tamilnadu

img

‘‘நான் நல்ல போராட்டத்தை போராடினேன்... விசுவாசத்தை காத்துக் கொண்டேன்” -கே.ஜி.பாஸ்கரன்

நெல்லை பாளையங்கோட்டையில் முதுபெரும் தோழர் வாத்தியார் ஜேக்கப் அவர்களை, இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு விழாவையொட்டி நேரில் சந்தித்து வாழ்த்துக்களையும் மகிழ்ச்சிகளையும் பரிமாறிக் கொண்ட சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீ.பழனி, எழுத்தாளர் நாறும்பூநாதன் உள்ளிட்ட தலைவர்கள்.

அக்.19 (வியாழன்) கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு விழா. கட்சி அலுவலகத்தில் கொடியேற்றி விட்டு, வாத்தியார் ஜேக்கப்பை சந்திக்கச் சென்றோம். பாளையங்கோட்டை சாந்தி நகர் 22வது தெருவில் இருக்கும் வாத்தியார் வீட்டுக்கு, முன்னதாகவே சென்றிருந்த தோழர் நாறும்பூநாதன் வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.  ‘ஜெயா நிலையம்- வித்துவான் ஆர்.எஸ்.ஜேக்கப்’ என்றெழுதப்பட்ட மரப்பலகையைத் தாண்டி உள்ளே நுழைந்தோம். அவருக்கென ஒதுக்கப்பட்ட சிறு அறையில் இருந்து ஊன்றுகோலோடு மெல்லமாக சிரித்தபடி வெளியே வந்தார் வாத்தியார். பத்துப் பதினைந்து பேரை பார்த்தவுடன் புன்னகையை பெரிதாக்கி, வாங்க என்று வீட்டின் ஹாலுக்குள் நுழைந்து நாற்காலியில் மெல்லமாய் அமர்ந்தார். கொண்டு போயிருந்த சால்வையை அணிவித்த போது, இது எதுக்கு என்றார். மரியாதையை தெரிவிக்க என்றோம். மறுபடியும் புன்னகைத்துக் கொண்டார்.  கட்சியின் நூற்றாண்டு என்றதும், ஆமா நூறு என்று சொல்லிக் கொண்டு பெருமிதத்தோடு வந்திருந்தவர்களை பார்த்தார். எல்லாரும் உட்காருங்க என்றார். உட்கார்ந்தும், நின்றும் அவரை எல்லோரும் வரலாற்று புத்தகத்தைப் போல பார்த்தோம். வயசு என்ன என்றேன். ‘நைண்டிதிரி யெங்’ என்றார்.  அவருக்கு அபாரமான ஞாபக சக்தி. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு சென்று ஒரு கதை சொல்லியைப் போல் நிகழ்வுகளை விவரித்தார்.

மறதியும் வந்து போகிறது. சில விசயங்களை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டார். தூத்துக்குடிக்கு பக்கத்தில் இருக்கும் நாரணாபுரத்தில் உள்ள சிஎஸ்ஐ பள்ளிக்கூடத்தில்தான் வாத்தியாருக்கு வேலை. இவர் வேலைக்கு போன போது அந்த பள்ளிக்கூடத்தில் ஐந்து பிள்ளைகள்தான் இருந்திருக்கிறார்கள். மாடு மேய்த்துக் கொண்டிருந்த, குளத்தில் தவளை பிடித்து விளையாடிக் கொண்டிருந்த, பள்ளிக்கூடத்துக்கு வரக்கூடாது என ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பிள்ளைகளை அழைத்து வந்து பள்ளிக்கூட பிள்ளைகளின் எண்ணிக்கையை ஐம்பதாக உயர்த்துகிறார். பண்ணையாருக்கு வாத்தியார் மீது கடுங்கோபம். வாத்தியார் அதை சட்டை செய்யவில்லை.  வாத்தியார் 16 வயதிலேயே கதை எழுதி, அவரது ‘மோசம் போன மோதிரம்’ முதலிய சிறுகதைகள் புத்தகம் தமிழகத்தின் எல்லா நூலகங்களிலும் வாங்கி வைக்கப்பட்டு இருந்தது. சிறை நூலகங்களிலும் இருந்தது. மதுரை சிறையில் இருந்த தோழர் பாலு இவரது கதைகளை படித்து விட்டு, மதுரை சிறையில் இருந்த கம்யூனிஸ்டுகளின் ரெப்ரசண்டேடிவ் தோழர் மாணிக்கத்திடம், “இந்த கதைகள் நல்லா இருக்கே, ஏழை மக்களை பத்திதான் எல்லா கதையும்” என சொல்லியிருக்கிறார். அதற்கு தோழர் மாணிக்கம், கதை எழுதுன ஜேக்கப் நெல்லை சதி வழக்குல கைதாகி இங்கதான் இருக்காரு என்றதும், உடனே அவரை பார்க்கணும் என்று சொல்லி இருக்கிறார் பாலு.  ஜெயில் சூப்பிரண்டிடம் அனுமதி வாங்கி, வாத்தியார், பாலுவை சந்தித்து இருக்கிறார்.

