tamilnadu

img

கூலியை உயர்த்திக்கேட்ட செங்கல் சூளை தொழிலாளி கொலை.... நீதி கேட்டு போராட்டக்களமான மயிலாடுதுறை மாவட்டம்.....

மற்றகட்சிகளெல்லாம் தேர்தல் முடிந்த கையோடு தங்கள் வேலையும் முடிந்தது என அமைதியாக இருக்கும் சூழலில் கடந்த 1 வாரத்திற்கும் மேலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி,விடுதலை சிறுத்தைகள் மற்றும் குறிப்பிட்ட சில முற்போக்கு அமைப்புகள்  மட்டும் கடந்த 1 வார காலமாக சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பசி, பட்டினியோடு, கூலி தொழிலாளியின் கொலைக்கு நீதி கேட்டு போராடி வருகின்றன. கொலைக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையும்,மாவட்ட ஆட்சியரும் வழக்கத்தைவிட மிக அமைதியாய் இருப்பதற்கும்,கொலையாளிகளுக்கு சாதகமாக செயல்படுவதற்கும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கவனிப்பு தான்காரணம் என கிராம மக்கள் வெளிப்படையாகவே கூறுகின்றனர். 
கொலை நடந்த சில மணி நேரத்திற்க்குள்ளாகவே அந்த இடத்திற்கு சென்று அந்தநேரத்திலிருந்து இதுவரை நீதியை பெற்றே தீருவோம் என போராட்டக்களத்தில் முன் நிற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் கூறும் போது, கொலை நடந்து ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டது.  எஸ்.பியோ கொலை இல்லை, தற்கொலை என வாய்கூசாமல் பொய் சொல்கிறார். மாவட்ட ஆட்சியரோ இதுவரை கொலை குறித்து எதுவும் பேசாமல் இருப்பது ஏன் ? என தெரியவில்லை என் றார். 

சீர்காழி அருகேயுள்ள நெப்பத்தூர் என்கிற கிராமத்தில்  செயல்படும் ஆர்.கே.பி. செங்கல் சூளையில் 27 வருடங்களாக சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்துவந்தவர்  சீனிவாசன். தலித் சமூகத்தைச் சேர்ந்த  இவர் திருவாலி நிம்மேலி நடுத் தெருவில் தன் குடும்பத்தோடு வசித்து வந்தார்.   மனோன்மணி (36) என்ற மனைவியும், பிரியதர்ஷினி (14), பிரியங்கா (10), ஆகிய இரண்டு பெண் குழந்தைகளும், பிரதீப் (12) என்ற ஒரு மகனும் உள்ளனர். ஆர்கேபி சேம்பரில் மற்ற கூலி தொழிலாளிகளுக்கெல்லாம் சம்பளபிரச்சனை ஏற்பட்டால் அதை நிறுவனத்திடம் போராடிப்பெற்று தருபவராக இருந்த சீனிவாசனுக்கு சம்பளப்பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து  அந்நிறுவன உரிமையாளரின் மகனான சித்தார்த்துடன் தகராறு ஏற்பட்டதையடுத்து சீனிவாசன் பணியிலிருந்து விலகி வேறு ஒரு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்திருக்கிறார். இதனிடையே  கடந்த 17/04/2021  அதிகாலை 3 மணிக்கு ஆர்.கே.பி. செங்கல் சூளையிலிருந்து போன் வந்ததாகவும்,பேச்சுவார்த்தைக்கு ஓனர்கூப்பிடுவதாகவும்  மனைவியிடம் கூறிவிட்டுசெங்கல் சூளைக்கு  சென்றவர் வீடு திரும்பவில்லை.  பிறகு அவருடைய மனைவியின் செல்போனில் அழைத்த நபர் ஒருவர் உன் கணவர்தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்து தனது உறவினர்கள், அருகிலுள்ளவர்களுடன் சென்று  செங்கல் சூளைக்கு சென்று பார்த்தபோது சூளையில் அமைக்கப்பட்டிருந்த  தகரக்கொட்டகையில் பலத்த காயங்களுடன்  தூக்குப்போட்டு  காதுகள், மூக்கில் ரத்தம் வழிந்தபடி இறந்தநிலையில் காணப்பட்டார். 

