tamilnadu

img

காட்டுமிராண்டி காலம் நோக்கி இழுத்துச் செல்லும் ஆதித்யநாத் ஆட்சி.... (பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்)

உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸில் 19 வயது தலித் இளம்பெண் மிகவும் கொடூரமான முறையில் கும்பல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, சித்ரவதை செய்து கொல்லப்பட்ட விதத்தை, அம்மாநிலக் காவல்துறையும் அரசு நிர்வாகமும் கையாண்டிருக்கும் விதம், அங்குள்ள ஆதித்யநாத் ஆட்சியின் குணத்தைத் திகிலூட்டும் விதத்தில் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது. பாதிப்புக்கு உள்ளான பெண்ணின் குடும்பத்தார் தன்பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமை குறித்து முதல் தகவல்அறிக்கைப் பதிவு செய்வதற்கே மிகவும் சிரமப்பட்டிருக்கின்றனர். காவல்துறையினர் அவர்களிடம் மிகவும்இணக்கமற்ற முறையிலும், விரோதமனப்பான்மையுடனும் நடந்துகொண்டிருக்கின்றனர்.

அலிகாரில்உள்ள ஒரு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபின்னர் அப்பெண்ணுக்கான மருத்துவ சிகிச்சை தாமதப்படுத்தப்பட்டது.  அவர் மீது தாக்குதல்  நடைபெற்று 15 நாட்கள் கழித்து தில்லியில் உள்ள ஓர் அரசு மருத்துவமனையில் கடைசியாக அவர் இறந்துள்ளார். பின்னர் அவரது சடலத்தைக் காவல்துறையினர் அவருடைய கிராமத்திற்கு கொண்டுசென்றுள்ளனர். அப்பெண்ணின் குடும்பத்தார் தங்கள் பெண்ணிற்கு இறுதிச் சடங்கு செய்வதற்காக, சடலத்தைத் தருமாறு கோரியபோதும், காவல்துறையினர் அவர்களிடம் சடலத்தைக் கொடுக்க மறுத்துவிட்டனர். பின்னர் அக்குடும்பத்தினரை அவர்கள் வீட்டில் அடைத்துவைத்துவிட்டு, பெண்ணின் சடலத்தைத் தாங்களே எரித்துவிட்டனர்.

ஐஜி, ஆட்சியரின் அறிக்கைகள்
அப்பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டது சம்பந்தமாக மருத்துவப் பரிசோதனை செய்வதற்கு தாமதம் செய்ததன் காரணமாகவும், அதுதொடர்பான அனைத்து சாட்சியங்களும் அழிக்கப்பட்டபின்னர், இப்போது அலிகார் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜி),இப்பெண்ணின் ஆரம்ப மருத்துவ அறிக்கைகள், அவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படவில்லை என்று காட்டுவதாக அறிவித்திருக்கிறார். அந்தக் கிராமமே 48 மணி நேரத்திற்கு வெளியார் எவரும் செல்லாதவாறு அடைக்கப்பட்டது. அரசியல் கட்சித் தலைவர்களோ, வழக்கறிஞர்களோ அல்லது ஊடகத்தினரோ, எவரொருவரும் அப்பெண்ணின் குடும்பத்தாரைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் மட்டும் அக்குடும்பத்தாரைச் சந்தித்துள்ளார். பின்னர், இவ்வழக்கு குறித்து மிரட்டும் தொனியில் அவர் அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.

இதன்பின்னர், விரிவான அளவில் எதிர்ப்புகள் எழுந்தபின்னர், அப்பெண்ணின் குடும்பத்தாரைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. முதல் அமைச்சர் ஆதித்யநாத்,தங்கள் அரசுக்குத் தொல்லைகள் கொடுக்க “அராஜகவாதிகள்” (“anarchists”) முயற்சிக்கிறார்கள் என்றும், தங்கள் அரசாங்கத்திற்கு தீங்கு விளைவித்திடவும், வகுப்புவாத மற்றும் சாதிய மோதல்களை உருவாக்கவும் முயற்சிக்கின்றனர் என்றும் அறிவித்தார்.

