புதுதில்லி,ஜூலை 16- தமிழகத்தில் கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற அஞ்சல் துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், இனி மாநில மொழிகளிலும் தேர்வு நடத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அஞ்சல் துறையில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் இனிமேல் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடைபெறாது எனவும், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே எழுத வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதனால் தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள இளை ஞர்கள் பாதிக்கப்படுவார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த இந்தி திணிப்பு நடவடிக்கையை வன்மை யாக கண்டித்தன.
மேற்கண்ட உத்த ரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென மத்திய பாஜக அரசை கேட்டுக் கொண்டன. இந்நிலையில் ஜூலை 16 (செவ்வா யன்று) மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி மாநிலங்களவையில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன்(சிபிஎம்), டி. ராஜா (சிபிஐ), திருச்சி சிவா(திமுக), நவநீத கிருஷ்ணன்(அதிமுக) உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். இதனால் மாநிலங்களவை ஒருமணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் 12 மணிக்கு கூடியது. அவை கூடியவுடன் மீண்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு 2 மணிக்கு கூடியது. அவை கூடிய வுடன் மத்திய சட்டஅமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பிரதமர் சார்பாக ஓர் அறிவிப்பை வெளியிட்டார். ஏற்கெனவே அஞ்சல் துறையில் நடத்தப்பட்ட போட்டித்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுமென வும், இனிமேல் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படுமெனவும் அவர் அறி வித்தார்.
அவருடைய உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய சிபிஎம் மாநிலங் களவைக்குழுத் தலைவர் டி.கே.ரங்கராஜன், மேற்கண்ட அறிவிப்புக்கு பிரதமருக்கும், அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், அதே நேரத்தில் இதேபோல் பாதுகாப்பு, ரயில்வே உள்ளிட்ட இதர துறைகளி லும் நடத்தப்படும் போட்டித்தேர்வுகள் அனைத்தும் பிராந்திய மொழிகளிலும் நடத்த வேண்டுமென வலியுறுத்தினார். இதே கோரிக்கையை எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்தினர். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தெரிவித்த கடுமையான கண்டனங்கள் காரணமாகவே பாஜக அரசு அஞ்சல் துறையில் பிராந்திய மொழிகளிலும் போட்டித்தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்க வேண்டிய நிலைமை ஏற் பட்டுள்ளது. இது தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரின் ஒட்டுமொத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.