிறார்கள் என்று ஆவேசத்துடன் எழுதியிருந்தார்.
     

நாள் 12: ஆகஸ்ட் 16
 

  • காஷ்மீரில் சுகாதார நிலைமை மோசமடைந்து வருகிறது என்றும், கட்டுப்பாடுகள் காரணமாக மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்பட்டிருக் கிறது என்றும் 130 பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதினர்.
  • ஸ்ரீநகரில் குப்பைகள் அகற்றப்படவில்லை; பல்வேறு இடங்களில் எதுவும் கிடைக்காமல் பட்டினியால் நாய்கள் செத்துக் கிடக்கின்றன; பறவைகளும் வேறு சில கால்நடைகளும் ஆங்காங்கே செத்துக் கிடக்கின்றன. அவற்றை அகற்றுவதற்கு நிர்வாகம் இல்லை. தொற்று நோய் அபாயம் ஏற்பட்டது.
  • மீண்டும் சவுராவில் மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றது. இப்போது சிலர் ஆசாத் காஷ்மீர் (காஷ்மீர் விடுதலை) என்ற பதாகையை ஏந்தி வந்தனர். 
  • பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் மனு செய்த முறை சரியாக இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. 

நாள் 13: ஆகஸ்ட் 17

  • கிரேட்டர் காஷ்மீர் பத்திரிகையின் செய்தியாளரான இர்பான் அமீன் மாலிக், பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
  • சில கல்வீச்சு சம்பவங்களைத் தொடர்ந்து ஸ்ரீநகர் முழுவதும் பாதுகாப்புப் படையினர் வீடுகளில் புகுந்து சோதனை நடத்தியதாகவும், தாக்குதல் நடத்தியதாகவும் ராய்ட்டர் செய்தி வெளியிட்டது.
  • காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி விட்டதாகவும், தொலைத் தொடர்பு இணைப்புகள் சரியாகி விட்டதாகவும் மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது.

நாள் 14: ஆகஸ்ட் 18

  • பொது சேவைகள் சட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட நான்கு ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பொருட்களை வாங்கு வதற்காகவும் வேறு தேவைகளுக்காகவும் ஸ்ரீநகர் விமான நிலையம் வழியாக காஷ்மீரைவிட்டு வெளியில் சென்று வந்த காரணத்திற்காக கைதுசெய்யப்பட்டனர்.
  • காஷ்மீர் மாணவியும் சமூக செயல்பாட்டாளருமான ஷீலா ரசீத், தனது டுவிட்டர் பக்கத்தில், பாதுகாப்புப்படையினர் இரவு நேரங்களில் வீடுகளுக்குள்  புகுந்து அடித்து நொறுக்குவதாகவும் சிறுவர்களை கூட கைது செய்து இழுத்துச் செல்வதாகவும், அரிசி உள்ளிட்ட பொருட்களை தரையில் கொட்டி விட்டுச் செல்வ தாகவும் சில இடங்களில் அரிசியையும் எண்ணெய்யையும் தரையில் கொட்டி அட்டூழியம் செய்திருப்பதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டி எழுதினார். 
  • இந்திய ராணுவம், ஷீலா ரசீத்தின் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்தது.
  • சோப்பூரில் ஒரு மார்க்கெட் பகுதியில் பழக்கடை வியாபாரிகளை ராணுவத்தினர் மிரட்டியதாகவும், மார்க்கெட் பகுதிக்கு யாரும் வரக்கூடாது என மிரட்டிவிட்ட தாகவும் வியாபாரிகள் குற்றம் சாட்டினர்.

நாள் 15: ஆகஸ்ட் 19

  • பாகிஸ்தான் பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படி எழுதினார்: “நாஜிகளால் ஜெர்மனி கைப்பற்றப்பட்டதை போல பாசிச, இனவெறிப்பிடித்த இந்துத்துவா மேலாதிக்க சித்தாந்தம் மற்றும் தலைமையால் இந்தியா கைப்பற்றப்பட்டுவிட்டது.” 

