tamilnadu

img

த்ரில்லர் மெஷின்களும் தெனாவட் டி்ரம்ப்பும்

நட்ட நடுவீதியில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பின அமெரிக்கரின் கழுத்தில் முழங்காலை வைத்து நெறித்து வெள்ளை போலீசார் நடத்திய குரூர படுகொலை ட்ரம்ப் நிர்வாக இனவெறித் திமிரின் வேர்களை உலகிற்கு அம்பலப்படுத்தியது. 
டொனால்டு டிரம்ப் தனது ரியல் எஸ்டேட் விற்பனையை கறுப்பின மக்களுக்கு அளிப்பதில்லை. தனது நிறுவனத்தில் பணிபுரியும் கறுப்பின - வெள்ளை ஊழியர்களிடையே பாகுபாட்டை கொண்டிருந்தார் என்பதற்கு நிறைய தரவுகள் உள்ளன. சமீபத்திய அவரது அரசியல் உயர்வு நாட்டின் முதல் கறுப்பின ஜனாதிபதி பாரக் ஒபாமா கென்யாவில் பிறந்தார் என்ற இனவாத பொய்யை ஊக்குவித்ததன் அடிப்படையில் கட்டப்பட்டது. 

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கோர குணங்களில் ஒன்று இன-நிற வெறி. அமெரிக்காவில் 19வது நூற்றாண்டின் மத்தியிலிருந்து தொடரும் சைனோபோபியா எனப்படும் சீன எதிர்ப்புணர்வும் அப்படிப்பட்டதுதான். சீனாவை இழிவுபடுத்துவதற்கான ஒரு புதிய கருவியாக புதிய கொரோனா வைரசை  பயன்படுத்தி கேவலமான சீன எதிர்ப்புணர்வை இன வெறுப்பை விசிறிவிட டொனால்டு டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் ஏராளமான அறிவியல் புதினங்கள், திரைப்படங்கள், வீடியோ விளையாட்டுகள் சீனத்திற்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ளன.

‘டெர்ரர் கற்பனை’
ஒரு கதையை, அதன் பாத்திரப் படைப்புகளை உருவாக்கும் போது,  குறிப்பாக சீனா, வியட்நாம் போன்ற நாடுகளை புள்ளி வைத்து இணைக்கும் அருவருப்பான அரசியல் மற்றும் கலாச்சார  தாக்குதல் அமெரிக்காவின் கணிசமான படைப்புகளில்  உள்ளன. இதன் வரிசையில் சயின்ஸ் பிக்சன் எனப்படும் அறிவியல் திகில்   நாவலாசிரியர்களில் முக்கியமானவர் டீன் கூன்ஸ். அமெரிக்கரான இவர் ஒரு அறிவியல் புதினங்களை எழுதுகிற ஒரு  டெர்ரர் கற்பனை மெஷின்.கூன்சின் ஒரு திகில் கதையை  வாசிக்கத் துவங்கிய உடனே சராசரி மனிதர் எவரும் அவரது    கவர்ச்சி வலைக்குள் சிக்கிவிடுவர். 

ஆனால் முடிவில் குழப்பம்  மற்றும் விரக்தி கலந்த மன நிலைதான் அவர்களுக்கு கிட்டும்.  தொடர்ந்து டீன் கூன்சை படிக்கும் வாசகர்களில் ஒரு பகுதியினர் வெவ்வேறு அளவுகளில் மன நோயாளிகளாகவே உள்ளனர்.
இது ஒருபுறமிருக்க அடுத்த ஐம்பது ஆண்டுகளில் எதிர்காலத்தை ஊகித்து குறி சொல்வது  புத்தகங்கள் எழுதுவதில் மில்லியன்கள் டாலர் வருமானத்தில் அமெரிக்காவில் கொடிகட்டி பறந்தவர்தான் சில்வியா ப்ரவுன்.  இவர் எதிர்காலத்தை ஊகித்து முன்னறிவிக்கும் டுபாக்கூர்  தீர்க்கதரிசி. 

