tamilnadu

ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை சம்பவம் மூவரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

நாமக்கல், மே 16-குழந்தைகள் விற்பனை சம்பவத்தில், ஈரோட்டைச் சேர்ந்த இடைத்தரகர்களான அருள்சாமி, லீலா, செல்வி ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை நாமக்கல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்தவர் அமுதா என்ற அமுதவள்ளி (50). விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர். இவர், கடந்த மாதம் 25 ஆம் தேதி குழந்தைகள் விற்பனை தொடர்பாக ஒருவரிடம் செல்லிடப்பேசியில் பேரம் பேசிய தகவல் சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், ஈரோட்டைச் சேர்ந்தஇடைத்தரகர்களான அருள்சாமி, பர்வீன்பானு, ஹசினா என்ற நிஷா, லீலா, செல்விஆகிய எட்டு பேரை கைது செய்தனர். அதன்பின் வழக்கு சிபிசிஐடி வசம்ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி, சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் சாந்தி என்பவரைக் கைது செய்தனர்.இந்த வழக்கில், அமுதா, ரவிச்சந்திரன், பர்வீன்பானு, அருள்சாமி, ஹசினா உள்ளிட்டோர் ஜாமீன் வழங்கக் கோரி நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதுதொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணையில் இருப்பதால், ஜாமீன் வழங்க முடியாது என நீதிபதி ஹெச்.இளவழகன் மனுக்களைத் தள்ளுபடி செய்தார். இந்நிலையில், அருள்சாமி, லீலா, செல்வி ஆகிய மூவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி செவ்வாயன்று நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் புதனன்று விசாரணைக்கு வந்தன. சிபிசிஐடிவிசாரணை தொடர்வதால், மூவரின் ஜாமீன் மனுக்களையும் நீதிபதி ஹெச்.இளவழகன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

;