நாள் 16: ஆகஸ்ட் 20

  • இம்ரான்கானுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேசினார். மேற்கண்டவாறு எழுதியதை திரும்பப் பெறுமாறு கட்டளையிட்டார். 
  • இந்திய அரசு ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் பள்ளிகளை திறக்க முடிவு செய்திருப்ப தாக கூறியது. ஆனால் மாணவர்கள் வரவில்லை. பதற்றம் நிறைந்துள்ள நிலையில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது ஆபத்தானது என்று பெற்றோர் ஆத்திரத்துடன் தெரிவித்தனர்.
  • சவுராவில் சில இளைஞர்கள் இந்திய ராணுவப் படையினர் தங்கள் பகுதிக்குள் வரக்கூடாது என ஒரு தடுப்பு அரணை உருவாக்கியிருப்பதாகவும் ஒரு வாரத்திற்கு மேலாக அந்த தடுப்பை அவர்கள் பாதுகாத்து வருவதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது.

நாள் 17: ஆகஸ்ட் 21

  • அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகம், காஷ்மீரில் தலையிட விரும்பவில்லை என்று கூறியபோதிலும் மீண்டும் மீண்டும் டிரம்ப், தான் மத்தியஸ்தம் செய்ய விரும்புவதாக கூறினார். 
  • பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது சரிதான் என்பதை விளக்கும்விதமாக நாடு முழுவதும் 2000 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக பாரதிய ஜனதா கட்சி அறிவித்தது.

நாள் 18: ஆகஸ்ட் 22

  • பிரிவு 370 மற்றும் ஜம்மு - காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதாவில் மேற்கொள்ளப் பட்டுள்ள திருத்தங்கள் மற்றும் ஜனாதிபதி மூலமாக செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் செல்லத்தக்கது அல்ல என்று கூறி ஆறு முக்கிய குடிமக்கள் பிரதிநிதிகள் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். 
  • ஜம்மு - காஷ்மீரிலிருந்து பாதுகாப்புப் படையினரை திரும்பப் பெறுவதோ அல்லது குறைப்பதோ என்ற பேச்சுக்கே இடமில்லை என மத்திய அரசு கூறியது. அங்குள்ள நிலைமையை பயன்படுத்தி பாகிஸ்தான் ஆத்திரமூட்டலில் இறங்க முயற்சிப்பதாக மத்திய அரசு காரணம் கூறியது.
  • காஷ்மீர் மக்களுக்கு மருந்துப் பொருட்கள் சப்ளை முற்றிலும் நின்று விட்டது என்றும் மருந்துக்கடைகள் காலியாகிவிட்டன என்றும் ஸ்ரீநகரிலிருந்து முதாசிர் அகமது என்ற பத்திரிகையாளர் தகவல் வெளியிட்டார்.
  • காஷ்மீரில் இந்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை, அந்த மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள கூட்டுத் தண்டனை என்று ஐநா சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் நிபுணர்கள் ஐந்து பேர்  கொண்ட குழு கண்டனம் தெரிவித்தது. காஷ்மீரில் ஏராளமானோர் சிறை வைக்கப் பட்டிருப்பது கடுமையான மனித உரிமை மீறல் என்று குற்றம்சாட்டியது.

