tamilnadu

img

இந்நாள்... டிசம்பர் 29 இதற்கு முன்னால்...

1940 - லண்டனின் இரண்டாவது பெரும் தீ என்று குறிப்பிடப்படும் தீ, இரண்டாம் உலகப்போரின்போது, ஜெர்மன் வான்படை வீசிய குண்டுகளால் ஏற்பட்டது. உண்மையில், (இத்தொடரில் 2017 செப்டம்பர் 2இல் இடம்பெற்ற) 1666இன் லண்டன் பெரும் தீயைவிட அதிகமான பகுதிகள் இதில் பற்றி எரிந்தன. 29, 30 ஆகிய இரு நாட்களில் மட்டும் சுமார் ஒரு லட்சம் தீக்குண்டுகளை ஜெர்மன் வான்படை லண்டனின்மீது வீசியது. 1940 செப்டம்பர் 7இலிருந்து, 1941 மே 11வரை நடைபெற்ற ப்ளிட்ஸ் என்ற தாக்குதலின் ஒரு பகுதியாக இக் குண்டுவீச்சு நடைபெற்றது. 1940 ஜூனில் பிரான்சை வென்றதும், இங்கிலாந்தின்மீது ஜூலை 10இல் ஜெர்மனி தொடுத்த தாக்குதல், பிரிட்டன் யுத்தம் என்று குறிப்பிடப்படுகிறது. இங்கிலாந்துக்கு நெருக்கடி ஏற்படுத்தி, ஓர் அமைதி ஒப்பந்தத்தை ஏற்கச் செய்வதே இத்தாக்குதலின் நோக்கமாக இருந்தது.  எதிர்பார்த்த பலன் கிடைக்காததால், ஜூலை 16இல், ஆப்பரேஷன் கடல் சிங்கம் என்ற பெயரில் நீர்-நில தாக்குதல்களும் தொடங்கப்பட்டன.

வான்படைத் திறனில் இங்கிலாந்தைவிட ஓங்கியதாக ஜெர்மன் வான்படை இருக்க வேண்டும் என்பதற்காக, இங்கிலாந்தின் வான்படைத் தளங்கள், போர்விமான உற்பத்திக்கூடங்கள் ஆகியவற்றைக் குறிவைத்துக் குண்டுகள் வீசப்பட்டன. அடுத்து அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின்மீதும், பொதுமக்கள்மீதும் குண்டுவீச்சுகள் நடத்தப்பட்டா லும், பகல் நேரத் தாக்குதல்களில் பெரிதாக சாதிக்க முடியாத நிலை யில் தொடங்கப்பட்ட இரவுநேரத் தாக்குதலுக்கு ப்ளிட்ஸ்க்ரீக் (மின்னல் போர்) என்று ஜெர்மனி பெயரிட்டிருந்ததே, ப்ளிட்ஸ் என்றழைக்கப்படுகிறது. எதிரிப் படைகளின் முக்கியத் தளங்களை திடீர்த்தாக்குதல்மூலம் அழித்து, அவர்களை அமைதிப் பேச்சை நோக்கித் தள்ளுவது, ‘நிர்மூல யுத்தம் (பேட்டில் ஆஃப் அனிஹிலேஷன்)’ என்று குறிப்பிடப்படு கிறது. அவ்வாறு இங்கிலாந்தை நிலை குலையச் செய்யும் நோக்கத்துடன், இத்தாக்கு தல் தொடங்கியதிலிருந்து 57 நாட்களில் 56 இரவு கள் விமானங்கள் குண்டுகளை வீசின. ப்ளிட்ஸ் தாக்குதலில் மட்டும் 41 ஆயிரம் டன் குண்டுகள் வீசப்பட்டதில், நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட இங்கிலாந்து பொதுமக்கள் பலியாயினர். ஆனாலும், எதிர்பார்த்த படி இங்கிலாந்தைப் பணியச் செய்ய முடியாததால், ஆபரேஷன் பார்பரோசா என்ற பெயரில் அடுத்த ஆண்டில் நடத்தப்படவிருந்த சோவியத் மீதான தாக்குதல்மீது கவனத்தைத் திருப்பிய ஹிட்லர், இந்த யுத்தத்தை முடித்துக்கொண்டார்.

;