பயங்கரவாத குற்றச்சாட்டில் பத்திரிகையாளர் கைது
உத்தரப்பிரதேசக் காவல்துறை, எதிர்க்கட்சித் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் இணைய தளங்களுக்கு எதிராக அவை சாதியப் பதற்றநிலையை விசிறிவிடுவதாகவும், தேசவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்யத் தொடங்கியிருக்கின்றன. இந்த அட்டூழியத்தை அரசாங்கம் கையாளும் விதம் குறித்து ஏதேனும் கிளர்ச்சி அல்லது விமர்சனம்மேற்கொள்ளப்பட்டால் அதனை சாதி மற்றும் வகுப்புமோதலை உருவாக்க  “சதி” என்று முத்திரை குத்திக் கொண்டிருக்கின்றனர். தில்லியில் இயங்கிடும் கேரள செய்தியாளர் ஒருவர், செய்தி சேகரிப்பதற்காக, ஹத்ராஸ் சென்றபோது அவர் பயங்கரவாத நிதிமோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுகளின் பேரில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஒட்டுமொத்த சம்பவமும் எதனை வெளிப்படுத்துகிறது? எதேச்சதிகார போலீஸ் ராஜ்ஜியம், இந்துத்துவா வெறியும், உயர்சாதி வெறியும் கலந்த நச்சுக் கலவையையே அங்கே செயல்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதையேஇது வெளிப்படுத்துகிறது. இந்தக் கொடிய நச்சுக்கலவையில் முதலமைச்சரே சம்பந்தப்பட்டிருக்கிறார்.

கிரிமினல் வழக்குகள் நிறைந்த ஆதித்யநாத்தின் கதை
உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக ஆதித்யநாத் வந்தவிதமே வஞ்சனை மிக்க ஒன்றாகும். கோரக்பூரில் உள்ள கோரக்நாத் மடத்தின் தலைவராக இருந்த இந்தப்பேர்வழி 1998இலிருந்து அத்தொகுதியின் பாஜக-வின்மக்களவை உறுப்பினராக மாறியிருந்தார். அவர் மடத்தின்தலைவராக இருந்த காலம் முழுவதும் அங்கே அராஜகமும், வன்முறை வெறியாட்டங்களும் அரங்கேறிக் கொண்டிருந்தன. அவர், 2002இல் இந்து யுவ சேனை என்ற ஓர் அமைப்பை அமைத்து, தன்னுடைய தலைமையிலேயே அந்தக் குண்டர்படையை முஸ்லீம்களைத் தாக்குவதற்கு ஏவி வந்தார், கல்லறைகளை இழிவுபடுத்தி வந்தார், பொதுவாகவே ‘பசுப் பாதுகாப்பு’ என்ற பெயரிலும், ‘புனித ஜிகாத்’ என்ற பெயரிலும் ‘தாய் வீட்டுக்குத் திரும்புகிறோம்’ என்ற பெயரிலும் பல்வேறு விதமான ரகளைகளைச் செய்து வந்தார். இக்காலத்தில் அவர்மீது கொலைகள் செய்ததாக, மதஞ்சார்ந்த இடங்களை அசுத்தப்படுத்தியதாக, பயங்கரமான ஆயுதங்களுடன் கலகம் செய்ததாக, குற்றமுறு மிரட்டல்களில் ஈடுபட்டதாக, ஆயிரக்கணக்கான கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இத்தகையபாசிஸ்ட் மதவெறிப் பேர்வழியைத்தான் உத்தரப்பிரதேசத்தில் 2017 சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பின்பு, அந்த நபர், அந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றபோதிலும்கூட, மோடியும், அமித் ஷாவும் அம்மாநில முதலமைச்சராகத் தேர்வு செய்தனர்.

என்கவுண்டர்களுக்கான முதல்வரின் சமிக்ஞை 
இந்தப் பேர்வழி, முதலமைச்சரானவுடனேயே, அவர் மீதிருந்த கிரிமினல் வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டுவிட்டன. இப்போது, கிரிமினல் வழக்கு எதுவும்இல்லாத ஆதித்யநாத், குற்றங்களுக்கு எதிராக ஒரு யுத்தத்தைப் பிரகடனம் செய்தார். அப்போது அவர் கூறியதுஎன்ன தெரியுமா? “குற்றம் செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.”இது வேறொன்றுமில்லை, காவல்துறையினர் சந்தேகத்திற்குரிய கிரிமினல்களுக்கு எதிராக என்கவுண்டர் கொலைகள் செய்திடலாம் என்பதற்கான சமிக்ஞையேயாகும். 2017இலிருந்து 2020 ஆகஸ்ட் வரையிலும், காவல்துறையினரால் 6,476 என்கவுண்டர்களில் 125 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் காயங்கள் அடைந்தார்கள். கொல்லப்பட்டவர்களில் 45 பேர், அதாவது 37 சதவீதம் முஸ்லீம்களாவர். குற்றஞ்சாட்டப்பட்டவர்களை, நீதிமன்றத்தின்முன் கொண்டுவந்து நிறுத்தி, தண்டனை பெறுவதற்குப் பதிலாக, காவல்துறையினரே கொல்வது என்பதை, சமீபத்தில் கூட்டு வன்புணர்வுக்குற்றத்திற்கு ஆளான விகாஸ் துபே என்ற பேர்வழி, கான்பூரிலிருந்து இந்தூருக்கு காவல் அடைப்புக்கைதியாகக் கொண்டுவரப்பட்டபோது, காவல்துறையினரால் கொல்லப்படுவது வரை நாம் பார்த்தோம்.

