tamilnadu

img

கொள்ளிடம் ஆற்றங்கரை சாலை மேம்படுத்தப்படுமா? சிபிஎம் சார்பில் சாலை மறியல்....

சீர்காழி:
கொள்ளிடம் சோதனைச் சாவடியிலிருந்து குத்துவகரை, சரஸ்வதிவளாகம், கொன்னகாட்டு படுகை, சிதம்பரநாதபுரம், கீரங்குடி, மாதிரவேலூர், பால்ஊரான்படுகை, பட்டியமேடு, வாடி, ஏத்தகுடி, வடரங்கம் உள்ளிட்ட 
கிராமங்கள் வழியாக பனங்காட்டாங்குடி செல்லும் கொள்ளிடம் ஆற்றங்கரை சாலை மேம்படுத்தப்பட்டு 12 வருடங்களுக்கும் மேல் ஆகிறது.

அதற்கு பிறகு இந்த சாலையை மேம்படுத்தாமல் கைவிட்டதால் கரையோர கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த சாலையில் கற்கள் பெயர்ந்து வாகனங்களின் டயர்களை கிழித்து, விபத்தை ஏற்படுத்துகிறது. இந்த ஆற்றங்கரை சாலையை மேம்படுத்தக் கோரி கரையோர கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள்மற்றும் பொதுமக்கள் சார்பில் கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த சாலையை மேம்படுத்த இதுவரை எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இதுகுறித்து கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராம மக்கள் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கே.கேசவன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் கே.ஜெகதீசன், வி.தொ.ச. மாவட்ட குழு உறுப்பினர் எல்.சுந்தரலிங்கம் உள்ளிட்டோர்  கூறுகையில், கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையை மேம்படுத்தக் கோரி அனைத்து கிராம மக்கள் சார்பில் பலமுறை பல வகையான போராட்டங்கள் நடத்தியும் சாலையை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சாலையை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே மேம்படுத்தவில்லை என்றால் பாதிப்புக்குள்ளான அனைத்து கிராம பொது மக்களையும் திரட்டி சாலைமறியல் போராட்டம் நடத்துவதாக கூறினர்.

;