tamilnadu

img

தூத்துக்குடி வஉசி துறைமுகம் 36.08 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை

தூத்துக்குடி:
வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2019-20ம் நிதியாண்டில் 36.08 மில்லியன் டன் சரக்குகளையும் 8.04 இலட்சம் டியுஇ சரக்குபெட்டகங்களையும் கையாண்டுள்ளது

இது தொடர்பாக துறைமுகசபை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு : வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கடந்த நிதியாண்டு 2019-20-ல் 36.08 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. 2018-19 நிதியாண்டில் கையாளப்பட்ட 34.34 மில்லியன் டன் சரக்குகளை விட 5.05 சதவிகிதம் விழுக்காடு அதிகமாக கையாண்டு சாதனை படைத்துள்ளது. இறக்குமதியை பொருத்தவரையில் 25.82 மில்லியன் டன்களும் (71.57%) ஏற்றுமதியை பொருத்தவரையில் 10.25 மில்லியன் டன்களும் (28.41%)  கையாண்டது. இதில் 0.01 மில்லியன் டன் சரக்குபரிமாற்றம் (0.02%) என்பது குறிப்பிடத்தக்கது. கப்பல் துறைமுக அமைச்சகம் நிர்ணயம் செய்த அளவான 36.00 மில்லியன் டன் சரக்கினை கடந்து சாதனை படைத்துள்ளது.

மேலும் துறைமுகம் சரக்குபெட்டகங்கள் கையாளுவதில் 2019-20ம் நிதியாண்டில் 8.03 இலட்சம் டி.இ.யுக்களை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையானது கடந்த நிதியாண்டு கையாண்ட அளவான 7.39 டியுக்களை ஒப்பிடுகையில் 8.72 சதவீதம்  கூடுதலாகும். 2019-20ம் நிதியாண்டில் கையாளப்பட்ட சரக்குகளுடன் 2018-19ம் நிதியாண்டில் கையாளப்பட்ட சரக்குகளை ஒப்பிடுகையில் துறைமுகத்தில் சரக்கு பெட்டகங்கள் 8.72 விழுக்காடு (8.03 இலட்சம் டிஇயு), தொழிலக கரி 29.54 விழுக்காடு (60.12 இலட்சம் டன்கள்), கால்நடை தீவனம் 225.40 விழுக்காடு (2.97 இலட்சம் டன்கள்), கந்தக அமிலம் 79.44 விழுக்காடு (4.63 இலட்சம் டன்கள்) மற்றும் ராக் பாஸ்பேட் 32.84 விழுக்காடு (5.44 இலட்சம் டன்கள்) கூடுதலாக கையாண்டுள்ளது. வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தால்  2019-20ம் நிதியாண்டில் 1447 கப்பல்கள் கையாளப்பட்டுள்ளது. 2018-19 நிதியாண்டில் கையாளப்பட்ட 1370 கப்பல்களை ஒப்பிடுகையில் 5.62 சதவிகிதம் கூடுதலாகும்.

நிதிநிலை செயல்பாடு
வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 2019-20ம் நிதியாண்டு இயக்க வருவாய் ரூபாய் 625.08 கோடி (2018-19 நிதியாண்டு இயக்க வருவாய் ரூபாய் 519.50 கோடி) ஆகும். 2019-20 நிதியாண்டு இயக்க உபரி வருவாய் ரூபாய் 375.75 கோடி (2018-19 ம் நிதியாண்டு இயக்க உபரி வருவாய் ரூபாய் 252.34 கோடி) ஆகும். 2019-20ம் நிதியாண்டு வரி பிடித்ததற்கு பின்பு உள்ள நிகர உபரி வருவாய் ரூபாய் 161.05 கோடி (2018-19 நிதியாண்டு வரி பிடித்ததற்கு பின்பு உள்ள நிகர உபரி வருவாய் ரூபாய் 45.13 கோடி) ஆகும். துறைமுகத்தின் இயக்க விகிதாச்சாரமான 39.89இந்திய துறைமுகங்களில் சிறந்தது என்பது குறிப்பிடதக்கது.

திட்டங்கள்
வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2019-20 நிதியாண்டில் ரூபாய் 438.61 கோடி செலவில் சரக்கு தளம் 9-ஐ சரக்குபெட்டக முனையமாக மாற்றும் திட்டம் மற்றும் ரூபாய் 269.06 கோடி செலவில் மொத்த சரக்குகளை கையாளுவதற்கு வடக்கு சரக்கு தளம்-3-ஐ இயந்திரமாக்கல் ஆகிய திட்டங்களை பொது தனியார் கூட்டமைப்பின்கீழ் செயல்படுத்த உள்ளது. வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில்; கோரம்பள்ளம் பாலத்தினை 4வழிச் சாலையிலிருந்து 6வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணி ரூபாய் 41.55 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. மேலும் துறைமுகத்திலிருந்து வெளி செல்லும் அனைத்து சரக்குபெட்டகங்களையும் கண்காணிக்கும் வசதி (Drive through container scanner) ரூபாய் 46.25 கோடி செலவில் திட்டம் நடைபெற்று வருகிறது.

நிலையான தீயணைப்பு அமைப்பை மறுசீரமைப்பிற்காக ரூபாய் 17.49 கோடி செலவிலும் உப்பு நீரை நன்னீராக்கும் ஆலை ரூபாய் 143 கோடி செலவிலும் செயல்படுத்த உள்ளது. அனைத்து பெருந்துறைமுகங்களுக்கும் முன் உதாரணமாக பசுமை ஆற்றல் திட்டத்தை செயல்படுத்தும் வண்ணம் 140 கிலோவாட் திறன் கொண்ட சூரிய மின் ஆலை மற்றும் 5 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய கூடிய நிலப்பரப்பில் காற்றாலை அமைக்கப்பட உள்ளது. துறைமுகத்தில் தொழிற்சாலைகள் அமைய பெறுவதற்கு 702 ஏக்கர் நிலப்பகுதியை துறைமுகம் ஒதுக்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக 275 ஏக்கர் நிலப்பரப்பினை ஒதுக்குவதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டதில் 2 நிறுவனங்கள் சமையல் எண்ணெய் சுத்திகரிக்கும் ஆலை அமைப்பதற்கான ஆணைகள் விரைவில் வழங்கபட உள்ளது.

வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் ராமச்சந்திரன் இந்த சாதனையை படைக்க காரணமாக இருந்த அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அயராது உழைக்கும் தொழிலாளர்கள் அனைவரையும் பாராட்டியதுடன் தனது நன்றிகளையும் தெரிவித்து கொண்டார். .உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

;