தொலைபேசியில் அழைப்பவர்களின் கேள்விகளுக்கு   குறி சொல்லும் அரை மணி நேர அப்பாயிண்ட்மெண்ட்டுகளுக்கு  750 டாலர் கட்டணத்தைக் கறக்கும் கில்லாடி அமெரிக்க பெண் எழுத்தாளர் இவர்.  ஸ்டார் ஹோட்டல்களில் தங்கிக்கொண்டே பெரு முதலாளிகள்,  சினிமாக்காரர்களின் எதிர்காலத்தைப் கணித்துக்கூறும் அரிஸ்டோகிராட் - இந்திய   ஜோசியக்கார்களெல்லாம் சில்வியா ப்ரவுனிடம் பிச்சை வாங்க வேண்டும். இவரது பெரும்பான்மை  ஊகங்கள் பொய்யானவை கற்பனையானவை என்று  அம்பலமானாலும் அமெரிக்காவின்  சாட்டிலைட் டிவிக்கள் 2013இல் சில்வியா ப்ரவுன் மரணமடையும் வரை இவரது  நிகழ்ச்சிகளுக்கு வரிந்துகட்டிக்கொண்டு  இடம் அளித்தன. 
‘வுகான் 400’
இப்போது நமக்கு தீர்க்கமாக தெரிவது என்னவென்றால்  சீனத்திற்கு எதிரான தனது சைனோபோபியா சதிப் பிரச்சாரத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்  தந்திரமாக டீன் கூன்ஸ் மற்றும் சில்வியா ப்ரவுனின்  கற்பனைகளை கையிலெடுத்திருக்கிறார் என்பது தான். 1981 ஆம் ஆண்டு டீன் கூன்ஸ் பிரசுரித்த தி ஐஸ் ஆப் டார்க்னெஸ் - அதாவது இருளின் கண்கள் என்ற புதினத்தின் ஒரு பக்கத்தில்   சீனாவின் அபாயகரமான ஒரு கிருமி ஆயுதத்தின் ரகசியத்தை  லீசென் என்ற ஒரு சீன விஞ்ஞானி அமெரிக்காவிற்கு அளித்தார். அதன் பெயர்  ‘வுகான் 400’. 

சீனாவின் வுகான் நகர ஆர்டிஎன்ஏ உயிரியல் சோதனைக் கூடத்தில் சீனர்களால் உருவாக்கப்பட்ட இந்த கிருமி ஆயுதத்தை, உலகில் எந்தவொரு நகரத்தையும் நாட்டையும் அழிக்க   சீனர்கள் பயன்படுத்தலாம் என்று  அந்த புதினம்  கூறுகிறது.  சீனாவிற்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட ஆன்லைன் சதி கோட்பாடுகளின்படி அமெரிக்க எழுத்தாளர் டீன் கூன்ஸ் 1981 இல் கொரோனா வைரஸ் பற்றி முன்னறிவித்தார். இது ஒரு கொலையாளி வைரஸைக் குறிக்கிறது. இது ஒருபுறமிருக்க  உலகளாவிய பயங்கரவாதம், தொற்றுநோய்கள், இனப்படுகொலைகளைப் பற்றி கூறும் சில்வியா ப்ரவுனின் என்ட் ஆப் தி டேஸ் ( உலகின் முடிவில் ) ஆகும். இதில் வரும் உரையாடலில்  2020 ஆம் ஆண்டில் நிமோனியா போன்ற நோய் உலகம் முழுவதும் பரவி, நுரையீரல் மற்றும் மூச்சுக் குழாய்களைத் தாக்கும் என்று உள்ளது. டீன் கூன்ஸ்,  சில்வியா ப்ரவுன் போன்றவர்களின் வாசகர்கள் தளம் அமெரிக்காவில் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளது. 

குறிப்பாக இப்புத்தகத்தை பயன்படுத்திதான் சீனாவை தனிமைப்படுத்தும் சதி பிரச்சாரங்கள்   மார்ச், ஏப்ரல் மாதங்களில் உலகம் முழுவதும் வைரலாக்கப்பட்டன.   இதுமட்டுல்ல, ஸ்காட் இசட்.பேர்ன்ஸ் எனும் எழுத்தாளர் எழுதி ஸ்டீவன் இயக்கிய காண்டேஜியன் (ஒட்டுண்ணி ) திரைப்படம், எம்இபி-1 வைரஸ் சீனாவிலிருந்து உருவாகி பரவியது என்று முடிகிறது. முன்பு கியூபாவின் மீது அமெரிக்க குற்றம் சாட்டியது. அப்போது தோழர் காஸ்ட்ரோ நம் நாட்டின் பல்லாயிரக்கணக்கான விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காகவே கற்றிருக்கிறார்கள். மற்ற மனிதர்களைக் கொல்லும் வைரஸ்களை உற்பத்தி செய்ய அல்ல என்றார். மிகக்கேவலமான அமெரிக்க பிரச்சாரம் அப்போதே படுதோல்வியடைந்தது. 

