tamilnadu

மின்சாரம் தாக்கி  தந்தை, மகன் பலி

தென்காசி, ஜூன் 6- கடையநல்லூரில் மின்சாரம் தாக்கி தந்தை, மகன் பரிதாபமாக இறந்தனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பாரதியார் வடக்கு தெருவை சேர்ந்த கணபதி மகன் சுப்பையா கோனார் (79). இவரது மகன் முத்துராஜ் (30 ). வெள்ளிக்கிழமை இரவு முத்துராஜ் தனது வீட்டின் அருகே உள்ள டிராக்டர் செட்டில் மோட்டார் போட்டு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்பொழுது மோட்டார் அருகே உள்ள கம்பி வலையில் மின்சார ஒயர் அறுந்து கிடந்துள்ளது . எதிர்பாராமல்  அந்த வலையில் முத்துராஜ் கைவைத்து உள்ளார். அப்போது   அவர் மீது மின்சாரம் பாய்ந்து  சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்,குளிக்கச் சென்ற மகன் நீண்ட நேரமாகியும் வரவில்லை என மகனை தேடி தந்தை சுப்பையா கோனார் தனது நண்பரை அழைத்துக்கொண்டு டிராக்டர் செட்டுக்கு சென்றுள்ளார்.

 அப்பொழுது மகன்  கீழே கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து ஓடிச்சென்று தூக்கி உள்ளார்.  அப்போது தந்தையின் மீது மின்சாரம் பாய்ந்து  சம்பவ இடத்திலே பலியானார். சுதாரித்துக் கொண்ட நண்பர்  உடனே அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் சொல்லி  மின்சாரத்தை துண்டித்து தந்தையையும் மகனையும்  பிணமாக மீட்டார்.  இதுகுறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின்  உடல்களை மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு  உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து  விசாரணை  நடத்தி வருகின்றனர்.ஒரே குடும்பத்தில் தந்தையும் மகனும் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.