உலகின் சிறந்த சி.இ.ஓ பட்டியலில், கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை 88வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
உலகத்தில் உள்ள அனைத்து முன்னணி நிறுவனங்களின் சிறந்த சிஇஓகளுக்கான ஆய்வை ரெப்புட்டேஷன் இன்ஸ்டிடியூட் நடத்தியது. இதை அடுத்து, இந்த வருடத்திற்கான சிறந்த சிஇஓ ரெப்டிராக் ஆய்வின் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஷெல் நிறுவனத்தின் சி.இ.ஓ, பென் வான் பர்டன் முதலிடத்தை கைப்பற்றியுள்ளார். அவரை தொடர்ந்து, லீகோ நிறுவனத்தின் சி.இ.ஓ நீல்ஸ் கிறிஸ்டென்சன் இடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இதே சிறந்த சிஇஓ ரெப்டிராக் ஆய்வில் முதல் இடம் பிடித்த சுந்தர் பிச்சை தற்போது 88-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்த ஆய்வில், கடந்த ஆண்டில் முன்னணி இடத்தை பிடித்திருந்த தொழில்நுட்பம் சார்ந்த சிஇஓக்கள் அனைவரும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அமேசான் நிறுவனத்தின் சி.இ.ஓ, ஜெஃப் பெஸோஸ் மற்றும் பேஸ்புக் நிறுவனத்தின் சி.இ.ஓ, மார்க் ஜுக்கர்பெர்க்கும், இந்த ஆண்டு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டில் நடைபெற்ற பல தொழில்நுட்ப சர்ச்சைகள் மற்றும் பிரச்சனைகளின் காரணமாகத் தான் கூகுள், அமேசான் மற்றும் பேஸ்புக் போன்ற சிஇஓக்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக கூகுள் நிறுவனத்தில் நிகழ்ந்த ஆண்ட்ராய்டு பாதுகாப்பு சர்ச்சைகள், பாலியல் தொந்தரவு சர்ச்சை எனப் பல சர்ச்சைகள் காரணமாக, சுந்தர் பிச்சை பின்னுக்குத் தள்ளப்பட்டதாக ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.