கணக்கிலடங்கா த்ரில்லர் புனைவுகள் 
இதுபோன்ற அறிவியல் புனைவு திரைப்படங்கள், வீடியோ விளையாட்டுகள் பிரமிப்பூட்டும் பொழுதுபோக்கு அம்சங்களாகவும் வியாபாரமாகவும் அமெரிக்காவில் உள்ளன. கொலைகார வைரசை உருவாக்கிய ஒரு விஞ்ஞானியின்  கதையை கூறும் பிராங்க் ஹெர்பர்ட்டின் ‘தி வொயிட் பிளேக்’  ; பெண்களைக் கூட்டங்கூட்டமாய் கொல்லத் தூண்டும்  ‘ரெக்கூனா ஷெல்டோனின் தி ஸ்க்ரூப்ளை சொல்யூசன்ஸ்’ திரைப்படம் பணிநீக்கம் செய்யப்பட்டதால்  கோபமடைந்த ஒரு விஞ்ஞானி தனது உடலில் ஒரு வைரஸை செலுத்தி வெளி உலகுக்கு கடத்தி வந்து மக்களிடம் பரப்பும்  கிரக் பியரின் ‘பிளட் மியூசிக்’ புதினம்;  ஒரு தொற்றுநோயை பரப்பும் வீரனை போன்ற கதாபாத்திர  விளையாட்டு திட்டத்துடன் உருவாக்கப்பட்ட  ‘பிளேக் இன்க்’ (என்டெமிக் கிரியேஷன்ஸ் 2012) என்ற வீடியோ விளையாட்டு -என கணக்கிலடங்கா த்ரில்லர் புனைவுகள்  அமெரிக்கர்கள் மத்தியில் பொழுதுபோக்காக மாற்றப்பட்டுள்ளன. 

இதன் விளைவாக அதீத கற்பனைகள் சாசக குணம், தற்கொலை எண்ணம் பலவீனமான தனிமனித உளவியல் மற்றும் சமூக உளவியல் இவைதான் பெரும் எண்ணிக்கையில்  அமெரிக்கர்களை ஆட்டிப்படைத்து வருகிறது.  இப்போது  கொரோனா நோய் தொற்று உருவாக்கிய அச்சம் மன அழுத்த சூறாவளியாக அமெரிக்காவில் உருவெடுத்ததற்கும் உலகிலேயே  1 லட்சத்து 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் மரணமடைந்ததற்கும் டொனால்டு டிரம்பின் தெனாவட்டும் அமெரிக்கர்களின் சமூக உளவியலும்தான். முக்கிய காரணியாகும். ஆனால் சீனாவின் மீது குற்றம் சுமத்தி சீனத்திற்கு எதிரான இன வெறுப்பை விசிறிவிடுவதன் மூலம் சர்வதேச சமூகத்தில் சீனாவை தனிமைப்படுத்த முயற்சித்து அதில் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்ததும் வருகிறார்.  

சீனத்திற்கெதிரான டீன் கூன்ஸ் - சில்வியா ப்ரவுனின் கற்பனைகள், கம்யூனிசம்- சோசலிசம்-சீனத்தின் வளர்ச்சி ஆகியவற்றிற்கு எதிரானவர்களால் இன்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வருகின்றன. இப்பிரச்சாரம் துவங்கிய சில நாட்களிலேயே இச்சதிக்கோட்பாடுகளை அடிப்படையற்றது என உலக சுகாதார அமைப்பு உறுதியாக  நிகராகரித்தது. சர்வதேச தொற்றுநோயியல் நிபுணர்கள் நோய்க்கு எந்த முகவர்களும்  இல்லை; வைரஸ்கள் தங்களால் இயன்ற இடங்களில் கண்மூடித்தனமாக பரவுகின்றன.

உலகமயமாக்கப்பட்ட நமது இன்றைய சூழ்நிலையில் கொரோனா தொற்று வி;ரைவாக பரவ வசதிகளும் வய்ப்புகளும் உருவாகியுள்ளது; கோவிட் 19 வைரஸ் ஆய்வகத்தால் உருவாக்கப்பட்டது அல்ல என்று உறுதியாக கூறுகிறார்கள். ஆனாலும் சீனாவின் கொரோனா வைரசிற்கு ஆதாரங்கள் தன்னிடம் தன்னிடம் இருப்பதாகவும் அடாவடியாக டொனால்டு டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார். இதற்கு ஐந்து காரணங்கள் உள்ளன.