அதை நம்மிடம் ஆர்வத்தோடு சொல்கிறார் வாத்தியார் : “கதைய படிச்சிட்டு இத எழுதிய எழுத்தாளருக்கு அம்பது அறுபது வயசு இருக்கும்னு நெனச்ச. சின்ன வயசா இருக்கீங்கன்னு பாலு சொன்னார். அப்ப எனக்கு 20 வயசு. என்னோட ரெண்டு தோளையும் பிடிச்சி, எழுதறத விடக்கூடாது, நிறைய எழுதுங்கன்னு பாலு சொன்னாரு, எனக்கு பெரிய இம்ப்ரஸன், நா பாக்கும் போது அவர மறுநாள் தூக்குல போடப் போறாங்கன்னு தெரியாது, வார்டன் மூலமா தகவல் கிடைச்சது, எல்லாரும் கோசம் போட்டாங்க, பாலு நல்லா பாடுவாரு, தூக்குமேடைக்கு போகும் போது இந்த பாட்ட பாடுனாரு, ‘செங்கொடி என்றதுமே எனக்கோர் சக்தி பிறக்குதம்மா, அது நம் கொடி என்றதுமே எனக்கோர் நாதம் பிறக்குதம்மா’ அந்தப் பாடலை ‘மெல்லிய குரலில் பாடுகிறார் வாத்தியார். அவருக்கு முன்னே தோழர் பாலு நடந்து செல்கிறார். நமக்கு கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு நிற்கிறது.  சற்றே அமைதி கொள்கிறார். மீண்டும் பேசத் துவங்குகிறார், “பாலதண்டாயுதத்த போலீஸ் தேடுது, அவரு போட்டோவ ஊரெல்லா ஒட்டி, பிடிச்சுக் கொடுத்தா சன்மானம்னு போலீஸ் அறிவிச்சது, எல்லா போலீஸ் ஸ்டேசன்லயும் அவரு படம், நான் தான் என்னோட சர்ச்ல தங்க வச்சிருந்த, அந்த ஊர்ல ஒரு போலீஸ் இன்பார்மர் இருந்தான், பேரு சுப்பையா. இது யாருன்னு கேட்டான். பாலதண்டாயுதம் நல்லா சிகப்பா உசரமா இருப்பாரு. நான் சொன்னேன், அவரு மலையாள பிரசங்கி, ஊழியம் செய்ய வந்திருக்காருன்னு, ஓகோ அப்பிடியான்னு போயிட்டான். ஆனா அவன் துப்புக் கொடுத்து தான் என்னை போலீஸ் பிடிச்சிட்டு போனாங்க, சட்டையை எல்லா கிழிச்சி, அடிச்சி இழுத்துட்டுப் போனாங்க. பிள்ளைகள் எல்லாம் போலீஸ் மேல கல் எறிஞ்சாங்க, ரெண்டு போலீஸ் பிள்ளைகள விரட்டி விட்டாங்க, அவங்க பாலதண்டாயுதம் எங்கன்னு கேட்டாங்க, கடசி வரைக்கும் நான் சொல்லலியே”. போரில் ஜெயித்த மாதிரி சிரித்துக் கொண்டார்.

