tamilnadu

img

இந்நாள் ஜுலை 24 இதற்கு முன்னால்

1911 - இன்கா மக்களின் தொலைந்த நகரம் என்று அறியப்பட்ட, பெரு நாட்டிலுள்ள மலைமீதமைந்த ‘மச்சு-பிச்சு’ கோட்டை, அமெரிக்கப் பயணியான ஹிராம் பிங்கம் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. கொலம்பசின் வருகைக்கு முன்னரே அமெரிக்காவில் இருந்த மிகவும் வளர்ச்சிபெற்ற நாகரிகமாக இன்கா பேரரசு குறிப்பிடப்படுகிறது. உலகின் அடிப்படையான ஐந்து நாகரிகங்களுள் ஒன்றான, பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மைவாய்ந்த ஆண்டிஸ் நாகரிகங்களின் கடைசிக் கட்டமாக இன்கா பேரரசு குறிப்பிடப்படுகிறது. 1438இல் இன்கா பேரரசாக நிறுவப்பட்டு,  ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன், தற்போதைய பெரு நாட்டை மையமாகக் கொண்டு, பசிபிக் கடலோரப் பகுதிகள், ஆண்டிஸ் மலைப் பகுதிகளில் 20 லட்சம் ச.கி.மீ.களுக்குப் பரவியிருந்தது.

சக்கரங்கள் பொருத்திய வண்டிகள், ஏறிப் பயணிக்கும் விலங்குகள், இரும்பு முதலானவற்றை இன்கா மக்கள் அறிந்திருக்கவில்லை. இவர்கள் பேசிய கெச்சுவா மொழிக்கு எழுத்து வடிவமும் இல்லையென்றாலும், தகவல்களை நூல், உரோமம் ஆகியவற்றில் முடிச்சுகளின்மூலம் பதிவு செய்துள்ளனர். (இவர்களின் தெளிவான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இத்தொடரில் 2019 மார்ச் 10இல் இடம்பெற்றுள்ளது.) நாடு முழுவதும் (சுமார் 3,600  கி.மீ.க்கு)சாலைகள், கற்களாலான மிகச்சிறந்த கட்டிடங்கள், சிறப்பாக நெய்யப்பட்ட துணி வகைகள் என்று மிகவும் முன்னேறியிருந்த இவர்களுக்கு நாணயம் இல்லை.

நிதி என்பதே இல்லாவிட்டாலும், வரிகள்கூட விதிக்கப்பட்டு, அவை அரசுக்கு உழைப்பாகச் செலுத்தப்பட்டுள்ளன. 1450வாக்கில், இன்கா பேரரசர் பச்சாக்குட்டி-க்காக ‘மச்சு-பிச்சு’ கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. 1520களில் இன்கா பேரரசர் ஹ்வாய்னா காப்பக்-கின் மறைவிற்குப்பின், அவர் மகன்கள் இருவருக்கிடையேயான வாரிசுரிமைப்போர், உள்நாட்டுப் போராகியது. பேரரசு பலவீனப்பட்டிருந்த இக்காலத்தில் வந்த ஸ்பானியர்களின் இரும்பு ஆயுதங்களை, இன்காவின் மர, செம்பு ஆயுதங்களால் எதிர்க்கமுடியவில்லை. ஸ்பானியர்கள் வருகையால் வந்த புதிய நோய்களும் இவர்களை பலவீனப்படுத்த, இன்காவை ஸ்பானியர்கள் கைப்பற்றினர். ஸ்பானியர்கள் வந்தபோது இன்கா மக்களால் கைவிடப்பட்ட ‘மச்சு-பிச்சு’வின் இருப்பிடம் உள்ளூர் மக்களைத்தவிர மற்றவர்களுக்குத் தெரியாததால், தொலைந்த நகரம் என்றழைக்கப்பட்டது. 1911இல் கண்டுபிடிக்கப்பட்ட இது, யுனெஸ்கோ பாரம்பரியக் களங்களுள் ஒன்றாகப் பராமரிக்கப்படுகிறது.