முதல்வரின் சாதிப்பாசம்
ஆதித்யநாத் தாக்குர் சாதியைச் சேர்ந்தவர். அவர் சாதிப் பாசம் எந்த அளவிற்கு உண்டு என்பதனை, அவர் 2017இல் தாக்குர் சாதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் என்பவர் 17 வயதுள்ள ஒரு பெண்ணைபாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய வழக்கில் அவரைப்பாதுகாப்பதற்காக எந்த அளவுக்கு செயல்பட்டார் என்பதைப் பார்த்தோம். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை செங்காரின் ஆட்களால் அடித்தே கொல்லப்பட்டார். ஓராண்டுக்குப் பின், உயர்நீதிமன்றம் தலையிட்டபின்புதான், செங்கார் கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்குமத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகத்திற்கு ஒப்படைக்கப்பட்டு, அவர் தண்டனை பெற்றார். வழக்கை விசாரிக்க குற்றப்புலனாய்வுக் கழகம் (சிபிஐ), செங்காரைக் காப்பாற்ற மூன்றுபோலீஸ் அதிகாரிகளும், ஒரு ஐஏஎஸ் அதிகாரியும் முயற்சித்தனர் என்று கண்டு, அவர்கள்மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு அறிக்கை தாக்கல்செய்தது. எனினும், ஆதித்யநாத் அரசு அவர்களுக்கெதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

உ.பி. மாநில அரசின் நிர்வாகத்திலும், காவல்துறையினலும் இந்துத்துவா மதவெறி நஞ்சு முழுமையாக ஏற்றப்பட்டிருக்கிறது. இந்து மதப்பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும் என்று அனைத்துக் காவல்நிலையங்களுக்கும் அறிவுரைகள் அனுப்பப்பட்டிருக்கின்றன. 2013இல் முசாபர்நகரில் முஸ்லீம்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானவர்கள் மீதிருந்த 38 கிரிமினல் வழக்குகளை அரசாங்கம் திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டது. இதில் பல பாஜக எம்எல்ஏ-க்களும், எம்.பி.க்களும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.

இந்துத்துவா குண்டர்களுக்கும்  போலீசாருக்கும் வித்தியாசமில்லை
ஆதித்யநாத் ஆட்சி, எவ்விதமான கிளர்ச்சிப் போராட்டங்களையோ, அல்லது, தங்கள் அரசுக்கு எதிரான கருத்துவேறுபாட்டையோ சகித்துக்கொள்ளது. அவ்வாறுஈடுபடுபவர்களை நசுக்குவதற்குக் காவல்துறையினர் கொஞ்சமும் கூச்சநாச்சமின்றிப் பயன்படுத்தப்படுவார்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் மிகவும் கொடூரமான முறையில் கையாளப்பட்டன. இதில் குறைந்தபட்சம் இருபது பேர் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டால் கொல்லப்பட்டனர். முஸ்லீம்களின் கடைகள் மற்றும் வீடுகள் காவல்துறையினரால் குறிவைத்துத் தாக்கப்பட்டன. அவர்கள் மீது பெரிய அளவில்அபராதங்கள் விதிக்கப்பட்டன. இந்துத்துவா வெறித்தனத்தில் ஈடுபட்ட குண்டர்களுக்கும், உ.பி. போலீசாருக்கும் இடையே அநேகமாக எந்த வித்தியாசமுமில்லை.

ஹத்ராஸ் அட்டூழியம், உ.பி. காவல்துறையும் நிர்வாகமும் எந்த அளவுக்கு சாதி வெறியர்களையும், மதவெறியர்களையும் காப்பாற்றிட முயலும் என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது. இத்தகைய இரக்கமற்றோர் ஆட்சியில் ஏழைகளுக்கும்,  ஒடுக்கப்பட்டோருக்கும் எவ்விதமான உதவியும் கிடைக்காது. இந்து ராஷ்ட்ரம் நடைபெற்றால் அது எந்த அளவுக்கு காட்டுமிராண்டித்தனமான ஆட்சியாக இருந்திடும் என்பதற்கு உத்தரப்பிரதேச மாநில அரசு ஓர் சரியான எடுத்துக்காட்டாக விளங்குவதுடன் அது, நாட்டின் இதர பகுதி மக்களுக்கு ரத்தத்தை உறையவைத்திடும் ஓர் எச்சரிக்கையாகவும் இருந்து வருகிறது.

(அக்டோபர் 7, 2020),
தமிழில் : ச.வீரமணி

;