இதனை அறிந்ததும் சீனிவாசனை கொலை செய்துவிட்டார்கள் என்று கூறி உறவினர்கள், ஊர் பொதுமக்கள்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சேர்ந்தவர்கள்  செங்கல் சூளையை  முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல்  அறிந்து அங்கு வந்தமயிலாடுதுறை எஸ். பி. ஸ்ரீ நாதா, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன், சீர்காழி தாசில்தார் ஹரிதரன், ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தகவலறிந்த நான் உட்பட கட்சியின் மாவட்ட செயற்குழு,மாவட்டக்குழு உறுப்பினர்கள்,சீர்காழி ஒன்றிய செயலாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்குவிரைந்து சென்று கொலை செய்த செங்கல் சூளை உரிமையாளரையும் அவரது மகன் உள்ளிட்டோரை கைது செய்தால்தான் உடலை எடுத்துச் செல்ல அனுமதிப்போம் எனக்கூறி  17.4.2021 முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டோம்.

அதனைத் தொடர்ந்து திருவெண்காடு போலீசார்  சம்பந்தப்பட்டவர்களை காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தி  செங்கல் சூளைஉரிமையாளர் ராஜஸ்தானை சேர்ந்த சுரேஷ் ஜெயின் அவரது மகன் சித்தார்த், செங்கல் சூளையின் காவலர் மோகன்ராஜ் ஆகியோர் மீது சில  பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து  சிறையில் அடைத்தனர். ஆனால் நாங்கள் முன்வைக்கும் கொலை வழக்கைப்பதிவு செய்யவில்லை. இதையடுத்து இறந்துபோன சீனிவாசன் உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது  இறந்தவர் சார்பில் வீடியோ பதிவு செய்ய வேண்டும், இறந்தவர் சார்பில்  வழக்கறிஞர் ஒருவர், பிரேத பரிசோதனை செய்ய நடுநிலையான மூன்று மருத்துவர்கள் வேண்டுமென்று கோரிக்கை வைத்து  20.4.2021 அன்று  4 ஆவது நாளாக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்நடைபெற்ற போராட்டத்தையடுத்து அன்று மாலை4 மணி அளவில் சீனிவாசனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 

கோட்டாட்சியர் நாராயணன் தலைமையில் பரிசோதனை நடைபெறுவதற்கு முன்பு இறந்துபோன சீனிவாசன் உடலில் எந்தெந்த இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன என உறுதிப்படுத்தவும், அடையாளப்படுத்திக்கொள்ளவும்  சீனிவாசனின் மனைவி மற்றும் வழக்கறிஞர், போராட்டக் குழுவில் உள்ள 7 பேர் அனுமதி  பெற்று உள்ளே சென்று உடலை பார்த்து வந்து 9 இடங்களில் பலத்த காயங்கள் உள்ளதை உறுதிசெய்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர். சீனிவாசனின் வலது கால் தொடையில் 3” கிழிந்த காயங்களும், இடது கணுக் காலில் முறிவும், வலது கால் முட்டி முறிவும், காதில் ரத்தம் ஒழுகிய நிலையும், ஆணுறுப்பில் பெரிய வீக்கமும், வலது தோள்பட்டை, மார்பின் இடது புறம், கழுத்தின் பின்பக்கம், தண்டுவடத்தில், முகம் ஆகியவற்றில் பலத்த காயங்களும், மூக்கில் ரத்தக்கசிவும் உள்ளது என்று கூறினர். இத்தனை ஆதாரங்கள் இருந்தும் கொலையாளிகள் மீது கொலை வழக்கு பதிய மறுத்ததால் சீனிவாசன் உடலை வாங்க மறுத்து. மறுநாள்   21/04/2021 புதன்கிழமை அன்று  சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே சாலை மறியலில்  ஈடுபட்டோம். இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் என்ற முறையில் நானும் கட்சியின் தலைவர்களும் ஊழியர்களும் என 2 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன முழக்கமிட்டடோம். 