நாள் 19: ஆகஸ்ட் 23

  • கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் பெல்லட் குண்டுகளால் படுகாயமடைந்த 150க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக விபரங்கள் தெரிய வந்தன. எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 
  • காஷ்மீர் முழுவதும் உள்ளூர் ஊடக நிறுவனங்கள், மத்திய அரசாங்கத்தின் முடிவை விமர்சிக்காமல் இருந்தால் மட்டுமே தொடர்ந்து நீடிக்க முடியும் என்று கருதுவதாக டெலிகிராப் ஏடு செய்தி வெளியிட்டது. 
  • ஆங்காங்கே நடக்கும் பெரும் போராட்டங்களை நியூயார்க் டைம்ஸ் ஏடு தொகுத்து ஒரு வீடியோ வெளியிட்டது. அதில், போராட்டத்தில் ஈடுபடும் குடிமக்கள், “ஒரே தீர்வு, துப்பாக்கியே தீர்வு” என்று முழங்குகிறார்கள்.
  • லடாக் பகுதி மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்காக இந்தியா ஜனநாயகம் எனும் ஆயுதத்தைப் பயன்படுத்தியது துரதிருஷ்டவசமானது என்று கார்கில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அஷ்கர் அலி கர்பாலி, தி வயர் ஊடகத்திடம் தெரிவித்தார். மாநிலத்தை இரண்டாக உடைத்தது என்பது, மதரீதியாக மக்க ளைப் பிரிக்கும் உள்நோக்கம் கொண்டது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
  • 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை ஆதரித்து சில குறிப்பிட்ட தலித் மற்றும் பகுஜன் இயக்க தலைவர்கள் பேசி வருவதற்கு ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் சாதி எதிர்ப்பு கூட்டணிகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
  • பாதுகாப்பு படையினர் பெல்லட் குண்டுகளால் தாக்கியதில் பல சிறுவர்கள் கண் பார்வையை இழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஸ்ரீநகரிலிருந்து முதாசிர் அகமது செய்தி அனுப்பியிருந்தார்.
  • காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஊடகங்களுக்கு நீடித்து வரும் தடைகளை தளர்த்த வேண்டும் என கோரி அனுராதா பசின், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக தலையிட அனுமதிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றத்திடம் இந்திய பிரஸ் கவுன்சில் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டது. முன்னதாக காஷ்மீரில் இத்தகைய தடைவிதிக்கப்பட்டதற்கு பிரஸ் கவுன்சில் ஆதரவு தெரிவித்திருந்தது. தேசத்தின் நலன்கருதி இந்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக அதற்கு சப்பைக் கட்டும் கட்டியிருந்தது.

நாள் 20 : ஆகஸ்ட் 24

  • அரசியல் தலைவர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு வர வேண்டாம் என்றும் அது இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு இடையூறாக இருக்கும் என்றும் ஜம்மு-காஷ்மீர் அரசு நிர்வாகம் ஒரு அறிக்கை வெளியிட்டது.
  • ஜம்மு-காஷ்மீரின் 69 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பகல்நேர கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாக மாநில முதன்மைச் செயலாளர் ரோஹித் கன்சால் கூறினார்.
  • ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சித் தலைவர்கள் காஷ்மீர் சென்றனர். அவர்கள் ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

நாள் 21: ஆகஸ்ட் 25

  • காஷ்மீர் ஜனநாயகப் படுகொலையை முன் வைத்து, ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
  • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகர் தலைமைச் செயலகத்திலிருந்து மாநிலக் கொடி அகற்றப்பட்டு, இந்திய தேசிய கொடி மட்டுமே பறந்தது.
  • காஷ்மீர் முழுவதும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பது சரியானதுதான் என்று ஆளுநர் சத்யபால் மாலிக் கூறினார். 
  • காஷ்மீருக்கு செல்லும் எதிர்க்கட்சிகளின் முயற்சியை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடுமையாக விமர்சித்தார்.
  • ஸ்ரீநகரின் தால் ஏரியில் உள்ள சென்டார் ஹோட்டலில் 40 முதல் 50 அரசியல் தலைவர்கள், அவர்களைப் பார்க்க வந்த குடும்பத்தினருடன் சிறை வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

நாள் 22 : ஆகஸ்ட் 26

  • பிரதமர் நரேந்திர மோடியுடன் காஷ்மீர் பற்றி பேசியதாகவும் அங்கு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக அவர் தெரிவித்ததாகவும் டொனால்டு டிரம்ப் கூறினார். எனவே இப்பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய மீண்டும் ஒரு முறை விருப்பம் தெரிவிக்காமல் தவிர்த்துவிட்டதாகவும் கூறினார்.

