tamilnadu

img

செங்கொடி இயக்க வீரத்தளபதி... தியாகி என்.வெங்கடாசலம்

தஞ்சை தியாகி என்.வி என்று அன்புடன் போற்றப்படும், தோழர் என். வெங்கடாசலம் அவர்கள் ஒன்றாக இருந்த தஞ்சை மாவட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக, தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் தலைவராக தொண்டாற்றியவர். எண்ணற்ற போராட்டங்களை தலைமையேற்று நடத்தி வெற்றி கண்டவர். சிறை வாழ்க்கை, தேசிய பாதுகாப்பு கைதியாக கடலூர் மத்திய சிறையிலும், அவசர காலத்தின் போது மிசா கைதியாக திருச்சி சிறையிலும் இருந்தார். சிறையில் இருந்தபோது ஊராட்சி மன்ற தலைவர்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது மக்கள் மத்தியில் இன்றும் பேசப்படுகிறது. 

எங்கு தாழ்த்தப்பட்ட மக்கள் பாதிக்கப் பட்டாலும் அங்கு அவர்களுக்கு ஆதரவாக அவர் இருந்தார். 1951 ஆம் ஆண்டின் இறுதியில் சுதந்திர இந்தியாவின் முதலாவது பொதுத் தேர்தலுக்கான தயாரிப்புகள் துவங்கிய போது தமிழகத்தில் திராவிடர் கழகத்திற்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும்இடையே தேர்தல் உடன்பாடு ஏற்பட்டது. தஞ்சை சட்டமன்ற தொகுதியில் கம்யூனிஸ்ட்கட்சி வேட்பாளராக தோழர் எஸ்.ராமலிங்கம் நிறுத்தப்பட்டார். .திராவிடர் கழகமும், திராவிட முன் னேற்றக் கழகமும் ஆதரித்த இத்தேர்தலில் பணியாற்றும்படி என். வெங்கடாசலம் அவர்களை, தஞ்சை கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான ஆறுமுகசாமி அவர்கள் இராயமுண்டான்பட்டிக்கு நேரில் சென்று கேட்டுக்கொண்டார். தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்ட என். வெங்கடாசலம் வாழ்க்கையில் தேர்தல் பணி பெரும்திருப்புமுனையாக அமைந்தது. கம்யூனிஸ்டுகள் லட்சியமும் அவர்களின் மகத்தான தியாகங்களும் மக்களுக்காக அவர்கள் பாடுபடுவதும் சாதி மத வேற்றுமைபாராமல் அனைவரையும் சமமானவர் களாக கருதும் போக்கும் வெங்கடாசலத்தை கவர்ந்திருந்தன. தஞ்சையில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும், ஊழியர்களும் இடைவிடாது அவரை கட்சிக்கு கொண்டு வர முயற்சி செய்தனர். மார்க்சிய நூல்கள், கட்சி பிரசுரங்கள் போன்றவற்றை அவருக்கு கொடுத்தனர். அவரும் விடாது படித்து வந்தார். இந்நிகழ்ச்சி போக்குகள் வளர்ச்சி மாற்றங்கள் அனைத்தின் விளைவாக அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். கம்யூனிஸ்ட் ஊழியராக தன் பணியைதொடங்கிய வெங்கடாசலம், தன் நேரம் முழுவதையும் ஏழை எளிய மக்களுக்காகவே, குறிப்பாக அடித்தட்டு மக்களுக்காக, சாதியகொடுமைகளால் மிதியுண்டு கிடந்த தாழ்த்தப்பட்ட மக்களை தலைநிமிர வைப்பதற்காகவே செலவிட்டார். 