ஏற்கனவே 4 கொலைகள்
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் ஜெயின் தொழில் செய்வதற்காக சீர்காழி வந்து பல கோடீஸ்வரர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தன்னிடம் பணம் பெற்றவர்கள் கேட்கும் வட்டியை தரவில்லையென்றால் அடியாட்களை வைத்து ஆளை கடத்திவந்து கொடூரத் தாக்குதல் நடத்தி சொத்தை அபகரிப்பது போன்ற சட்டவிரோதச் செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவராம். அவர் நடத்திவரும் செங்கல் சூளையும் அவருக்கு சொந்தமானது அல்ல கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்கேபி செங்கல்சூளையின் உரிமையாளர் சுரேஷ்ஜெயினிடம் பெற்ற கடனுக்கு வட்டியை முறையாக செலுத்தாததால் அபகரிக்கப்பட்டதாம்.பல ஆயிரம் கோடிகளில் புரளும் சுரேஷ் ஜெயின் தன்னை யார் கேள்விகேட்டாலோ தவறை சுட்டிக்காட்டினாலோ கொலை செய்து பழிதீர்த்துக்கொள்ளும் கொடூர எண்ணம் கொண்டவர் என்ற அதிர்ச்சியான தகவலும் தெரிய வருகிறது. அரசு நிர்வாகம்,காவல்துறை என அனைத்துத்தரப்பிலும் பணத்தை லஞ்சமாகஅளித்து குற்றங்களிலிருந்து தப்பி வந்துள்ளார். சீனிவாசனைப்போன்று ஏற்கனவே 4 தொழிலாளிகள் அதே இடத்தில் தூக்கில் தொங்கி இறந்துள்ளதையெல்லாம் தனது பண அதிகாரத்தில் ஒன்றுமில்லாமல் செய்துள்ளார். 

சீனிவாசனின் மரணம் அப்பட்டமான கொலை என்பது காவல்துறையினருக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அதை மறைப்பதற்காக எதையும் செய்யக்கூடிய சுரேஷின் திட்டத்தில் மாவட்ட நிர்வாகமும்,காவல்துறை விழுந்துவிடக்கூடாது. கொலையாளிகள் மீது கொலைவழக்கை பதிவு செய்யவேண்டும். வழக்கைசிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென வியாழனன்று மயிலாடுதுறை, தரங்கம்பாடி,குத்தாலம்,சீர்காழி,கொள்ளிடம் உள்பட மாவட்டம் முழுவதும் போராட்டங்களை நடத்தியுள்ளோம். அதேபோன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்மாவட்டம் முழுவதும் சாலைமறியல் போராட்டங்களும் நடந்துள்ளன. இத்தோடு நாங்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இனி எங்கள் போராட்டம் மிக தீவிரமாக மாறும். கோரிக்கைகள் நிறைவேறினால் தான் போராட்டத்தை கைவிட்டு சீனிவாசனின் உடலை பெற்று அடக்கம் செய்வோம் எனக் கூறினார். கூலியை உயர்த்திக்கேட்டதால் தொழிலாளியை கொலைசெய்யும் அளவுக்கு கொடூரமான சுரேஷ் ஜெயின் மீதும், அவரது மகன் சித்தார்த் மற்றும் சூப்பர்வைசர், மேனேஜர் உள்ளிட்டோர் மீது கொலை வழக்கை பதிவு செய்ய வேண்டும் என ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெறும் போராட்டம் நிச்சயம் வெற்றிபெறும்.

ஏப்.26 - ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் 

மயிலாடுதுறை மாவட்டம்,சீர்காழி அருகேயுள்ள நெப்பத்தூரில் கொலை செய்யப்பட்ட கூலித் தொழிலானி சீனிவாசனின் கொலைக்கு  நீதி கேட்டு வருகிற ஏப்.26 திங்களன்று அன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில்  முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி,மக்கள் அதிகாரம், திராவிடர் விடுதலை கழகம் மற்றும் முற்போக்கு இயக்கங்கள் கொண்ட போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நடைபெறவுள்ள  போராட்டத்திற்கு போராட்ட ஒருங்கிணைப்புக்கு தலைவரும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளருமான பி.சீனிவாசன் தலைமை வகிக்க உள்ளார்.

தொகுப்பு : பி.சீனிவாசன்

;