நாள் 23: ஆகஸ்ட் 27
 

  • ஸ்ரீநகரில் ஒரு வீடு தீப்பற்றியது. அதை அணைப்பதற்கு தீயணைப்பு படை உள்ளிட்ட அவசரச் சேவைகள், ஊடரங்கு உத்தரவுகளின் காரணமாக வந்து சேர முடியவில்லை. இதனால் அருகிலிருந்த வீடுகளும் தீயில் சிக்கி எரிந்தன. இப்பகுதி மக்கள் பலர் காயமடைந்தனர். உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று தஞ்சமடைந்தனர்.
  • இந்தியாவுடனான வான்வழிப் பாதைகளை மூடுவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக பாகிஸ்தான் கூறியது.
  • 370வது பிரிவை ரத்து செய்யப்பட்டதன் நன்மைகள் என்னென்ன என்று பகலில் மக்களுக்கு ராணுவத்தினர் நோட்டீஸ் அளித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்; இரவில் அதே படையினர் அதே மக்களை கடுமையான முறையில் தாக்குகின்றனர்; வீடுகளில் புகுந்து சோதனைக்குள்ளாக்குகின்றனர் என்று ஸ்க்ரால்.இன் இணைய ஊடகம் செய்தி வெளியிட்டது.
  • ஆகஸ்ட் 5ம்தேதிக்குப் பிறகு சில இடங்களில் பெல்லட் குண்டுகள் மூலமாக சிலர் காயமடைந்த சம்பவம் நடந்தது உண்மைதான் என்றும் ஆனால் அவர்கள் அனைவரும் முழங்காலுக்குக் கீழேதான் சுடப்பட்டார்கள் என்றும் ஒரே ஒருவர் மட்டும்தான் கழுத்தில் பெல்லட் குண்டு தாக்கி காயமடைந்தார் என்றும், அவரும் தற்போது நலமாக இருக்கிறார் என்றும் ஆளுநர் சத்யபால் மாலிக் கூறினார்.

நாள் 24 : ஆகஸ்ட் 28

  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினருமான முகமது யூசுப் தாரிகாமி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரை பார்ப்பதற்கு, கட்சியின் பொதுச் செயலாளர்  சீத்தாராம் யெச்சூரி தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. பொதுவாக ஆட்கொணர்வு மனு என்பது, சம்பந்தப்பட்ட நபரை அரசாங்கமே கொண்டு வந்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான்; மாறாக மனு அளித்த நபர், காணாமல் போனதாகக் கருதப்படும் நபரை நேரில்  சென்று பார்த்துவிட்டு வருவதற்கான அனுமதியை பெறுவதற்கானது அல்ல. எனினும் இந்த வழக்கில் தாரிகாமியை நேரில் பார்ப்பதற்கு சீத்தாராம் யெச்சூரிக்கு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
  • பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரிப்பது என உச்சநீதிமன்றம் முடிவு செய்தது. அந்த வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விடம் ஒப்படைத்தது.
  • 370வது பிரிவை ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு அங்கு ஏற்பட்டுள்ள நிலைமை கள் குறித்தும், பத்திரிகையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை தளர்த்துவது குறித்தும் மத்திய அரசும் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகமும் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
  • ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் ஐநா சபையில் பாகிஸ்தான் மேற்கொள்ளும் நகர்வுகளில், தேவையில்லாமல் ராகுல்காந்தியின் பெயரை கொண்டுவந்தி ருப்பதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. ஜம்மு-காஷ்மீர் என்பது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை என்றும், அதில் தவறான தகவல்களை ராகுல்காந்தியின் பெயரில் அளிப்பது கண்டனத்திற்குரியது என்றும் காங்கிரஸ் கூறியது.

நாள் 25: ஆகஸ்ட் 29

  • உச்சநீதிமன்ற அனுமதியின் பேரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, ஸ்ரீநகர் சென்று, வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகமது யூசுப் தாரிகாமியை நேரில் சந்தித்து விபரங்கள் அறிந்தார்.

நாள் 26 : ஆகஸ்ட் 30

 

  • காஷ்மீரில் பல இடங்களில் எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் மீது ராணுவத்தினர் வன்முறை மிக்க அடக்குமுறையை ஏவுவதாக பிபிசி செய்தி வெளியிட்டது. கிராம மக்கள் ராணுவத்தினரால் கடுமையாக தாக்கப்பட்டும் மின் வயர்கள் மூலம் ஷாக் கொடுக்கப்பட்டும் கொடூரமாக சித்ரவதை செய்யப்படும் காட்சிகள் மற்றும் காயங்களை வெளியிட்டது.

