tamilnadu

img

சம காலத்தின் கலகக் குரல் - ‘திருடன் சரண்தாஸ்’

1980 களில் சத்தீஷ்கர் மாநிலத்தைச் சேர்ந்த  ஹபீப் தன்வீர் எழுதி  இந்தியாவெங்கும் புகழ்பெற்ற மேடை நாடகமான - “சரண்தாஸ் சோர் “ என்கிற நாடகத்தைத் தமிழில் முதன் முறையாகக் கொண்டு வந்துள்ளார் பேராசிரியர் பார்த்திபராஜா.  நாட்டுப்புற கிராமியக் கலைஞர்கள் பங்குபெற்ற வீதிவிருதுகள் வழங்கும்விழா சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது.  அதன் ஒரு பகுதியாக அமைந்த இந்த நாடகத்தைக் காண பெரும் திரள் கூடியிருந்தது.  வெட்ட வெளியில் பல இடர்களுக்கு மத்தியில் நாடகத்தை  சிறப்பாக நடத்திக் காண்பித்தார் பேராசிரியர் பார்த்திபராஜா .

தன்வீரின் ஆங்கிலப் பிரதியைப் (முதலில் சத்தீஸ்கரி மொழியில் எழுதப்பட்டது?) படித்தவன் என்ற முறையில் சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன். கதையின் சுருக்கம். சரண்தாஸ் என்பவன் போலீசால் துரத்தப்படும் ஒரு திருடன். இவன் ராபின்`ஹூட் போல,  இருப்பவர்களிடம் கொள்ளை அடித்து இல்லாதவர்களிடம் கொடுப்பவன். இரக்ககுணம் உடையவன். ஆனால் இவனுக்கு ராபின் `ஹூட் போல கூட்டாளிகள் இல்லை. தனி மனிதன்.  வழியில் ஒரு போலி சாமியாரிடம் தானாக முன்வந்து  அளித்த நான்கு சத்தியங்களுக்காக, அவன் எதுவெல்லாம் செய்ய வேண்டும் என்று உறுதிகொண்டிருந்தானோ அதுவெல்லாம் கிடைத்தும் அவன் சத்தியம் வழி நிற்கிறான். சமகால திருடர்களை ஒப்பிடும்போது அவன் முற்றிலும் மாறுபாடான நேக்கம் கொண்டவன். அதிகாரத்தைத் தனது நேர்மையால், எளிமையால் நயப் புடைக்கும் ஒரு கலகக் குரல்.  மொத்தத்தில் சரண்தாஸ் ஒரு “நல்ல” திருடன்.

தன்வீரின் இந்த நாடகம் ஒரு ராஜஸ்தானி நாட்டுப்புற கதையை மையமாக வைத்து எழுதப்பட்டது. பிரதியிலிருந்து மேடைக்கு மாற பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டார் தன்வீர். முதலில் மேடை நாடகக் கலைஞர்களை நடிக்க வைத்து அதில் தோல்வி அடைந்தார். பின்னர் சத்தீஷ்கரி நாட்டுப்புறக் கலைஞர்களின் தொடர் முயற்சியின் மூலம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. நாட்டுப்புற கலைஞர்களின் நடிப்பு, வசனம் ஊடாக தன்வீர் சில மாற்றங்களை மட்டுமே செய்தார். 
கதை சரண்தாசை சுற்றியே நடந்தாலும் பதினைந்துக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை கதைக்குள் காட்ட வேண்டும். தன்வீர் கச்சிதமாக இதை செய்திருப்பார். பார்த்திப ராஜாவும் இதில் சளைத்தவரில்லை. தன்வீர் அவர்களின் பிரதிக்கு உண்மையாக இருந்தது தமிழ் நாடகப்பிரதி. மேடைக் குறிப்புகளை  முழுமையாகப் பின்பற்றி இருந்தது. தமிழ் நாடகத்தில் நடித்த அத்தனை நடிகர்களுமே மிகச் சிறப்பாக நடித்தார்கள். முக்கியமாக சரண்தாஸ் வேடத்தில் நடித்தவர்.ஆனால் எனக்கு என்ன வியப்பென்றால் ஏன் விவசாயி, கிராமத்துப் பெண், சாதாரன மனிதர்கள் கதாப்பாத்திரங்களில் நடித்தவர்கள் சுத்தத் தமிழில் பேசினார்கள் என்பதே. சரன்தாஸ் கதாபாத்திரமும் சில இடங்களில் தமிழை சுத்தமாகவும் சில இடங்களில் சமகாலத் தமிழில் பேசுவதுமாக இருந்தது. தன்வீரைப் போலவே இந்தத் தமிழ் நாடகத்திற்கும் மேம்படுத்தல் தேவை என்று நினைக்கிறேன். 

இந்த நாடகத்தின் முக்கிய அம்சம் கதையின் இடையில் வரும் பாடல்கள் தான். நேர்மை, சத்தியத்தை வலியுறுத்தும் குரல்கள். சாதாரண திருடன் ஆன சரண்தாசை ஒரு துன்பியல் கதாபாத்திரமாக மாற்றுபவை இவையே. பார்த்திபராஜா அவர்கள் தமிழாக்கம் செய்த பாடல்களுக்குள் நம் சமகால அரசியலை உள் நுழைத்திருக்கும் உத்தி பாராட்டத்தக்கது. பாடியவர்களும் அபாரம். பார்வையாளர்கள் பெரும்பாலும் கிராமியக் கலைஞர்கள்;  அவர்கள் நாடகத்தை வெகுவாக ரசித்தனர்.
அதிகாரத்தின் பிடியில் சரண்தாஸ் சிக்கும் போது கலக்கமும் அதிலிருந்து வெளிவந்து விடுவான் என்ற நம்பிக்கையும் அவர்களை சுமார் ஒன்றே முக்கால் மணி நேரம் கட்டிப் போட்டுவிட்டது. ராணி கதாப்பாத்திரத்துடன் அவன் உரையாடல் கதையின் உச்சம். சரண்தாசின் பேச்சிற்குக் கிடைத்த  கைதட்டல்களும் விசில்களுமே இதற்கு சாட்சி. சாமியாரின் இருப்பு  சமகாலத் தன்மையை நினைவூட்டி மக்களை சிரிக்க வைத்தது. மேடை நாடகமாக ஒத்திகைப் பார்த்திருந்தாலும்  ஒரு மூன்றாம் அரங்கு போலவே நாடகம் நடைபெற்றது. அரங்கப் பொருட்களும் ஒப்பனைகளும் அற்புதம். திடீரென இடமாற்றம் செய்யப்பட்ட தால் சில தொழில் நுட்பக் கோளாறுகள் இருந்தன. இருப்பினும் வெற்றிகரமாக நடத்தினார்கள்.

இதுவரை பெரிய பெரிய மன்னர், மகாராணி கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு சரண்தாஸ் ஒரு புதிய விருந்து. அவன் மக்களுள் ஒருவன். தான் ஒரு திருடன் என்பதை எங்கு வேண்டுமானாலும் நேர்மையாகச் சொல்கிறான். திருடன் என்ற இழி பட்டம் அவனுக்கு ஏற்பாகாது. உயிரே போனாலும் நேர்மை, சத்தியத்தின் வழி நிற்பவன். நம்முள் ஒருவன். உலகம் முழுக்க சரண்தாசின் கலகக் குரல் தமிழில் பயணிக்க இருக்கிறது. சத்தீஸ்கரி கதை தமிழ் நாடகமாகவே மாற்றம் அடைந்து விட்டது-பார்த்திபாராஜாவால்.

;