தீண்டாமையை வெறும் சமூக சீர்திருத்த பிரச்சனையாக மட்டும் பார்க்காமல், அது வர்க்கப் பிரச்சனையாகவும் பார்த்து, அவர்களுக்கு சமூக நீதி கிடைப்பதற்கும், தீண்டாமை கொடுமைகளை ஒழிப்ப இணைத்து நடத்தினார். விவசாயிகள் சங்கத்தை உருவாக்கி குத்தகை விவசாயிகள் நிலத்திலிருந்து வெளியேற்றப்படுவது தடுத்து நிறுத்தும் போராட்டங்களை முன்னெடுத்து வெற்றி கண்டார். விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை வட்ட மாநாடு 1952 ஆம் ஆண்டில் நெடாரில் நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு தினத்தந்தி பத்திரிகையின் அதிபர் சி. பா. ஆதித்தனார் தலைமை வகித்தார். அம்மாநாட்டில் என்.வெங்கடாசலம் உப தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். குத்தகை விவசாயிகள் குத்தகையை குறைப்பது, விவசாய உரிமைகளை பாதுகாப்பது போன்ற பணிகள் பிரதானமாக இருந்தது. நிலவுடைமையாளர் கள் குத்தகை பாக்கிக்காக ரெவின்யூ கோர்ட்டு மூலம் விவசாயிகளை நிலத்தை விட்டு வெளியேற்ற முயற்சிப்பார்கள். விவசாய சங்க தலைவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி விவசாயிகளுக்காக வாதாடுவார்கள். அத்தகைய வழக்குகளில் ஒன்றில் என்.வெங்கடாசலம் வழக்கறிஞராக வாதாடிய சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்தது.

குத்தகைதாரரைப் பாதுகாக்க
1958 - 59 ஆம் ஆண்டில் சென்னையில் உயர் அரசு அதிகாரியாக பணியாற்றும் ஒருவர், தஞ்சை மாரியம்மன் கோவிலுக்கு கீழ்புறம் இருந்த குத்தகையாளரை வெளியேற்ற முயன்றார். அவருடைய குடும்ப நிலம் அவருடைய பெயரிலும், அவர் மனைவி பெயரிலும் பிரித்து வைக்கப் பட்டிருந்தது. இரண்டு நிலங்களையும் சேர்த்துப் பார்த்தால் 6.2/3 ஏக்கருக்கு அதிகமாக இருந்தது. இந்த அளவிற்கு கீழ் இருந்தால் தான் வெளியேற்ற முடியும். எனவே, அந்த அதிகாரி தனது மனைவி நிலத்தை கணக்கில் சேர்க்காமல், தனது நிலத்தை மட்டும் காண்பித்து விவசாயியை வெளியேற்ற முயன்றார். நீதிமன்றத்தில் பிரச்சினை விவாதத்திற்கு வந்தபோது என். வெங்கடாச்சலம் அரசு அதிகாரியை விசாரித்தார். “உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா, குழந்தைகள் உண்டா, உங்கள் மனைவி எங்கு உள்ளார்” என்று கேட்கிறார்.அதிகாரி திகைத்துப் போய், “இது சட்டவிரோத கேள்வி என்கிறார்” “சட்டபூர்வமான கேள்விதான் பதில் கூறுங்கள் என்ற என். வெங்கடாசலம்,” இது தேவையான கேள்விதான்” என மீண்டும் கேட்டார். அதிகாரி, “என்னுடன் தான் இருக்கிறார்” என்றார். நீதிபதியைப் பார்த்து வெங்கடாசலம் கூறுகிறார். “இவர் அரசு ஊழியர். சென்னையில் வேலை செய்கிறார். இவர் மனைவியும் இவருடன் இருப்பதாக கூறுகிறார். இவர்கள் இருவர் நிலத்தையும் சேர்த்தால் அது 1952 ஆம் வருடத்தில் தஞ்சைக்கு மட்டும் இயற்றப்பட்ட சாகுபடி பாதுகாப்புச் சட்டம், 1955 ஆம் ஆண்டு மாநில சாகுபடியாளர் பாதுகாப்புச் சட்டம், 1956 ஆம் ஆண்டு நியாய வாரச்சட்டம் ஆகிய மூன்றின் படியும் அதிக நிலமாகும். அதன்படி 6. 2/3 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள், தங்கள் நிலத்தில் சாகுபடி செய்யும் குத்தகைதாரரை வெளியேற்ற முடியாது. ஆகவே குத்தகைதாரரை வெளியேற்றுவது என்பது குத்தகை வாரச் சட்டத்திற்கு புறம்பானது “என்று வாதாடினார். என். வெங்கடாசலத்தின் கருத்தை ஏற்ற நீதிபதி,” விவசாயியை, நிலத்தை விட்டு வெளியேற்றக் கூடாது”என உத்தரவிட்டார். இது போன்று பல கிராமங்களில், இது போன்ற பல்வேறுபிரச்சனைகளில், விவசாயிகள் நலன் காக்க, ரோட்டிலும், கோர்ட்டிலும் போராடியவர் என்.வெங்கடாசலம். 