நமக்குத்தான் படபடப்பாக இருந்தது. “தாஸ்னு ஒரு இன்ஸ்பெக்டரு, ரெண்டு காலிலேயும் தடிய வச்சி, மேல ஏறி நின்னுக்கிட்டு, சொல்லு சொல்லுன்னு ஏறிக்குதிச்சா”. பேச்சை நிறுத்தி விட்டு வேட்டியை மேலே விலக்கி கால்களை காட்டுகிறார். ரத்தம் கட்டிய கால்கள். எலும்பு முறிந்த கால்கள். உடல் முழுவதும் விழுந்த அடிகளில் ஆங்காங்கே ரத்த கட்டுக்கள். “தாஸ் சொன்னான், அடிச்ச அடிக்கி, ரத்தம் கட்டி, கேன்சர் வந்து செத்துருவேன்னு, அவன் செத்துருப்பான், நான் இருக்கேன், நைன்டித்திரி யெங்.” “பள்ளிக்கூடத்துல புகுந்து போலீஸ் நோட்டு, புத்தகம், டைரி எல்லாத்தையும் எடுத்தாங்க, அவங்களுக்கு ஆதாரம் வேணும் இல்லியா, அப்ப மேசையில, மாற்கு எழுதிய சுவிசேசங்கள்னு பைபிள் வச்சிருந்தேன், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி போலீஸ்ட்ட சொன்னான், ஏய் இந்த பொஸ்தகம் எழுதுனவன் தான் இவங்க தலைவர் மார்க்ஸ், அத எடுத்து வச்சிக்க”. சிரித்துக் கொண்டார். “அவனுக்கு மாற்கும் தெரியல, மார்க்சும் தெரியல” இந்த கிருஷ்ணசாமி தான் தோழர் ஏ.நல்லசிவனை, இவன் தான் கம்யூனிஸ்ட்டுகளோட மூளை, இவன் தலையில் இருந்து மூளைய எடுக்கனும்னு சொன்னவர் என்று சொன்னவுடன் தோழர் நல்லசிவனைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார். “நல்லசிவன் புறக்கோர்ட்டு வக்கீல், நெல்லை சதி வழக்க நடத்துன என்.டி.வானமாமலை, பாளை. சண்முகத்துக்கு பாயிண்ட் எடுத்துக் கொடுப்பாரு. அதனால புறக்கோர்ட்டு வக்கீல்னு சொல்லுவோம்” என்றார் உங்களுக்கு சாப்பிட எதுவும் கொடுக்க முடியலியே என்று வருத்தப்பட்டுக் கொண்டே. “சீதைய ராவணன் தூக்கிட்டு போன பிறகு, சீதை ரொம்ப கவலைப்பட்டாளாம்.

எதுக்கு தெரியுமா, விருந்து கண்டுறபோது அஞ்சினாள் சீதை, நாம இல்லாதப்ப ராமன பாக்க வர்றவங்களுக்கு விருந்தோம்பல் செய்ய முடியாதே அப்பிடிங்கிற கவலை சீதைக்கு, சின்ன பாட்டு தான், அதுக்குள்ள தமிழர் கலச்சாரம், விருந்தோம்பல் பண்பாடு எல்லாம் இருக்கு பாத்தீங்களா” என்றார். “உனக்கு தூக்கு தான் கிடைக்கும்னு சண்முகம் சொல்லிட்டாரு, டைரில எல்லா ஆதாரமும் இருக்குன்னு சொல்லிட்டாரு, கொடைக்கானலுக்கு போகும் போது என்னோட நாலு டைரியவும் ஜட்ஜ் சுப்பிரமணியம் கொண்டு போயி படிச்சிருக்காரு, அதுல எல்லாம் எழுதி இருக்க, பாலதண்டாயுதம் இன்று வந்தார், சாப்பிட்டார், எல்லாம் எழுதியிருக்க, பிள்ளைகள பள்ளிக்கூடத்துல சேத்தது, அவங்க பட்டினி கிடக்க கூடாதுன்னு அமெரிக்க பால் பவுடரை காய்ச்சி கொடுத்தது, ஒரு நாள் தங்கச்சிய கோவத்துல அடிச்சிட்டேன், அதை எழுதி, கர்த்தரே என்னை மன்னியும்னு எழுதி இருந்தேன், இதை எல்லாம் படிச்சிட்டு தான், ஜட்ஜ் என்னை விடுதலை செஞ்சாரு. அப்ப கவர்மெண்ட் வக்கீல் பாலாஜின்னு ஒருத்தர் டவுண்ல இருந்தாரு, அவர பாக்கப் போனேன். வீட்டுல முக்காலி கிடந்துச்சு, யாரும் உட்காந்தா கீழ விழுந்துருவாங்க, உட்கார கூடாதுன்னு தான் அதை போட்டு இருக்காங்க, வக்கீல் வீட்டம்மா எட்டி பாத்துட்டு, வக்கீல்ட்ட யாரோ வந்திருக்காங்க, சாணான் மாதிரி தெரியுதுன்னு சொல்றாங்க. வக்கீல் வர்றாரு, நீ சாணானா அப்பிடின்னு கேட்டாரு, நான் ஆமா, ஐ ஆம் சாணான்னு சொன்னேன், சான்றோன் என்பது மருவி சாணான் ஆனது என்றேன், நீரு யாரு ஓய் அப்பிடின்னாரு, நான் தமிழ் வாத்தியார்னு சொல்லிட்டு வந்திட்டேன்.  

