1947 ஒரு கால்பந்தாட்ட மைதானத்தின் அளவுக்கு நீளமான இறக்கையும், 5 மாடிக் கட்டிடத்தின் உயரமும் கொண்டதாக வருணிக்கப்பட்ட, இன்றுவரை உலகின் மிகப்பெரிய இறக்கை கொண்ட விமானமான ‘ஹ்யூஜஸ் எச்-4 ஹெர்க்குலிஸ்’, முதலும் கடைசியுமாகப் பறந்தது. இரண்டாம் உலகப்போரின்போது, ஜெர்மனியின் யு-போட் என்னும் நீர்மூழ்கிகளால், அட்லாண்ட்டிக் கடற்பகுதியில் பெரும் இழப்புகளைச் சந்தித்தது அமெரிக்கா. அருகாமை பகுதிகளுக்கு மட்டுமே தளவாடங்களை எடுத்துச்செல்லும் திறன்கொண்ட விமானங்கள்தான் அப்போது இருந்தன. தொலைதூரத்தி லுள்ள பிற போர்க்களங்களுக்கும், மிகப்பெரிய எடையைச் சுமந்து செல்லத்தக்க மூன்று விமானங்களை இரண்டு ஆண்டுகளுக்குள் தயாரித்துத்தருமாறு 1942இல் அமெரிக்கப் போர்த்துறை கேட்டுக்கொண்டது.
கப்பல் கட்டுபவரான ஹென்றி கெய்சர், விமான வடிவமைப்பாள ரான ஹோவர்ட் ஹ்யூஜஸ் உதவியுடன், 68 டன் சரக்குகள் அல்லது, ஒவ்வொன்றும் 30 டன் எடையுள்ள இரண்டு கவசவண்டிகளைச் சுமந்துசெல்லக்கூடிய ‘பறக்கும் சரக்குக் கப்பல்’ ஒன்றை உருவாக்க முனைந்தனர். போரினால் அலுமினியம் கிடைப்பதிலிருந்த சிக்கல்கள் உள்ளிட்ட காரணங்களால், தயாரிப்புப் பணிகள் 16 மாதங்களுக்குத் தொடங்கவேயில்லை. இதனால், கெய்சர் விலகிக்கொண்டார். அக்காலத்தின் மிகச்சிறந்த முன்னேற்றமாகக் கருதப்பட்ட ட்யூராமோல்ட் முறையில் பாதுகாக்கப்பட்ட மரத்தைக்கொண்டு உருவாக்கப்பட்ட இவ்விமானம், போர் முடியும்வரை முழுமைபெறவில்லை.
1947இல் (ஒரு விமானம் மட்டும்) கட்டி முடிக்கப்பட்டபோது 2.3 கோடி டாலர்கள் (இன்று இந்திய ரூபாயில் 2,150 கோடி!) செலவாகியிருந்தது. 8 என்ஜின்களும், 321 அடிநீள இறக்கைகளும் கொண்ட இது 4 பகுதிகளாக கலிஃபோர்னியாவின் லாங் கடற்கரைக்குக் கொண்டுவரப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டது. அதைச்சுற்றி விமானக்கொட்டகையும், நீரில் இறக்குவதற்கு சரிவுப் பாதையும் அமைக்கப்பட்டன.
நவம்பர் 2 அன்று, ஏராளமா னோர் முன்னிலையில் 36 பேருடன், 70 அடி உயரத்தில், 217 கி.மீ. வேகத்தில் 26 நொடிகள் மட்டும் பறந்து, பறக்கும் திறன் நிரூபிக்கப்பட்டதோடு, போர் முடிந்து விட்டதால் தேவையின்றிப்போன இதன் பயன்பாடு முடிந்து போனது. ஹ்யூஜஸ் உயிருடன் இருந்தவரை முறையாகப் பராமரிக்கப்பட்டுவந்த, இதன் உரிமையாளர் யார் என்பதில், அவர் இறந்தபின் சச்சரவுகள் ஏற்பட்டு 1970களில் தீர்க்கப்பட்டது. இது தற்போது ஓரிகானிலுள்ள எவர்க்ரீன் ஏவியேஷன் அண்ட் ஸ்பேஸ் மியூசியத்திலுள்ளது. 2019இல் வானில் பறந்துகொண்டே செயற்கைக்கோள்களை ஏவ உருவாக்கப்பட்ட ஸ்ட்ரேட்டோலாஞ்ச் என்ற விமானத்தின் 385 இறக்கை இதைவிடப்பெரிது என்றாலும், அது வழக்கமான விமானமில்லை என்பதுடன், பறக்கும் படகு(கப்பல்!) என்ற வகையிலும், ஹெர்க்குலிஸ் தனித்தன்மை கொண்டதாகவே விளங்குகிறது.