பஞ்சாயத்து தலைவராக தொடர்ந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டார். அவர் தலைமையில் பஞ்சாயத்து நிர்வாகம் மிகச் சிறப்பாக செயல்பட்டது என்பதை மக்கள் இன்றும் நினைவு கூறுவார்கள். குடிநீர் வசதி, பள்ளிக்கூடம் தரம்உயர்த்தப்பட்டது, சாலை வசதிகள், கால் நடை மருத்துவமனை, கூட்டுறவு நாணய சங்கம், நூலகம், வீட்டுமனை, புறம்போக்கு நிலங்களை நிலமற்ற ஏழைகளுக்கு பகிர்ந்தளித்தது போன்ற எண்ணற்ற பணிகளை குறிப்பிடலாம். 
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சம வாய்ப்பும்,மரியாதையும் அளித்து தலைநிமிர வைத்தவர். இவரது செயல்பாடுகள் மனங்களில் நீங்கா இடம் பெற்றுள்ளன. தாழ்த்தப்பட்ட மக்கள், சாதி இந்துக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு செல்லும் போது, காலில் செருப்புப் போட்டுக் கொண்டு செல்லக்கூடாது. குடைபிடித்து செல்லக்கூடாது. சைக்கிளில் செல்லக் கூடாது. தோளில் துண்டு போடக் கூடாது. ஊர் பொது மந்தையில் பொங் வைக்கக்கூடாது போன்ற சமூக ஒடுக்கு முறைகள் இருந்தன. இவைகளை வெங்கடாசலம் அவர்கள் முற்றிலும் ஒழித்துக் கட்டினார். 

கிராமத்து மக்களுக்கு மீன்பிடி உரிமை, கோயில்களில் பங்கு போன்ற மறுக்கப்பட்டு வந்த உரிமைகளை நிலைநாட்டினார். கூலி உயர்வுக்காக குத்தகை விவசாயிகளை பாதுகாப்பதற்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் குடிமனைக்காக, சுடுகாட்டு பாதைக் கான நிலத்திற்காக போராடினார். அவர் வாழ்வே போராட்டமாக மாறியது. மக்கள் மனங்களில் என்றென்றும் வாழும் மக்கள் தலைவராக திகழ்ந்தார். இதை பொறுக்க முடியாத எதிரிகள் 1977 செப்டம்பர் 21-ஆம் நாள், அவர் சோலகம்பட்டி ரயில் நிலையத்தில் இருந்துவீட்டுக்கு வரும் வழியில், கடத்திக் கொண்டுபோய் கொலை செய்து, எரித்து சாம்பலாக்கிவிட்டார்கள். எதிரிகள் அவர் தொலைந்தார்என தவறாக கணக்கு போட்டார்கள். ஆனால் தியாகி என்.வி இன்றும் நம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். செங்கொடி இயக்கத்தின் வீரம் செறிந்தஅத்தியாயங்களில் தோழர் பி . சீனிவாசராவ் காலம் தொட்டு, தஞ்சை மண்ணை சிவக்க செய்த, செங்கொடி இயக்கத்தின் வீரப்புதல்வர்கள் சரித்திரம் என்றும் போராட்டத்தினால் நீடித்திருக்கும். அப்படிப்பட்ட செங் கொடி இயக்கத்தின் வீரத்தளபதி தியாகி என். வெங்கடாசலம் நினைவை போற்றுவோம்.

==ஆர்.மனோகரன், சிபிஐ(எம்) மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தஞ்சாவூர்===

;