tamilnadu

குமரி மாவட்டத்தில் வாக்குப்பதிவு: 50 இடங்களில் இயந்திரம் பழுது

நாகர்கோவில், ஏப்.18-கன்னியாகுமரி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனால் வாக்களிக்க வந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் காலையிலேயே ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். ஆனால்பல வாக்குச்சாவடிகளில் இயந்திரங்கள் பழுதானது. இதனால் வாக்களிக்க வந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து வாக்களித்தனர். சில இடங்களில் பொறுமை இழந்து வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர். கன்னியாகுமரி அருகே உள்ள ஒற்றையால்விளை அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதுமே இயந்திரம் செயல்படவில்லை. அப்போது 40-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க காத்து நின்றனர். 8 மணி வரை அவர்கள் காத்து நின்றும் இயந்திரத்தின் பழுது சரி செய்யப்படாததால் வாக்காளர்கள் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர். பழுது சரி செய்யப்பட்டதும் வந்து வாக்களிப்போம் என கூறினர்.


நாகர்கோவில் பகுதியில் 14 இயந்திரங்கள் பழுது


பொன்மனையில் 43-வது வாக்குச்சாவடியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாகவாக்குப்பதிவு இயந்திரம் செயல்பட வில்லை. பெருஞ்சாணி 32-வது வாக்குச் சாவடியில் திடீரென இயந்திரம் பழுதாகி நின்றது. இதேபோல அருவிக்கரை ஊராட்சி தச்சூர் வாக்குச்சாவடி, செறுகோல் ஊராட்சி 150-வது வாக்குச்சாவடி, அயக்கோடு ஊராட்சி கல்லடிமாமூடு 89-வது வாக்குச்சாவடி, தூத்தூர் பகுதியில் 59, 58, 61 வாக்குசாவடிகள், கல்லங்குழி 118-வது வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது.நாகர்கோவிலில் எஸ்.எல்.பி. அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது. பின்னர் பழுது நீக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. நாகர்கோவில் பகுதியில் மட்டும் 14 இடங்களில் இயந்திரம் பழுதானது. இதில் இருளப்பபுரம், மாதவலாயம், கிருஷ்ணன்கோவில், இறச்சகுளம் பகுதியில் இயந்திரங்களை பழுது பார்க்க முடியாததால் வேறு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.அஞ்சுகிராமம் பேரூராட்சிக்குட்பட்ட ஜேம்ஸ்டவுன் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் சோதனை வாக்குப்பதிவு தொடங்கியது. அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென பழுதடைந்தது. இதனால் வாக்குப் பதிவு மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தொழில்நுட்ப அலுவலர்கள் உதவியுடன் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு சரி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஒரு மணி நேரம் தாமதமாக இந்த மையத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் காலையில் வாக்குப் பதிவு செய்ய வந்த வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். கிள்ளியூர் தொகுதியில் 16 இடங்களில் இயந்திரங்கள் பழுது ஏற்பட்டது. மொத்தம் மாவட்டம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இயந்திரம் பழுது ஏற்பட்டது.


வாக்குச்சாவடி முற்றுகை


குமரி மாவட்டத்தில் பெரும்பாலும் கடற்கரை கிராமங்களான குளச்சல், தூத்தூர், இரவிபுத்தன்துறை, பூத்துறை உள்ளிட்ட கிராமங்களில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் பெரும்பாலான இயந்திரங்கள் பழுது காரணமாக இயங்கவில்லை. சுமார் 2 மணி நேரம் வரை இப்பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு பழுதால் வாக்காளர்கள் தவித்தனர். பின்னர் பழுது சரிசெய்யப்பட்டதும் வாக்குப்பதிவு தொடங்கியது.குமரி மாவட்டத்தில் மட்டும் ஆயிரக்கணக்கானோருக்கு வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாததால் வாக்காளர்கள் அதிர்ச்சியடைந்தனர். குறிப்பாக தூத்தூர் பகுதியில் 63,64,65 எண் கொண்ட வாக்குசாவடிகளில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாததால் பாதிக்கப்பட்ட மக்கள் வாக்குசாவடிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். வாக்காளர் வரைவு பட்டியல், திருத்தப்பட்ட பட்டியல் என தேர்தல் ஆணை யம் பலமுறை பட்டியல்கள் எடுத்தும் ஆயிரக்கணக்கான வாக்காளர் பெயர்கள்பட்டியலில் விடுபடுகிறது. அப்படி யென்றால் தேர்தல் ஆணையம் நியாய மாகத்தான் இந்த தேர்தலை நடத்துகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் எச்.வசந்தகுமார் அவரது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரம் அரசு பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார்.



;