  • இவ்வளவு சித்ரவதை செய்வதற்குப் பதிலாக எங்களை சுட்டுக் கொன்றுவிடுங்கள் என்று காஷ்மீரிகள், ராணுவத்தினரிடம் கெஞ்சியதாகவும் அந்த பிபிசி செய்தி அதிர்ச்சித்தரத்தக்க விபரங்களை வெளியிட்டது.

நாள் 27 : ஆகஸ்ட் 31

  • பத்திரிகையாளரான கவுகர் கீலானி, சமீபத்தில் காஷ்மீரைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அவர் தில்லியிலிருந்து ஜெர்மனிக்கு செல்வதற்காக வந்த போது தில்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். இதற்கான காரணம் எதுவும் அவருக்கு தெரிவிக்கப்படவில்லை.

நாள் 28 : செப்டம்பர் 1

  • உமர் அப்துல்லாவும், மெகபூபா முப்தியும் தனது குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டதாக தகவல். 

நாள் 29: செப்டம்பர் 2

  • காந்தி அமைதி கழகத்தின் தலைவர் குமார் பிரசாத் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஒன்று, ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பற்றி அவர் பொய்களை பரப்புகிறார் என்பது; மற்றொன்று, காஷ்மீரில் உள்ள நிலைமை தொடர்பாக தேசவிரோதமாக பேசி வருகிறார் என்பது. இரண்டும் அவர் மீது பொய்யாகப் புனையப்பட்ட வழக்குகள்.
  • பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்ட பலரும் மருத்துவமனைக்கு செல்லாமல் தவிர்க்கிறார்கள் என்றும், மருத்துவமனைக்குச் சென்றால் அங்கு ராணுவத்தினர் குறி வைத்து அவர்களை கைது செய்து கொண்டுசெல்கிறார்கள் என்றும் ஸ்ரீநகரில் இருந்து பத்திரிகையாளர் முதாஷிர் அகமது தகவல்.
  • பெல்லட் குண்டுகளை தங்களது உடலிலிருந்து எப்படி அகற்றுவது என்பதில் சில குறிப்பிட்ட சிறுவர்கள் நிபுணத்துவம் பெற்றுவிட்டதாகவும் தகவல்.
  • பல பகுதிகளில் தொடர்ச்சியாக துப்பாக்கிச்சூடு, கண்ணீர் புகைக்குண்டுகள் வீச்சு போன்ற சம்பவங்களால் தொடர்ந்து எழுந்த புகை மண்டலங்களின் காரணமாக சுகாதாரப் பிரச்சனைகள் எழுந்துள்ளன.
  • இந்தியாவுடன் ஒரு போதும் போரை தன் தரப்பிலிருந்து துவக்கமாட்டேன் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவிப்பு.

நாள் 30 : செப்டம்பர் 3

  • காஷ்மீரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டிருப்பது மற்றும் அதற்கு தடைவிதிக்கப்பட்டிருப்பது கவலை தருகிறது என காஷ்மீர் பிரஸ் கிளப் கண்டனம்.
  • காஷ்மீரின் சில மூத்தப் பத்திரிகையாளர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறும், அவர்களுக்கு அரசு அளித்துள்ள வீடுகளை காலி செய்யுமாறும் அதிகாரிகள் தரப்பிலிருந்து மிரட்டல் விடுவதாகவும் கண்டனம்.

நாள் 31: செப்டம்பர் 4

  • காஷ்மீரிலும் லடாக்கிலும் ஒரு சுற்றுலா மையத்தை அமைக்கப்போவதாக மத்திய அரசு அறிவித்தது.
  • யாருக்கும் சொந்தமில்லாத பூமி என்று கூறப்படும் காஷ்மீர் நம் வசம் எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டது; அரசு நிலங்களில் தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் கல்விநிறுவனங்கள்(தனியார்) அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு.
  • அடுத்த 20 - 25 நாட்களில் காஷ்மீரில் இணைய தொடர்புகள் மீண்டும் அளிக்கப்படும் என்றும் அமித்ஷா அறிவிப்பு.



 





 



 


 


 


 


 

;