அப்ப நெல்லை மாவட்டத்துக்கு தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் தான் பொறுப்பு. கேஸ் முடிஞ்ச பிறகு இனி நான் முழுநேர ஊழியரா வந்து விடுகிறேன்னு சொன்னேன். இப்ப ஊழியரா இருக்குற ஐசக், முருகானந்தம் ரெண்டு பேருக்கும் மாசம் பதினெட்டு ரூவா கொடுக்க முடியல, ஒன்னயும் ஊழியராக்கி எப்பிடி காப்பாத்த, எந்த சாமியார் கால்ல விழுந்தாவது வாத்தியார் வேலைக்கு போயிடுன்னு சொல்லிட்டாரு. பள்ளிக்கூட நிர்வாக கமிட்டியில் மறுபடி வேலை கொடுங்கன்னு கேட்டேன், அது முடியாதுன்னு சொல்லிட்டாங்க, இவன் எல்லாப் பேரையும் கம்யூனிஸ்ட்டா மாத்திடுவான்னு கமிட்டியில மெம்பரா இருந்த தாய்மாமா ஒருத்தரே சொன்னாரு, அப்ப சர்ச்சுக்கு பொறுப்பா இருந்த வெள்ளைக்கார அதிகாரி, என்னை தேடி வந்து அப்பாயின்மெண்ட் ஆர்டர கொடுத்தாரு, அவர் பேரு டி.எஸ்.கேரட், ஏன் எப்பிடின்னு எனக்கு தெரியல, அவரு ஊருக்கு திரும்பி போகையில எங்கிட்ட சொன்னாரு, நான் இங்கிலாந்துல கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்னு, அதனாலயாக்கும் எனக்கு மறுபடி வேலை கிடைச்சது”. ஜெயில், அடி, சித்ரவதை. இப்ப என்ன நினைக்குறீங்கன்னு கேட்டோம்: “பைபிள்ல ஒரு வாசகம் உண்டு. நான் நல்ல போராட்டத்தை போராடினேன். ஓட்டத்தை முடிக்கிறேன். விசுவாசத்தை காத்துக் கொண்டேன்.” கட்சியைப் பத்தி என்ன நினைக்குறீங்க என்று கேட்டோம்: “எழுச்சி ஏற்பட்டுள்ளது, ஸ்தாபனரீதியான எழுச்சி இல்லை. மார்க்சிய கல்விரீதியான எழுச்சி இல்லை” என்றார். அவரிடம் இருந்து விடைபெறுவதற்காக எழுந்த போது இன்னும் கொஞ்ச நேரம் இருங்க என்றார். இன்னும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார். இயக்கத்திற்காக வழக்குகளை, கொடுஞ்சிறைகளை, சித்ரவதைகளை அனுபவித்த தோழர்களின் மொத்த உருவமாய் அவர் நம் கண்களுக்கு தெரிந்தார்.

;