சீனா மீது பழிபோடுவது எளிது
ஒன்று டிரம்ப்பின் அலட்சியத்தாலேயே  கொரோனா மரணங்கள்  உலகில் மிக அதிகமாக அமெரிக்காவில் ஏற்பட்டது என்பதை தனது அரசியல் பொருளாதார எதிரியான சீனாமீது பழிபோடுவதன் மூலம் தன்மீது உருவான அமெரிக்கர்களின்  கோபத்தையும் தகர்ந்து கொண்டிருக்கும் தனது சர்வதேச வல்லாண்மை தோற்றத்தையும் சரி செய்துகொள்ள முடியும். இரண்டாவதாக, உலகமயசந்தையின் கட்டாயங்களிலும்  பாதுகாப்பு உற்பத்தி, தொலைதொடர்பு உள்ளிட்ட கேந்திரமான தொழில்களை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு முன்னேறும் சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி தனிமைப்படுத்த வேண்டும். மூன்றாவதாக, தடுப்பூசிகளின்  உற்பத்தி மற்றும் அதன் சர்வதேச சந்தையில் மிகப்பெரும் சக்தியாக சீனா உருவெடுத்து வருகிறது.  எனவே சீனாவின் வளர்ச்சியை தடுத்து அதன் அறிவியல் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்க வேண்டும். நான்காவது அமெரிக்கா அதன் ஜி-7 கூட்டாளி நாடுகள் இப்பெருந்தொற்று நோயை சமாளிக்க முடியாமல் 2 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை பலிகொடுத்துள்ளன. ஆனால் சீனா, கியூபா, வியட்நாம் போன்ற நாடுகள் துயர்மிகுந்த நாட்களில் மக்களை காப்பாற்ற சோசலிச  கட்டமைப்பால் மட்டுமே முடியும் என்ற செய்தியை உலகிற்கு உறுதியாக தெரிவித்து நிமிர்ந்து நின்கின்றன.  கியூபாவின் சர்வதேச  சேவைகள் அந்நாட்டின் மீது புதிய மதிப்புகளையும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் புதிய நெருக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கம்யூனிஸ்ட்டுகளின்  ஆட்சியில்தான் இந்தியாவின் கேரளம் சர்வதேச ஊடகங்களில்  இடம் பிடித்தது. இந்தியாவிற்கு நற்பெயரை தேடித்தந்தது.   இவற்றை டிரம்ப் தலைமையிலான இன்றைய ஏகாதிபத்தியம் சகித்துக் கொள்ள முடியவில்லை. 

ஐந்தாவதாக, ஆசிய, மேற்காசிய, மத்திய கிழக்கு ஆசிய மற்றும் தென் சீன பிராந்தியத்தில் தொடரும் பிரச்சனைகளில் உருவாகும் பதற்றங்களும் போட்டிகளும் தான் அமெரிக்காவின் பொருளாதாரத்தை (ராணுவ ) நிலை நிறுத்த முடியும் என்பதால் சீனாவிற்கு எதிராக ஒரு கூர்மையான பனிப்போரை தொடர்ந்து நடத்திட அமெரிக்கா முடிவு செய்துள்ளது. எனவே தான், கொரோனா வைரஸ் சீனாவால் உருவாக்கப்பட்டது; அது ஒரு கிருமி ஆயுதம் என்பதை நிலை நிறுத்த அமெரிக்கா முயற்சித்து வருகிறது. ஏகாதிபத்தியத்தை தங்கள் ராஜகுருவாக ஏற்றுக் கொண்டிருக்கும் சங்பரிவார பிருகஸ்பதிகள், டிரம்ப் ஆதரவு சீன எதிர்ப்பு  வைரஸ்களை தங்கள் சமூக ஊடகங்கள் மூலம் இந்தியாவில் பரப்பி வருகிறார்கள். சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, கொரோனா வைரஸை விட  பிளவு மற்றும் வெறுப்பை விதைக்கும் “அரசியல் வைரஸ்” மிகவும் அழிவுகரமானது என்கிறார்.

கொரோனா வைரசை உலகிலிருந்து அப்புறப்படுத்த நாடுகளுக்கிடையே நம்பிக்கையும் கூட்டு முயற்சிகளுமே தேவை. வெறுப்பை விதைக்கும் பிரச்சாரங்களல்ல. டெனால்டு டிரம்பும்  அவரது சித்தாந்த இந்திய சீடர்களும் இதை உணர்வார்களா? 

=== சுஜித் அச்சுக்குட்டன்===

;