tamilnadu

img

இந்நாள் டிச. 04 இதற்கு முன்னால்

1791 - உலகின் முதல் ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாளான ‘தி அப்சர்வர் ‘ முதன்முறையாக வெளியானது. உலகின் மற்ற நாடுகளைப் போலன்றி, இங்கிலாந்தில் மட்டும் ஒரு வினோதமான நடைமுறை உள்ளது. அங்கு, பெரும்பாலான நாளிதழ்கள் ஞாயிறன்று வெளியாவதில்லை. அதனாலேயே ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாள்கள் என்பவை அங்கு வெளியாகின்றன. சில செய்தித்தாள் நிறுவனங்கள், தாங்களே ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாள்களை தற்போது வெளியிட்டாலும்கூட, அவை நாளிதழிலிருந்து மாறுபட்ட தனி செய்தித்தாளாகவே வெளியாகின்றன. உதாரணமாக, தி டைம்ஸ் நாளிதழை வெளியிடும் நிறுவனம், ஞாயிற்றுக்கிழமைகளில், தி சண்டே டைம்ஸ் என்ற இதழை வெளியிட்டாலும், அதில் வெளிவரும் செய்திகளை டைம்ஸ் நாளிதழின் செய்திகளாக அந்நிறுவனம் ஏற்பதில்லை.

அதாவது, தனித்தனிப் பதிவு எண்கள், ஆசிரியர் குழுக்கள் என்று முழுமையாக தனித்தனி இதழ்களாகவே அவை நடத்தப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் செய்தித்தாள்கள் வராது என்பதால், தன் இதழுக்கு மிகப்பெரிய வரவேற்புக்கிடைக்கும், பெரும் பொருளீட்டலாம் என்ற எதிர்பார்ப்புடன் டபிள்யூ.எஸ்.போர்னி, 100 பவுண்டுகள் கடன் வாங்கி அப்சர்வர் இதழை தொடங்கினார். ஆனால், மூன்றாண்டுகளில் 1600 பவுண்டுகள் கடனாளியாகிப்போனார். கடன்களை அடைப்பதற்காக செய்தித்தாளை அரசுக்கு விற்பனை செய்ய விரும்பினாலும், அரசு வாங்கத் தயாராக இல்லை.

மாறாக, மானியம் வழங்குவதாகவும், அரசுக்கு ஆதரவாக எழுதவேண்டுமென்றும் அரசு கூற, அரசுக்கு ஆதரவான செய்தித்தாளாக மாறிப்போனது. வேறு இதழ்களை நடத்திக்கொண்டிருந்த வில்லியம் க்ளமெண்ட் என்பவருக்கு 1814இல் விற்கப்பட்டாலும், அரசு மானியம் தொடர்ந்தது. 1819இல் 23 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு, 10 ஆயிரம் பிரதிகள் மாதிரிப் பிரதிகள் என்ற பெயரில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பெரிய மனிதர்களுக்கு வழங்கப்பட்டன. அவ்வாறு வழங்குவதற்காக அஞ்சல் ஊழியர்களுக்குக் கட்டணமும் வழங்கப்பட்டது! பலமுறை கைமாறிய இந்த செய்தித்தாளின் விற்பனை, முதல் உலகப்போர்க் காலத்தில் 2 லட்சம் பிரதிகளை எட்டியது.  ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாளாக தனியாகவே 202 ஆண்டுகள் தொடர்ந்த இது, 1993இல் கார்டியன் ஊடகக் குழுமத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. 2005இல் தொடங்கப்பட்ட அப்சர்வர் ப்ளாக்-கில் நிர்வாக முடிவுகளை வெளியிட்டு, அவ்வாறு வெளியிட்ட முதல் செய்தித்தாளான அப்சர்வர், பாட்காஸ்ட் மூலம் ஒலிப்பதிவுகளை வெளியிட்ட முதல் செய்தித்தாளுமாகியது. 1791இலிருந்து வெளியான இதழ்களையும் இவ்விதழ் இணையத்தில் வெளியிட்டுள்ளது.